சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 மீண்டும் பனை முளைக்கும்?
-மு.சிவலிங்கம்


வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார். 

செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது. 


கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள்... நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப் போய் முடிவது...? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித் தெருவுக்குள் நுழைவது...?


 “வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா...?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்க விருக்கும் கூட்டம் இவரது பின்னால் நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம் தயங்கித் தயங்கி நின்றுக் கொண்டிருந் தார்கள். 


மேலும் படிக்க....

கேட்டிருப்பாயோ காற்றே...! 

- மு.சிவலிங்கம்


இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து, தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது... இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து, அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன... 


அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும் போதுதான் சுய உணர்வு வந்தது... நடப்பது உண்மை சம்பவமே என்று... விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்... 


சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... இனி... தமிழர்களோடும் சேர்ந்து வாழ நினைத்த நம்பிக்கை அற்றுப் போனதாய் அவர் மனம் விரக்தியடைந்தது. கடைசி காலத்தில் இனத் தோடு இனமாய் சேர்ந்து வாழலாம்... என்ற நப்பாசையும் இன்றோடு விட்டுப் போனது... 


***

வேலாயுதம் மாஸ்டர் காலி மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தில் அடிப்பட்டு, கட்டியத் துணியோடு மனைவி, மக்களை இழுத்துக் கொண்டு, செட்டிக்குளத்துக்கு வந்துச் சேர்ந்தவர். குருவி மாதிரி நாற்பது வருசங்கள் உழைத்துச் சேமித்தப் பணத்தில் வீடு கட்டி, தோட்டம், துறவு தேடி, இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் வளர்த்தெடுத்த இறுமாப்பில் வாழ்ந்துக் கொண்டிருந்த போதுதான் 77ம் ஆண்டு ஆடிக் கலவரம் முதற் கட்டத்தை ஆடி முடித்தது... 


இரவு ஏழு மணி கூட ஆகவில்லை. 


மாஸ்டர் வீட்டுக் கதவு உதைக்கப்பட்டது... பின்னர் உடைக்கப்பட்டது... பெற்ரோல் கேனை வீட்டுக்குள் விசிறினான் ஒருவன்... 



மேலும் படிக்க....

 உத்தியோகம் புருஷ லட்சணம்..? 

-மு.சிவலிங்கம்


அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை . சமுதாயத்தில் சக மனிதனிடம் கையேந்தி வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத் தாழ்ந்து வீழ்வதற்கு ஒரு பிரஜையின் நிலைமை ஏன் மாறுபடுகின்றது...? பிச்சைக்காரர்களாக ஒரு பிரிவினர் மாறிவிட்ட பிறகும், அவர்கள் மத்தியிலும், பல உயர்வு, தாழ்வு கொண்ட பிரிவினர் வேறுபட்டுக் காணப்படுகின்றனரே...? 

எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது... எனது சந்தேகம்... அதற்கான கேள்விகள்... யாவற்றையும் விட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன். 


அவன்... அந்த பி...ச்...சை...கா...ர…ன்…  இன்னும் நான் இருக்கும் அந்த பஸ்ஸில் பாடிக் கொண்டுதான் இருக்கிறான்... பாட்டு இன்னும் முடிய வில்லை... 


அவன் பஸ்ஸில் ஏறியவுடன்... தன்னை பிரயாணிகள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டதே வினோதமாக இருந்தது... அவன் தன் தாய் மொழியான சிங்களத்தில் துள்ளியமாகச் சொன்னான். அவனது வார்த்தைகள் நன்றாக மனனம் செய்துக் கொள்ளப்பட்டவைகளாகும்... ஒவ்வொரு பஸ்ஸிலும் அந்த ஆரம்ப உரையை அவன் ஆற்றுவான் போலிருக்கிறது... 


“நோனா வருனி... மஹத்வருனி..., ஒப யன கமன சுப கமனக் வேவா... சுமன சமன் தெவி பிஹிட்டய்...! மம பொரு, வஞ்ச்சா , ஹொரக்கம், கரன்னே... நே... மம மினீ மரன்னே... நே... ஒபே கமன சுப கமனக் வென்னட்ட மம கீத்தயக் காயனா கரமி... மட்ட சுளு ஆதாரயக் தெய் கியா பலாபொரோத்து வெனவா...”(நான் பொய், களவு, சூது, கொலை செய்து வாழ்பவனல்ல... உங்கள் பயணம் சுபமானதாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு பாடலை பாடுகிறேன்... உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...) 


அவன் பாடுவதற்கு முன்பு வாயினால் இசையை (இண்டர்லூட்) எழுப்பினான்... “டொட டொட டொங்... டொட டொட டொங்...” தோளில் தொங்கிய கிட்டார் கருவியை மீட்டினான்... அந்தப் பாடல் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது... சிங்கள பைலா சக்கரவர்த்தி என அழைக்கப்படும் எம். எஸ் . பெர்னான்டோ பாடிய துள்ளல் இசை அது... 


மேலும் படிக்க....




எலிகளும் பூனைகளும் மாடுகளும்…

 

-  மு.சிவலிங்கம்

அந்தத் தனிநபர் பிரேரணைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. பிரேரணை இன்று விவாதத்துக்கு விடப்பட்டிருக்கின்றது. 


பிரேரணையை முன்வைத்த உறுப்பினர் தனது உரையை ஆரம்பித்தார்... 


பிரேரணைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூக்குரல் சபையைக் குலுக்கிக் கொண்டிருந்தது...  


“கரு சபாநாயக்கத்து மனி...! நமது நாட்டில் எலிகளின் தொல்லைகள் என்றுமில்லாதவாறு பாதிப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன... மாகாணங்களிலுள்ள அரிசி களஞ்சியங்கள், மாவு களஞ்சியங்கள் இன்னும் உழுந்து, பயறு, பருப்பு, கடலை, சோளம் எல்லா தானியங்களும் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன... அதிகாரிகள் என்னிடம் முறைப்பாடு செய்த வண்ணமே இருக்கின்றார்கள்... 


“நாட்டில் உணவு சேதங்கள் மட்டுமல்ல... எல்லா மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சல் உண்டாகி, வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதை நேற்று சுகாதார அமைச்சர் இந்த சபையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்....”

மேலும் படிக்க....


மந்திரி இட்ட…. தீ!
-  மு.சிவலிங்கம்

உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதி;க்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது மேசைகளுங்கூட மங்கிய வெளிச்சத்துக்குள்தான் அடங்கியிருந்தன. 

அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த நால்வரும் நண்பர்களாக இருக்க வேண்டும். வியாபாரிகளாகவும் தெரிய வில்லை. வேறு தொழில் செய்பவர்களாகவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பளிச்சிடும் வெள்ளை ஜிப்பா உடை… வெள்ளை வேட்டி… அவர்களைச் சுற்றி இரண்டு.. மூன்று ‘ஜிப்பா சட்டை’ மனிதர்கள் கைத் துப்பாக்கிகளுடன் அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டுச் சென்றார்கள். அவர்கள்¸ இவர்களின் ‘பொடிகார்டு’ களாக இருக்கலாம். நேரம் செல்லச் செல்லத்தான்.. ஓட்டல் குசு குசுப்பு மூலமாகத் தெரிய வந்தது… அவர்கள் மந்திரிகள் என்று..! மந்திரி யார்..? தந்திரி யார்..? என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாவிட்டாலும்¸ ஒட்டு மொத்தமாக அவர்கள் பெரும் புள்ளிகளாகத் தெரிந்தார்கள்.. ஆறு மணி வரை பன்சலையில் அமர்ந்திருந்து ‘பன’ கேட்டுவிட்டு¸ சற்று முன்னர்தான் வந்திருந்தனர். 

வெண்சட்டை உடுத்தி¸ வெண்ணிறப் பூக்களான பிச்சி¸ அரலி¸ நித்தியக் கல்யாணி¸ என வெள்ளை நிறங்கள் தூய்மையைக் கூறும் தத்துவமாக நிறைந்த தாம்பூலத் தட்டோடு¸ மலர்களை புத்த பகவானின் பாதங்களில் சொரிந்து¸ கரங்களை உயர்த்தி… கண்களை மூடி.. தியானம் புரிந்து மூச்சு இறைக்க பயபக்தியுடன் பன்சலையை விட்டு அவர்கள் சற்று முன்புதான் வந்திருந்தார்கள். பௌத்த ஆலயத்தில் மனத் தூய்மையைக் காட்டும் வெள்ளை நிறமே வேதாந்தமாகவிருக்கும் போது¸ கருணையே வடிவான கௌதமர் மட்டும் காவியில் இருந்தார்…! ‘பகவானும் வெள்ளை நிறத்தில் ‘பார்ளிமென்டு’ உடையில் அமர்ந்திருந்தால் என்ன..?’ என்று ஒரு அரசியல் கிறுக்கன் என்றாவது ஒரு நாளில் குட்டையைக் குழப்பலாம். அதுவும் சட்டமாகலாம்..! 

மலைகளின் மக்கள்......
-மு.சிவலிங்கம்


மேகமலைத் தோட்டத்துப் பக்கத்தில்தான் வானக் காடு தோட்டம் இருக்கிறது. வானக்காடு தோட்டத்துப் பக்கத்தில் தான் ஆனைத் தோட்டம் இருக்கிறது. மேகத்தை அந்த மலை சதா தழுவிக் கொண்டிருப்பதால் மேகமலை என்றும் வானத்தை அந்தக் காடு உரசிக் கொண்டிருப்பதால் வானக்காடு என்றும்¸ யானையைக் கண்டு விரட்டியதால் ஆனைத்தோட்டம் என்றும் அந்தக் காலத்தில் தென்னாட்டுத் தமிழர்கள் இலங்கைக் காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது வைத்த காரணப் பெயர்கள் தாம் இவைகள்... இந்தத் தோட்டங்களுக்குப் பக்கத்திலே 'மண்ராசி” என்றும் ஒரு தோட்டம் உண்டு. மண்ணிலே ராசி கண்ட மக்கள் அப்படி மகுடமிட்டிருந்தார்கள்!

மண்ராசி தோட்டத்துக்கு நேரே உச்சியிலிருக்கும் மலைக்குப் பெயர்தான் ராமர் மலை. அந்த மலையருகில் தான் இன்று எட்டாம் நம்பர் மலை கவ்வாத்து... மலையகத்து கொள்ளையழகுகளையெல்லாம் கூட்டி மெருகுக் காட்டிக் கொண்டிருக்கும் அந்த மலையிலுள்ள ஒரு வட்டப் பாறையில் மூன்று நான்கு அடி உயரத்தில் ஒரு கற்கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்குள் 'ராமர் அந்த காலத்தில் எய்த அம்பு ஒன்றை நாட்டியிருக்கிறார்கள்! அதுதான் ராமர் கோவில். 

“இந்தக் கோவிலிருக்கும் உச்சிமலையிலிருந்து பார்த்தா இந்தியா தெரியுமோ...? ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியுமோ..?” என்று அந்தக்காலத்தில் காடழிக்க வந்த தென்னாட்டு மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டார்களாம்.... 

அதே மலையில் தான் இன்றைய புதிய பரம்பரையினரும் காடு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் ....

வெள்ளி வார்ப்புகளால் கவ்வாத்து கத்திகள் பளபளவென மின்னுகின்றன. வெய்யில் ஏறுவதற்குள் பாதி வேலையை முடித்துக் கொண்ட தொழிலாளர்கள் சிவராமனைக் கூட்டத்தை ஆரம்பிக்கும்படி அவசரப் படுத்தினார்கள். 

மேலும் படிக்க....

மதுர கீதம்...
-மு.சிவலிங்கம்


அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள் இப்படி பலவாறு அவனது வாழ்வுச் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடும் மலைச்சரளைகளென உதிர்த்துக் கொண்டிருந்தன.... 

அந்த¸ பெரிய குப்பைமேடு அந்த லயத்துக்கோடியில் தான் இருக்கிறது. பத்து வீடுகளை வரிசையாக்கிக் கொண்டிருக்கும் லயத்தின் குப்பைக் கூளங்களெல்லாம்¸ அந்தக்கோடிப்புற குழியை நிறைத்து மேடாக்கிவிட்டிருந்தன. அந்தக் குப்பை மேட்டின் ஜீவசத்துக்களையெல்லாம் உண்டு கொழுத்து அதையே ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து¸ பூத்துக்குலுங்கி¸ காய்த்துக் கனிந்து கொண்டிருக்கிறது ஒரு கொய்யாமரம். 

அந்த கொய்யாமரத்தின் உச்சிக்கிளையில் குரங்கைப் போல உட்கார்ந்து கால்களை ஆட்டி வரட்டுச் சத்தமிட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான் சீனி. 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!”

கொய்யாமரத்தின் எதிர்ப்பள்ளத்தில் ஓர் ஓடை ஓடையின் மறுகரையில் ஒரு லயம்¸ அது ஆத்து லயம் அங்கிருந்தும் அதே பாட்டு மோகனராகத்தில் தென்றலோடு மிதந்து வருகிறது. மாரிக்குட்டி¸ ‘கீச்சுக்’ குரலில் அழகு காட்டி பாட்டோடு ஆட்டமும் போடுகிறாள். 


மேலும் படிக்க....

பாக்கு வெட்டி...
-மு.சிவலிங்கம்
-

மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு ஓடினான். அதிபரை விசாரித்தான்.. ஆசிரியர்களை விசாரித்தான்.. அவர்கள் “ரெண்டு மணிக்கே பாடசாலை விட்டாச்சே..” என்று கைகளை விரித்தார்கள். அண்ணன் திரும்பி ஓடி வந்தான். நண்பர்களைக் கூட்டிக் கொண்டு தேடத் தொடங்கினான். இந்த ஊரில் இப்படி எத்தனையோ சிறுமிகள் காணாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. அபியின் தாயாரின் ஓலம் வானதிரக் கேட்டுக் கொண்டேயிருந்தது.. அக்கம் பக்கத்து வீடுகள் அல்லோ கல்லோலப் பட்டன. அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு நெடுஞ் சாலையிலிருந்து  காடு¸ மேடுகள்¸ செடி செத்தைகள் என்று தேடினார்கள். இளைஞர் கூட்டம் தங்கள் கிராமத்துப் பிரதேசம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள்.

எந்த வித அறிகுறியும் தென்பட வில்லை.

அந்திக் கருக்கல்… இருட்டியும்  விட்டது. அந்த சோகமான சூழலை இன்னும் துயரமாக்குவதாய்  மழையும் பெய்யத் தொடங்கியது. இனிமேல் எப்படி காடுகளில் தேடுவது..? இளைஞர்கள் சளைக்க வில்லை.. சிலர் எண்ணெய் பந்தங்களைக் கட்டிக் கொண்டு¸ கல் இடுக்குகள்¸ பாதையடி குழாய்கள்; என நுழைந்து நுழைந்து தேடினார்கள். சிலர் பஸ்ஸில் ஏறி அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று விசாரித்தார்கள். பாடசாலை மாணவி காண வில்லை என்பதால்¸ ஊரே திரண்டு  அமர்க்களப் பட்டது. தேடிக் களைத்தவர்கள்¸ அதிர்ச்சியோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி  நின்றார்கள்.


மேலும் படிக்க....

மஞ்சள் கோடுகள்...
-  மு.சிவலிங்கம்

செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..!

“இன்னும் கொஞ்ச நேரம்மா..!”

“காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”

அம்மாவின் நச்சரிப்போடு செல்வி படுக்கைக்குப் போனாள்.

“கடவுளே..!  கடவுளே..! இந்த கொலஷிப் டெஸ்ட் வச்சானுங்களே பாவிக..! புள்ளைக மெழுகுவர்த்தியா உருகுதுக… ச்சே… ச்சே..!”  மஞ்சுளா வீட்டைக் கூட்டிக் கொண்டே முனு முனுத்தாள்.

மஞ்சுளா படுக்கைக்குப் போன மகளை  மீண்டும் கூப்பிட்டாள். பால் கலக்கிக் கொண்டு  ஓடினாள். மகள் குடித்து முடித்து ¸ அம்மாவுக்கு முத்தம் கொடுத்து விட்டு¸ போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள்.


சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு¸ பிள்ளைகளுக்கு காலையில் இடியப்பம் ¸ லெவேரியா செய்வதற்காக மாவை அவித்து வைக்கத் தயாரானாள். காலையில் இரண்டு பிள்ளைகளும்  இனிப்புடன் சாப்பிடவே விரும்புகின்றன. மஞ்சுளா சின்ன மகன் தூக்கத்தில் சினுங்குவதை ஓடிப் போய் பார்த்து விட்டு ஓடி வந்தாள்.


மேலும் படிக்க....

வெந்து
தணிந்தது
காலம்...
-  மு.சிவலிங்கம்

அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது. சுகமான குளிர்ந்தக் காற்றை¸ அனலாய் தகித்துக் கொண்டிருக்கும்அவர்களைத் தழுவி சுகம் கொடுக்கிறது. மாமரக் கிளைகளில் தொங்கும் தொட்டில்களில் தங்கள் தலைவிதிகளை மறந்து¸ அகதிக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதக் கொடூரங்களால் துவம்சம் செய்யப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டத்துக்கு¸ அந்த இயற்கையின் இரக்கம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது….. பழம்பெரும் இந்த மாமரம்¸ ஆல மரமாகவிருந்திருந்தால்¸ அரண்மனைத் தூண்களாய் விழுதுகளை இறக்கி¸ நாலா புறமும் பூமியில் பதிந்திருக்கும்.

ஆள் அரவமற்ற இந்தக் காட்டுப் பாதையின் ஓரத்தில் இப்படியொரு மரமிருப்பதற்கானக் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. இது காட்டுப் பிரதேசமல்ல.. பூர்வீகமாக மக்கள் குடியிருந்த ஓர் ஊர்… தூர்ந்து போன கிராமம்… மாமரத்தின் அருகிலே குண்டுகளுக்கு இறையான பெரிய கோவில் இருந்ததாம்..  கோவில் இருந்த அடையாளத்திற்குச் சாட்சி சொல்லுமுகமாக மூலஸ்தான திண்ணை கொஞ்சம் பட்டும் படாமல் தெரிகின்றது. கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கிக்காரர்களின் கூடாரங்களில் அழகழகான தேர்ச் சில்லுகள்  ரசனைக்காக வைக்கப்பட்டிருந்தன.  யுத்தம் எரித்த எத்தனை கோவில்களின் தேர்ச்சில்லுகள் இப்படி காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன..? 

மேலும் படிக்க....

உயிர்ப் பிச்சை…
                       - மு.சிவலிங்கம்
'ரதி..! ரொம்ப தூர பயணமா...?"

'இல்ல மாமா...! ஆஸ்பத்திரிக்குத்தான் போறேன்..!"

'தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..?”

“தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது.

‘எவ்வளவு அழகான பொண்ணு…? எப்படி இருந்த பொண்ணு..? தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே..! இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…?” சீரங்கன் மாமா ரொம்பவும் வருத்தப்பட்டார். 

மேலும் படிக்க....

கேட்டிருப்பாயோ.. காற்றே..!
- மு.சிவலிங்கம்

இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து¸ தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது.. இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து¸ அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன.. அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும்போதுதான் சுய உணர்வு வந்தது...! நடப்பது உண்மை சம்பவமே என்று.. விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்....

சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை..

மேலும் படிக்க....

"பேப்பர் பிரஜைகள்..."   -  மு.சிவலிங்கம்

("மலைகளின் மக்கள்"   சிறுகதை தொகுப்பில் இருந்து...)

இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…!


இரவு முழுக்க பார்வதியம்மாள் தூங்கவேயில்லை. “நான் வளத்த செல்லக்கண்ணுக்கு உத்தியோகம் கெடச்சிருக்கு கொழும்பு தொறை முகத்துல கிளாக்கர் வேல… இந்தத் தோட்டத்துக் கணக்கப்புள்ள ஐயாவை… நானும் பாத்துக்கிறேன் என் மவன் படிக்கிறதப் பாத்து கேலி பண்ணினாரே..? அவருக்கிட்டேயே போயி எம்மவனை பயணஞ் சொல்ல வைக்கிறேன்.” இப்படி அந்த தாய் உள்ளம் மகனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்ட பெருமையில் “வீம்பு” பேசிக் கொண்டிருந்தது உண்மைதான்.


சாதாரண ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் படித்து¸ நன்றாக உடுத்திச் செல்வதைப் பார்ப்பதில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ரொம்பவும் சங்கடப்படுவார்கள்.


“லயத்துப் பொடியனை பாரு?” என்று ஏளனமாக கதைப்பார்கள்.


மேலும் படிக்க....