விசாரணையும்… அசுரனும்.... - மு.சிவலிங்கம்

 ஊரடங்கு சட்டம்... வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இந்த விமர்சனக் கட்டுரை!

விசாரணையும்… அசுரனும்....

பல பிரபல்யமான இலக்கியவாதிகளின் நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டன.. சில படங்களே வெற்றியடைந்தன. கல்கியின் பார்த்தீபன் கனவு¸ கள்வனின் காதலி¸ தி.ஜானகிராமனின் மோகமுள்¸ அகிலனின் பாவை விளக்கு¸கொத்தமங்களம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்¸ மகரிஷியின் புவனா ஒரு கேள்வி குறி¸ ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள்¸ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்¸ போன்ற இன்னும் சில படங்களை சொல்லலாம். இன்று ஆட்டோ ஓட்டுனராகத் தொழில் புரியும் நாவலாசிரியர் மு.சந்திரகுமார் “லாக்கப்" நாவலை எழுதியிருக்கிறார்அரசாங்கங்கள் வரம்பு மீறிய அதிகாரங்களை பொலீஸ் திணைக்களங்களுக்கு கொடுப்பதும் பொலீஸ்காரர்கள் அப்பாவிகளின்மேல் நடத்தும் அராஜகங்கள் கொடுரமான சித்திரவதைகள்.. கண்டுபிடிக்க முடியாத கொலை..கொள்ளை வழக்குகளை அப்பாவிகளை வைத்து நடத்தி முடிப்பதும் போன்ற பொலிஸ் பயங்கரவாதம் பற்றிய கதை... புத்தகம் வெளிவந்த போதே பலரின் கவனத்தையும் கவர்ந்தது. "விசாரணை" என்ற பெயரில் 'லாக்கப்" நாவல் வெற்றிமாறனின் நெறியாளுகையில் வெற்றிப் படமாகியது. தமிழ் சினிமாவே பாராட்டி மகிழ்ந்தது. எழுத்தாளர் சந்திரகுமார்.. “அரசியல் தெரியாமல் இலக்கியம் படைக்க முடியாது..அரசியல் இல்லாமல் இலக்கியம் எடுபடாது" என்ற நிலைப்பாடு கொண்டவர். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன்
கூட்டுக்குப்பின்னர்..

நாவலாசிரியர் பூமணி எழுதிய "வெக்கை: நாவலையும் வெற்றிமாறன் “அசுரன்" என்ற பெயரில் படமாக்கினார். படம் பெரும் வெற்றியைக் கண்டது.இப்படத்தின் மூலம் என்டடெயின்மன்ட் நடிகராகவே பாவிக்கப் பட்ட தனுஷை மிகப் பெரும் குணச்சித்திர நடிகராக வெளியில் கொண்டு வந்ததில் வெற்றிமாறனும் வெற்றிடைந்தார்.

தனுஷும் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர் மத்தியிலும் வியப்படையும் வகையில் பாராட்டப்பட்டார். அசுரன் கதை தமிழ்நாட்டில் சக மனித இனத்தைச் சேர்ந்தவனை சாதியால் தாழ்த்தி அவன் வாழுகின்ற நிலத்தையும் பறித்துக்கொள்ளும் “மேட்டுக்குடிகள்' என்போரின் ஆதிக்கத்துக்கெதிராக எழுச்சிக்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாகும்..உலகத்திலேயே இந்தியா என்ற ஒரேயொரு நாடுதான் மனித இனத்தில் சாதி என்ற.. ஒரு வேற்றுமையை உண்டாக்கி.... அவமானப்படுத்தி.. துன்பப்படுத்தி ஒருபிரிவு மனித இனத்தை வாழ விடாமல் கொரோனா வைரஸைப் போன்று அழிக்க முடியாத சக்தியாக இருந்து வருகின்றது....சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்குவதற்கு முன் வரும் தீய சக்திகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எதிர் நிலைப்பாட்டை மிகத் துணிச்சலோடு இப்படம் காட்டியுள்ளது.

நாவலாசிரியனின் கருத்து நிலை வழுவாமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதி திமிர் கொண்ட ஒருவன் செருப்பணிந்து பாடசாலைக்குச்சென்ற மாணவியை அடித்து உதைத்து அவள் செருப்பைக் கழற்றச்செய்து அவள் தலையில் சுமக்கச் செய்து தெருத் தெருவாக இழுத்துச்செல்கிறான். அவள் செருப்பணிவதால் அவளுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று அச்சிறுமியை மிரட்டுகின்றான். தகவல் அறிந்த தனுஷ் அவனையும் அவனது கூட்டத்தினரையும் அடித்து நொறுக்கும் சண்டை காட்சியை மக்கள் ஆரவாரம் செய்து ரசிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது. !. என் அனுபவத்தில் சினிமா சண்டையை எம்ஜியாருக்குப்பிறகு இந்தப் படத்தில்தான் ரசித்தேன்!

சாதிக்கொடுமைகளுக்கு எதிராக சண்டையும் சில சந்தர்ப்பங்களில் கொலையும் கூட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் அறியக் கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறான இலக்கியப் படைப்புக்கள் சினிமா ஊடகத்துக்குள் வெற்றிமாறன் போன்ற சமூகவாதிகளினால்தான் கோலோச்ச முடியும்.. இப்படங்களின் காரணகர்த்தாக்களான மு.சந்திரகுமார்.... பூமணி... தனுஷ்.. வெற்றிமாறன் ஆகிய அனைவருக்கும் மக்களுக்கான சினிமாவை நேசிப்பவர்களின் பாராட்டுக்கள்...!

-மு.சிவலிங்கம்


கருத்துகள் இல்லை: