மீண்டும் பனை முளைக்கும்?
-மு.சிவலிங்கம்


வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார். 

செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது. 


கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள்... நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப் போய் முடிவது...? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித் தெருவுக்குள் நுழைவது...?


 “வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா...?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்க விருக்கும் கூட்டம் இவரது பின்னால் நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம் தயங்கித் தயங்கி நின்றுக் கொண்டிருந் தார்கள். 


மேலும் படிக்க....

கேட்டிருப்பாயோ காற்றே...! 

- மு.சிவலிங்கம்


இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து, தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது... இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து, அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன... 


அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும் போதுதான் சுய உணர்வு வந்தது... நடப்பது உண்மை சம்பவமே என்று... விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்... 


சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... இனி... தமிழர்களோடும் சேர்ந்து வாழ நினைத்த நம்பிக்கை அற்றுப் போனதாய் அவர் மனம் விரக்தியடைந்தது. கடைசி காலத்தில் இனத் தோடு இனமாய் சேர்ந்து வாழலாம்... என்ற நப்பாசையும் இன்றோடு விட்டுப் போனது... 


***

வேலாயுதம் மாஸ்டர் காலி மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தில் அடிப்பட்டு, கட்டியத் துணியோடு மனைவி, மக்களை இழுத்துக் கொண்டு, செட்டிக்குளத்துக்கு வந்துச் சேர்ந்தவர். குருவி மாதிரி நாற்பது வருசங்கள் உழைத்துச் சேமித்தப் பணத்தில் வீடு கட்டி, தோட்டம், துறவு தேடி, இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் வளர்த்தெடுத்த இறுமாப்பில் வாழ்ந்துக் கொண்டிருந்த போதுதான் 77ம் ஆண்டு ஆடிக் கலவரம் முதற் கட்டத்தை ஆடி முடித்தது... 


இரவு ஏழு மணி கூட ஆகவில்லை. 


மாஸ்டர் வீட்டுக் கதவு உதைக்கப்பட்டது... பின்னர் உடைக்கப்பட்டது... பெற்ரோல் கேனை வீட்டுக்குள் விசிறினான் ஒருவன்... மேலும் படிக்க....

 உத்தியோகம் புருஷ லட்சணம்..? 

-மு.சிவலிங்கம்


அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை . சமுதாயத்தில் சக மனிதனிடம் கையேந்தி வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத் தாழ்ந்து வீழ்வதற்கு ஒரு பிரஜையின் நிலைமை ஏன் மாறுபடுகின்றது...? பிச்சைக்காரர்களாக ஒரு பிரிவினர் மாறிவிட்ட பிறகும், அவர்கள் மத்தியிலும், பல உயர்வு, தாழ்வு கொண்ட பிரிவினர் வேறுபட்டுக் காணப்படுகின்றனரே...? 

எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது... எனது சந்தேகம்... அதற்கான கேள்விகள்... யாவற்றையும் விட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன். 


அவன்... அந்த பி...ச்...சை...கா...ர…ன்…  இன்னும் நான் இருக்கும் அந்த பஸ்ஸில் பாடிக் கொண்டுதான் இருக்கிறான்... பாட்டு இன்னும் முடிய வில்லை... 


அவன் பஸ்ஸில் ஏறியவுடன்... தன்னை பிரயாணிகள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டதே வினோதமாக இருந்தது... அவன் தன் தாய் மொழியான சிங்களத்தில் துள்ளியமாகச் சொன்னான். அவனது வார்த்தைகள் நன்றாக மனனம் செய்துக் கொள்ளப்பட்டவைகளாகும்... ஒவ்வொரு பஸ்ஸிலும் அந்த ஆரம்ப உரையை அவன் ஆற்றுவான் போலிருக்கிறது... 


“நோனா வருனி... மஹத்வருனி..., ஒப யன கமன சுப கமனக் வேவா... சுமன சமன் தெவி பிஹிட்டய்...! மம பொரு, வஞ்ச்சா , ஹொரக்கம், கரன்னே... நே... மம மினீ மரன்னே... நே... ஒபே கமன சுப கமனக் வென்னட்ட மம கீத்தயக் காயனா கரமி... மட்ட சுளு ஆதாரயக் தெய் கியா பலாபொரோத்து வெனவா...”(நான் பொய், களவு, சூது, கொலை செய்து வாழ்பவனல்ல... உங்கள் பயணம் சுபமானதாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு பாடலை பாடுகிறேன்... உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...) 


அவன் பாடுவதற்கு முன்பு வாயினால் இசையை (இண்டர்லூட்) எழுப்பினான்... “டொட டொட டொங்... டொட டொட டொங்...” தோளில் தொங்கிய கிட்டார் கருவியை மீட்டினான்... அந்தப் பாடல் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது... சிங்கள பைலா சக்கரவர்த்தி என அழைக்கப்படும் எம். எஸ் . பெர்னான்டோ பாடிய துள்ளல் இசை அது... 


மேலும் படிக்க....தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது நிகழ்ச்சியில் குடும்பத்துடன்... மற்றும்

உடப்பு வீரசொக்கன்¸ மலரன்பன்¸ பேராசிரியர் சி.மௌனகுரு¸ மற்றும் கண்டி இராமன் ஆகியோருடன்..

-மு.சிவலிங்கம்
 கொடகே சாகித்திய விழாவில்....

யாழ் நங்கை அன்னலட்சுமி ராஜதுரை¸ K.S.சிவகுமாரன்¸ வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பத்மா சோமகாந்தன்¸ எரிமலை நாவலுக்கு விருது பெற்ற தி.ஞானசேகரன் ஆகியோருடன் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீனும் முசியும்....


இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும். ஐ.நா. பொதுச் சபை 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பிரகடனப்படுத்தியது. எந்த நாட்டு ஆட்சியும்¸ தன்னாட்டு ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்கள்¸ மதங்கள்¸ மொழிகள்¸ தேசிய நிலை ஆகியவற்றின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி 47/135 இலக்கம் கொண்ட தீர்மாணத்தின் படி¸ இன்று இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

( On 18 December 1992 the United Nations General Assembly adopted a resolution recognizing the rights of persons belonging to national or ethnic, religions and linguistic, minorities resolution 47/135 of 18 th December 1992. MIHR Commemorates the day on minorities on 18 th December the day of the adoption of the declaration. )

இலங்கையர்களான¸ தேசிய சிறுபான்மை இனங்களான வடக்கு¸ கிழக்கு¸ மாகாணத் தமிழர்கள்¸ மலையகத் தமிழர்கள்¸ இஸ்லாமியர்கள் ஆகிய இனங்களின் தேசிய உரிமைகள் இன்று வேறு வேறாக உள்ளன.
இவர்களுள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் யாவும் மனித உரிமை மீறல்களாகவே உள்ளன.
இவர்கள் தேசிய நிலைக்கு உறுத்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் நிலமற்ற குடி மக்களாகவே இருக்கின்றனர். அதனால் சுய பொருளாதார நிலையிழந்து¸ தங்கள் வாழ்வாதாரத்துக்கு சக மனிதரை அண்டி வாழ வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்விடம்¸ கிராமங்கள் என்ற தேசியத்தை இழந்து நிற்கின்றது. இவர்கள் கிராமப் புற மக்களாகவன்றி¸ தோட்டப்புற மக்களாகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். (Plantation People)
இவர்களது குடியுரிமை¸ சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. 1948 ம் ஆண்டு ஏவி விடப்பட்ட சட்டங்கள் முதல் 2009 ம் ஆண்டு வரை 12 சட்டங்கள் இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏனைய மக்கள் போலல்லாது பதிவுப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுள்ளனர். பதிவு பிரஜைக்கும் வம்சாவளிப் பிரஜைக்கும் வேறுபாடுகள் இல்லையென்று அரசியல் யாப்பு அறிவித்தாலும் ஏன் இம்மக்களை இன்னும் பதிவு பிரஜைகளாகக் கணித்து வைத்திருக்கின்றது என்பதே எமது உரிமைக்கான கேள்வியாகும்.

இவர்கள் வாழும் பிரதேசங்கள் அரசுக்குரியவை. அரசு இவர்களது வாழ்விடங்களை கிராம மயமாக்க விரும்புவதில்லை. நாட்டில் உள்ளுராட்சிக்குள் இவர்களது வாழ்விடங்கள் உள் வாங்கப்பட வில்லை. இவர்களது உட்கட்டமைப்புக்கு உள்ளுராட்சி நிதி வழங்கப்படுவதில்லை. இன்று வரை (Estate sector) தோட்ட பிரதேசம் என்றே இவர்களது வாழ்விடம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்றும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதிக்குட்பட்ட அல்லது ஆலோசனைக்குட்பட்ட அல்லது சம்மதத்துக்குட்பட்ட விதத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் செய்ய முடியுமென புதிய திருத்தச் சட்டங்கள் அறிவிக்கின்றன. தோட்டங்கள் உள்ளுராட்சிக்கு உள்வாங்கப்படாது¸ தடையாகவிருந்த 33 வது உறுப்புரை நீக்கப்பட்டிருந்தாலும்¸ இந்த பாகுபாடு தொடர்ந்து இருக்கின்றது.
இவர்கள் இன்ற வரை இலங்கைத் தமிழராகவோ¸ மலையகத் தமிழராகவோ தேசிய அடையாளத்தைப் பெறாமல்¸ இந்திய வம்சாவளி என்ற நாமத்துக்குள் இருக்கின்றனர். இவர்களது தேசிய அடையாளத்தை இன்று வரை உறுதிபடுத்திக் கொள்ளாதபடியால்¸ இறுதியாக கணக்கெடுக்கப்பட்ட 1981-2011 வரையிலான 30 ஆண்டுகளுக்கான புள்ளி விபரத்தில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.! இந்த குளறுபடியான கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர் 22 லட்சம் என்றும்¸ இஸ்லாமியர் 18 லட்சம் என்றும்¸ மலையகத் தமிழர் எட்டே 8 லட்சம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் தத்தளிப்பு நிலையில் குடிசன மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டாலும்¸ வடக்கு¸ கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கணிப்பீட்டிலேயே உள் வாங்கப் படுகின்றனர். இதற்கு காரணம்¸ குடிசன தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் இவர்களை இந்தியத் தமிழர்கள் என்றே பதிவேட்டில் அடையாளமிட்டு வைத்திருக்கின்றது.!

இந்த மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளா விட்டால்¸ உலக சனத் தொகை பதிவேட்டிலும் கூட இடம் பெற மாட்டார்கள்.! தேசிய அடையாளமில்லாத அநாமதேயங்களாகவே வாழ வேண்டிவரும்!

அடுத்து ஒரு முக்கியமான தகவல்¸ சில மலையக அரசியல் செயற்பாட்டாளர்கள்…. மற்றும் புத்திமான்கள் பலரும்¸ மலையக மக்களின் மேல் திணிக்கப்பட்ட பிரஜா உரிமை சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன¸ என்று வாய்ப் பேச்சாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்¸ இச் சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன என்ற சட்டத் தகவல் எந்த அரச குறிப்பேட்டிலும் வெளியிடப் பட்டுள்ளதாக அறிய முடியவில்லை. சமூகத்தின் பால் அக்கறை கொண்ட எவராவது ஒரு சட்டவாதி¸ இந்த சந்தேகத்துக்கு தெளிவை தர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய டிசம்பர் 18 ம் திகதியிலிருந்து 2020 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் திகதி வரை மலையக மக்கள் தங்களது மறுக்கப்பட்டு வரும் தேசிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைக் குரலை எழுப்புவார்களா? உரிமைப் போராட்டங்கள் நடத்துவார்களா..? என்பதே இன்றைய தினத்தில் நாங்கள் அனுஷ்டிக்கும் ஏக்கப் பெறுமூச்சாகும்……………

- மு.சிவலிங்கம்மல்லிகைக்கு இந்தாண்டு பிறந்த தின பரிசு ஒரு பிரபல புத்தக வெளியீட்டகத்திலிருந்து காத்திருக்கின்றது..! அத்துடன் அதற்கான பொற்கிழியும் கிடைக்கவுள்ளது..! மலையக மக்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் வேடதாரிகளின் முகமூடிகளைக் கிழித்துக் காட்டும் "வேடத்தனம்" என்ற சிறுகதைத் தொகுப்பே இந்த பரிசாகும்.!... மல்லிகை சி.குமார் சிலரைப்போன்று இலக்கியம் "பண்ண" வந்தவரல்ல..! மலையக சமூக முக்கியத்துவம்...சமூக ஆதங்கமே இவரது எழுத்தாகும்.மலையக அரசியல் தொழிற்சங்க சீரழிவுகளை இலக்கியமாக்கியுள்ளவர்களுள் குமார் மிக முக்கியமானவர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.! கொடகே நிறுவனத்துக்கு மலையகப் படைப்பாளர்கள் சார்பாக நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகவேண்டும்..!

மு.சிவலிங்கம் ஊரடங்கு சட்டம்... வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இந்த விமர்சனக் கட்டுரை!

விசாரணையும்… அசுரனும்....

பல பிரபல்யமான இலக்கியவாதிகளின் நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டன.. சில படங்களே வெற்றியடைந்தன. கல்கியின் பார்த்தீபன் கனவு¸ கள்வனின் காதலி¸ தி.ஜானகிராமனின் மோகமுள்¸ அகிலனின் பாவை விளக்கு¸கொத்தமங்களம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்¸ மகரிஷியின் புவனா ஒரு கேள்வி குறி¸ ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள்¸ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்¸ போன்ற இன்னும் சில படங்களை சொல்லலாம். இன்று ஆட்டோ ஓட்டுனராகத் தொழில் புரியும் நாவலாசிரியர் மு.சந்திரகுமார் “லாக்கப்" நாவலை எழுதியிருக்கிறார்அரசாங்கங்கள் வரம்பு மீறிய அதிகாரங்களை பொலீஸ் திணைக்களங்களுக்கு கொடுப்பதும் பொலீஸ்காரர்கள் அப்பாவிகளின்மேல் நடத்தும் அராஜகங்கள் கொடுரமான சித்திரவதைகள்.. கண்டுபிடிக்க முடியாத கொலை..கொள்ளை வழக்குகளை அப்பாவிகளை வைத்து நடத்தி முடிப்பதும் போன்ற பொலிஸ் பயங்கரவாதம் பற்றிய கதை... புத்தகம் வெளிவந்த போதே பலரின் கவனத்தையும் கவர்ந்தது. "விசாரணை" என்ற பெயரில் 'லாக்கப்" நாவல் வெற்றிமாறனின் நெறியாளுகையில் வெற்றிப் படமாகியது. தமிழ் சினிமாவே பாராட்டி மகிழ்ந்தது. எழுத்தாளர் சந்திரகுமார்.. “அரசியல் தெரியாமல் இலக்கியம் படைக்க முடியாது..அரசியல் இல்லாமல் இலக்கியம் எடுபடாது" என்ற நிலைப்பாடு கொண்டவர். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன்
கூட்டுக்குப்பின்னர்..

நாவலாசிரியர் பூமணி எழுதிய "வெக்கை: நாவலையும் வெற்றிமாறன் “அசுரன்" என்ற பெயரில் படமாக்கினார். படம் பெரும் வெற்றியைக் கண்டது.இப்படத்தின் மூலம் என்டடெயின்மன்ட் நடிகராகவே பாவிக்கப் பட்ட தனுஷை மிகப் பெரும் குணச்சித்திர நடிகராக வெளியில் கொண்டு வந்ததில் வெற்றிமாறனும் வெற்றிடைந்தார்.

தனுஷும் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர் மத்தியிலும் வியப்படையும் வகையில் பாராட்டப்பட்டார். அசுரன் கதை தமிழ்நாட்டில் சக மனித இனத்தைச் சேர்ந்தவனை சாதியால் தாழ்த்தி அவன் வாழுகின்ற நிலத்தையும் பறித்துக்கொள்ளும் “மேட்டுக்குடிகள்' என்போரின் ஆதிக்கத்துக்கெதிராக எழுச்சிக்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாகும்..உலகத்திலேயே இந்தியா என்ற ஒரேயொரு நாடுதான் மனித இனத்தில் சாதி என்ற.. ஒரு வேற்றுமையை உண்டாக்கி.... அவமானப்படுத்தி.. துன்பப்படுத்தி ஒருபிரிவு மனித இனத்தை வாழ விடாமல் கொரோனா வைரஸைப் போன்று அழிக்க முடியாத சக்தியாக இருந்து வருகின்றது....சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்குவதற்கு முன் வரும் தீய சக்திகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எதிர் நிலைப்பாட்டை மிகத் துணிச்சலோடு இப்படம் காட்டியுள்ளது.

நாவலாசிரியனின் கருத்து நிலை வழுவாமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதி திமிர் கொண்ட ஒருவன் செருப்பணிந்து பாடசாலைக்குச்சென்ற மாணவியை அடித்து உதைத்து அவள் செருப்பைக் கழற்றச்செய்து அவள் தலையில் சுமக்கச் செய்து தெருத் தெருவாக இழுத்துச்செல்கிறான். அவள் செருப்பணிவதால் அவளுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று அச்சிறுமியை மிரட்டுகின்றான். தகவல் அறிந்த தனுஷ் அவனையும் அவனது கூட்டத்தினரையும் அடித்து நொறுக்கும் சண்டை காட்சியை மக்கள் ஆரவாரம் செய்து ரசிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது. !. என் அனுபவத்தில் சினிமா சண்டையை எம்ஜியாருக்குப்பிறகு இந்தப் படத்தில்தான் ரசித்தேன்!

சாதிக்கொடுமைகளுக்கு எதிராக சண்டையும் சில சந்தர்ப்பங்களில் கொலையும் கூட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் அறியக் கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறான இலக்கியப் படைப்புக்கள் சினிமா ஊடகத்துக்குள் வெற்றிமாறன் போன்ற சமூகவாதிகளினால்தான் கோலோச்ச முடியும்.. இப்படங்களின் காரணகர்த்தாக்களான மு.சந்திரகுமார்.... பூமணி... தனுஷ்.. வெற்றிமாறன் ஆகிய அனைவருக்கும் மக்களுக்கான சினிமாவை நேசிப்பவர்களின் பாராட்டுக்கள்...!

-மு.சிவலிங்கம்


அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும். ((April 14)) இந்த இனிய நாளில் அவரது புத்தகம் ஒன்றை நினைவு கூறுவோம். "Annihilation of caste" சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தை 1936 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி டாக்டர் அம்பேத்க ர் அவர்களே வெளியிட்டார். உலகில் 95 விதமான வாசகர்கள் இன் நூலை விரும்பி உள்ளார்கள்.

.
Annihilation of caste is a prolific work by Dr. B.R.Ambedkar. It encapsulates the ideas of a rebel of how caste and religion oppress people,socially,morally and economically.இந்த புத்தகத்தோடு இன்னுமொரு புத்தகத்தையும் அறிவோம். பேராசிரியர் கான்சா அய்லயா "நான் ஏன் இந்துவாக இல்லை ?" ("Why I am not a Hindu?") என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த நூல் இந்துத்துவம், பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் பற்றிய விமர்சனமாகும். பேராசிரியர் ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பணிப்புரிந்தவர். இவர் தலித்பகுஜன விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராவார்.

இந்த இரண்டு நூல்களும் மனித இனத்தைப் படித்து கொள்ளும் பொக்கிஷங்களாகும்.உலகிலேயே மனித இனத்தை சாதிகளால் பிரித்து வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா ஆகும்!.அதன் செயலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நூல்களும் உலக கவனத்தை பெற்றவையாகும். இப்புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளனவா என்பதை அறியமுடியவில்லை.

-மு.சிவலிங்கம்

 THAT GOOD BEGINNING..! அந்த நல்ல ஆரம்பம்.....

...உலகத் தமிழர் பேரமைப்பு தொடக்க விழா மாநாடு 2002 ஜூலை மாதம் சென்னையில் நடைப்பெற்றது.சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர்..செயலாளராகிய நாங்கள் இருவரும் கலந்துக்கொண்டோம். "ஈழப்போராட்டம்"பற்றி திரு.பெ.சந்திரசேகரன் அவர்களும்¸ "மலையகத்தமிழரின் தேசிய நிலை" பற்றி நானும் உரையாற்றினோம்.
படங்களில்.. மாநாட்டுத் தலைவர் பழ.நெடுமாறன்.. திருவாளர்கள்..: தொல்.திருமாவளவன்.. பாரதிராஜா... மாநாட்டுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன்(நிற்பவர்) ஆகியோருடன்....
இத்தகவலைதமிழ்நாடு தேவக்கோட்டை இலங்கை மலர்மன்னன் (வறக்காப்பொல) தம்பிராஜா அவர்கள் கேட்டுக்கொண்டதற்காகவும். ஆரம்பகால கட்சியின் நண்பர்களுக்காகவும் பதிவிடுகின்றேன்.... தமிழ் வளர்த்த சினிமா கவிஞர்கள்…!

தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. !அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது… அவரின் காலத்தைத்
தொடர்ந்த தமிழ்க் கவிஞர்களை சினிமா என்னும் ஓர் அற்புத ஊடகம் துணைக்கு அழைத்துக்கொண்டது… அவர்களை சினிமா பாடலாசிரியர்களாக்கியது…. அந்த வழித் தோன்றலே இந்த பிரபல்யங்கள் ஆவர்.. அ.மருதகாசி.. உடுமலை நாராயண கவி… .பாபநாசம் சிவன்… கு.மா.பாலசுப்பிரமணியம்…..

கா.மு.ஷெரிப்….. சுரதா.. ஞானகூத்தன்.. தஞ்சை ராமையா தாஸ்.. பாரதிதாசன்... கண்ணதாசன்.. பஞ்சு அருணாசலம்.. கம்பதாசன்.. புலமைப்பித்தன்.. பூவை செங்குட்டுவன்.. குயிலன்.. போன்றோர்களே ஞாபகத்திலுள்ளனர்… இன்னும் பலரும் பாடல்களை இசையுடன் அள்ளிக் கொடுத்தனர்.
அவர்களில் 50 களில் திகழ்ந்த மூன்று கவிஞர்களை முத்தமிழாக.... இங்கே காணுகின்றோம்.. இவர்களைத் தரம் பிரித்து வரிசை படுத்தமுடியாது..! ஒவ்வொருவரும் ஒவ்வொரு புலமையைக்
கொண்டவர்கள்… கண்ணதாசன்.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.. வாலி ஆகியோரின் பாடல்களை
மூத்த.. நடுத்தர.. ஏன் இன்றைய இளைய தலைமுறை வரை அறியாதவரில்லை.. அன்று விஸ்வநாதன்
ராமமூர்த்தி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களும் ஜிக்கி.. பி.லீலா.. பி.சுசிலா.. ஜமுனாராணி.. எல்.ஆர். ஸ்வரி எம்.எஸ்.ராஜேஸவரி சௌந்தரராஜன்.. பி.பி.ஸ்ரீனிவாஸ்..
சீர்காழி கோவிந்த ராஜன்.. ஏ.எம்.ராஜா கன்டசாலா… போன்ற பாடகர்களும் திரை இசைப்பாடல்களுக்கு மேலும் மேலும் சுவையூட்டினர். அக்கால இளவயதினரின் உள்ளங்களை
அப்பாடல்கள் உலுக்கின..! சிலரின் வாழ்க்கையோடு அப்பாடல்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

அன்று ஆட்டோகிரப் எழுதும் பழக்கம் இருந்தது! பாடசாலை விடுமுறை நாளில் மாணவர்கள் அறியாத…புரியாத…காதலில் வசப்பட்டு பாடல்வரிகளை ஆட்டோகிரப்பில் எழுதி மனம்
நெகிழ்ந்து போவார்கள்..! வயதானவர்கள் தத்துவப் பாடல்களில் மனதை பறிகொடுப்பார்கள்.! இவ்வாறு இவர்களை ஆட்டிப்படைத்தக் கவிஞர்களில் கவியரசு கண்ணதாசனைப் பார்ப்போம்.. கண்ணதாசன் 1949ல் திரைப் பாடல் உலகுக்கு வந்தார். 4000 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.

காதல்.. தத்துவம்.. சோகம்.. வீரம். .நகைச்சுவை.. ஜனரஞ்சகம் என எழுதினார். இவரது பாடல்களில் தமிழின் மொழி வளம்.. நிறைந்திருந்தது. சங்க இலக்கியப் பாடல்களின் கருத்துக்களை முதன் முதலாக கண்ணதாசனே தனது காதல் பாடல்களில் நிறையவே தந்துள்ளார். தத்துவப் பாடல்களில் அனைத்து சமயங்களின் சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்திருந்தன. “சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து… நெஞ்சம் மறப்பதில்லை.…. பார்த்த ஞாபகம் இல்லையா…. உன்னை ஒன்று கேட்பேன்….. இதய வீணை தூங்கும்போது…. கண்ணா கருமை நிற கண்ணா.. வாழ நினைத்தால் வாழலாம்.... மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…. தென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது.. இது போன்ற இன்னும் எத்தனையோ பாடல்கள்.. நினைவில் வந்துக்
கொண்டேயிருக்கின்றன!


கண்ணதாசன் பாரதியை குருவாகக்கொண்டவர். ஆரம்ப காலத்தில் தி.மு.க அரசியலில் செயல்பட்டவர். எட்டாம் வகுப்பு வரையே படித்த இவர் ஆங்கிலக் கவிதைகளின் கருத்துக்களையும் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தவர்.. கண்ணதாசன் தோன்றி மறைந்த காலங்கள் 1927--1981 ஆகும்.

அடுத்து.. கவிஞர் கல்யாண சுந்தரம் நினைவில் நிற்கின்றார். பட்டுக்கோட்டை என்ற பிறந்த ஊரோடே மக்கள் மனங்களில் பதிந்தவர்.! இவர் கோட்பாட்டு சிந்தனையாளர். பொது
உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் உதவியாளராகவிருந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தொழிலாளியாக…
மீன்பிடிப்பவராக.. தண்ணீர் வண்டி ஓட்டுனராக… நிறைய சிறு தொழில் செய்தவர். இசை ரசனைக்காகவே பாட்டு கேட்டு வந்த மக்களெல்லாம் சமூக உணர்வுப் பாடல்களை…
சமூக எழுச்சிப் பாடல்களை இவரது காலத்தில்தான் அவதானிக்கத் தொடங்கினர்.

இவரது சினிமா பாடல் உலகம் 1955லிருந்து 1959 வரையே தொடர்ந்தது. ஐந்தாண்டுகளில் 187
பாடல்கள் மட்டுமே எழுதிய பட்டுக்கோட்டை மக்கள் கவிஞனாக அடையாளப்படுத்தப்பட்டார்.

சினிமாவில் கண்ணதாசனை விட மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர்! இவரது பாடல்கள்…. கல்யாணப் பரிசு படத்தில் துள்ளாத மனமும் துள்ளும்…. வாடிக்கை மறந்தது ஏனோ… திருடாதே பாப்பா திருடாதே… தூங்காதே தம்பி தூங்காதே… சின்னப் பயலே சின்னப் பயலே.. சந்திரபாபு பாடிய உனக்காக எல்லாம் உனக்காக.. போன்ற பாடல்களைத் தந்தவர்.
கவிஞருக்கு 1981ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கி அவரது துணைவியாரிடம் கையளித்தது. 1993ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கவிஞரின் பாடல்களை நாட்டுடைமையாக்கினார். 2000ம் ஆண்டில் முதலமைச்சர் மு.கருணாநிதி பட்டுக்கோட்டையில் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டி கௌரவித்தார். கவிஞரின் துணைவியார் 2018 ம் ஆண்டு மறைந்தார். கவிஞர் தோன்றி மறைந்த காலம் 1930--1959 ஆகும்.
அடுத்து கவிஞர் வாலி திரை இசைப்பாடல் துறையில் முக்கியமானவராக அறியப் படுகிறார்.

இவர் 15000 பாடல்கள் வரை எழுதியுள்ளார். பாடலாசிரியர்.. நடிகர்.. திரைப் பட கதாசிரியர்.. சிறந்தப் பேச்சாளர் என அறியப்பட்டவர்.. அவதாரப் புருஷன் என்ற ராமாயண காதையையும்
மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்றும் வசனக் காவியங்கள் படைத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கும்.. சிவாஜிக்கும் தனிப்பாடல்கள் எழுதி அவர்களை புகழேணியில் ஏற்றி வைத்தப் பெருமை இவரை சாரும். 1954ம் ஆண்டளவில் பாடல் எழுத வந்தவர்


இவரது இடைக் காலத்தில்தான் திரைப் படப் பாடல்களுக்கு சோதனை வந்தது.! முன்னைய காலத்தில் பாடல்
வரிகளுக்கேற்பவே இசையமைக்கப்பட்டன. வாலியின் காலத்தில்தான் மெட்டுக்கு தகுந்தவாறு வரிகள் எழுத வேண்டுமென்ற காலம் திரும்பியது..! அன்று கவிஞர்களே உயர்ந்திருந்தனர். இன்று இசையமைப்பாளர்களே பாடல்களை தீர்மாணிப்பவர்களாகி விட்டார்கள்.! ;. இன்று இசையமைப்பாளர்களின் ஆதிக்கத்தால் பாடல்; வரிகள் எல்லாமே சொல் பொருள் இழந்து… யாப்பிலக்கணம் இழந்து.. “ஏதோ பாட்டாக” வந்துக் கொண்டிருக்கின்றன.!

கவிஞர் வாலியின் தமிழ் மணக்கும் பாடல்களைப் பார்ப்போம். கண்ணன் ஒரு கைக் குழந்தைமல்லிகை என் மன்னன் மயங்கும் அத்தை மடி மெத்தையடி மன்னவனே அழலாமா கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் உலகம் பிறந்தது எனக்காக தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்.. உனது விழியில் எனது பார்வை யமுனை ஆற்றிலே போன்ற பாடல்கள் இன்று வரை நெஞ்சை விட்டு அகலாது..!

இந்த மூன்று கவிஞர்களின் இலக்கிய மணம் வீசும் பாடல் வரிகள் 1950 லிருந்து 80 கள் வரையிலான காலக் கட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களின் மனதில் பதிந்தப் பாடல்களாகும். மனதை
மயக்கிய பாடல்களாகும்.;. அன்றைய திரை இசைப் பாடல்களை கேட்டு ரசிப்பதோடு படித்து ரசிப்பதற்கும் இந்த மூன்று கவிஞர்களின் சினிமா பாடல் தொகுப்புகளோடு காத்திரமான திரை இசை… ..திரைக்கதைகள் யாவற்றையும் ஆய்வு செய்வதன் மூலம் திரைப்படக் கலை இலக்கியம் என்ற ஒரு புதிய இலக்கிய செல்நெறியை உருவாக்கலாம்…


- மு.சிவலிங்கம்

 "வாக்குறுதி" என்ற இந்தக் குறுந்திரை ப்படத்தை... லிந்துலை பா.க. சுரேஷ் (Suresh Kandasamy) என்ற இளம் மலையகக் கலைஞன் எனது அபிப்பிராயத்தைக் கேட்டு எனக்கு பதிவிட்டுள்ளார். ஊடகங்களில் சேகரித்த.. பெருந்தோட்ட மக்களின் கொந்தளித்துக் குமுழியிடும் குமுறல்களையும் . பத்திரிக்கை செய்திகளையும். இரட்சகர்களின் சிம்மக் குரல்களையும் ஒளிச் சித்திரமாக்கி... மனிதாபிமானிகள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.. .. இந்த சிருஷ்டியை மலையக அரசியல் தலைவர்களுக்கும் "கூலித் தொழில்.. கூலி உயர்வு.. கேட்டுக்கொண்டிருக்கும் எண்ண த்துக்கப்பால்.. மாற்றுச் சிந்தனையாக... தோட்ட நிலங்களைத் தேடி சுய விவசாயத்தில் இறங்கும் சிந்தனையையும் கலசாரத்தையும் உருவாக்க முனையும் இளந் தொழிலாளர்களுக்கும் காணிக்கையாக்க விரும்புகிறேன்.." என்று சுரேஷ் ஆசை படுகின்றார்..! இது ஓர் உலக சினிமா..!

 "மலையகத் தமிழ்ச் சிறுகதைகளில் மத்திய தர வர்க்கம்" விரிவுரையாளர்.எம்.எம்.ஜெயசீலன்.....

பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் அவர்களின் மணிவிழா மலரில் இலக்கியவியல் பகுதியில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. சமகாலத்தில் பேராதனை பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த இரண்டு இளம் விரிவுரையாளர்களான திருவாளர்கள்.... பெ.சரவணகுமார்...

எம்.எம்.ஜெயசீலன் ஆகியோர் சமகால மலையக இலக்கியம் பற்றி... குறிப்பாக சிறுகதை..நெடுங்கதை இலக்கியங்கள் பற்றி இவர்களது புதியப் பார்வைகளில் மிகக் காத்திரமான ஆய்வுகளை எழுதி வருகின்றனர்.தொடர்ந்து இவர்களுக்கு இலக்கிய மேடைகள் கிடைத்து வருகின்றன.. சமீபத்தில் திரு.பெ.சரவணகுமார் "மலையக இலக்கியத்தில்எதிர்ப்பு இலக்கியம்" என்ற பார்வையில் எழுதியிருந்தார்.

விமரிசன எழுத்தில் இது ஓர் புதிய கண்ணோட்டமாகும். சமூக எதிரிகளுக்கெதிராக குரல் கொடுக்கும் கதைகளை இக்கட்டுரை கோடிட்டு காட்டுகின்றது. இந்த மணிவிழா மலரில் திரு.ஜெயசீலன் இதுவரை எவரும் பேசாத பொருளான மலையக சமூகத்தின் மத்தியதர வகுப்பினர்களைப்பற்றி எழுதப்பட்ட பல சிறுகதைகளைத் தொட்டுக் காட்டியுள்ளார். கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்துவிட்டவர்கள் சொந்த சமூகத்தைவிட்டு நழுவி... ஒதுங்கி... மறைந்து வாழ்பவர்களை தோலுரித்துக்காட்டியுள்ள பல படைப்புக்களை ஜெயசீலன் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்..! ஏனைய சமூகங்களில் உயர்ந்த நிலைமைக்குச் சென்றுவிட்டவர்கள் தங்களது சமூகத்தின் அரசியல்... சமூக...பொருளாதார வாழக்கையோடு பங்கு கொள்கின்றனர். மலையகத்தில் மட்டுமே சமூகத்தைவிட்டு புலம் பெயர்ந்து விடுகின்றனர்..!சமூக நிகழ்வுகளில் அழைக்கப்பட்டாலே விருந்தினராக வந்து போகின்றனர்..!

இவர்களைப்பற்றி...இவர்களது சமூகப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராய முன்வரும் ஜெயசீலனின் இவ்வகை விமரிசன எழுத்து மலையக இலக்கியத்தில் புதிய செல்நெறியாகும்.....உங்களின் புதிய பார்வைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெயசீலன்..!

- மு.சிவலிங்கம்

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 15ம் திகதி கலை விழாவும்¸ கலையருவி நூல் வெளியீடும் நடைபெற்றது. 7 மாத கொரோனா முடக்கத்துக்குப் பின் கலை இலக்கிய உணர்வுகள் மாணவ ஆசிரியர் மத்தியில் பீறிட்டெழுந்ததை அறிய முடிந்தது..!


விழாவில் பிரதம உரை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. "வரலாற்றில் பெரும்பான்மை இனங்களால் சிறுபான்மை இனங்களின் கலை..இலக்கியங்கள்..கலாசார..பாரம்பரியங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டு வந்தன..வருகின்றன?" என்ற தலைப்பில் உரையாற்றினேன். நேரமின்மையால் எனது உரையை சுருக்கிக்கொண்டேன்!

இலங்கையில் இரண்டாவது தடவையாக தீயிட்டு அழிக்கப்பட்ட யாழ் நூலகத்தைப்பற்றி விரிவாக மாணவர்களுக்கு கூறமுடியவில்லை..! அக்குறை யை நான் மல்லிகையில் பெப்ரவரி 2012ம் ஆண்டில் எழுதிய சிறுகதை மூலம் முகநூலில் நிவர்த்தி செய்கின்றேன். சிரமம் பாராதோர் வாசித்துப் பார்க்கலாம்..!

மந்திரி இட்ட…. தீ!
- மு.சிவலிங்கம்

உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதிக்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது மேசைகளுங்கூட மங்கிய வெளிச்சத்துக்குள்தான் அடங்கியிருந்தன.

அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த நால்வரும் நண்பர்களாக இருக்க வேண்டும். வியாபாரிகளாகவும் தெரிய வில்லை. வேறு தொழில் செய்பவர்களாகவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பளிச்சிடும் வெள்ளை ஜிப்பா உடை… வெள்ளை வேட்டி… அவர்களைச் சுற்றி இரண்டு.. மூன்று ‘ஜிப்பா சட்டை’ மனிதர்கள் கைத் துப்பாக்கிகளுடன் அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டுச் சென்றார்கள். அவர்கள்¸ இவர்களின் ‘பொடிகார்டு’ களாக இருக்கலாம். நேரம் செல்லச் செல்லத்தான்.. ஓட்டல் குசு குசுப்பு மூலமாகத் தெரிய வந்தது… அவர்கள் மந்திரிகள் என்று..!

மந்திரி யார்..? தந்திரி யார்..? என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாவிட்டாலும்¸ ஒட்டு மொத்தமாக அவர்கள் பெரும் புள்ளிகளாகத் தெரிந்தார்கள்..

ஆறு மணி வரை பன்சலையில் அமர்ந்திருந்து ‘பன’ கேட்டுவிட்டு¸ சற்று முன்னர்தான் வந்திருந்தனர். வெண்சட்டை உடுத்தி¸ வெண்ணிறப்பூ க்களான பிச்சி¸ அரலி¸ நித்தியக் கல்யாணி¸ என வெள்ளை நிறங்கள் தூய்மையைக் கூறும் தத்துவமாக நிறைந்த தாம்பூலத் தட்டோடு¸ மலர்களை புத்த பகவானின் பாதங்களில் சொரிந்து¸ கரங்களை உயர்த்தி… கண்களை மூடி.. தியானம் புரிந்து மூச்சு இறைக்க பயபக்தியுடன் பன்சலையை விட்டு அவர்கள் சற்று முன்புதான் வந்திருந்தார்கள். பௌத்த ஆலயத்தில் மனத் தூய்மையைக் காட்டும் வெள்ளை நிறமே வேதாந்தமாகவிருக்கும் போது¸ கருணையே வடிவான கௌதமர் மட்டும் காவியில் இருந்தார்…!

‘பகவானும் வெள்ளை நிறத்தில் ‘பார்ளிமென்டு’ உடையில் அமர்ந்திருந்தால் என்ன..?’ என்று ஒரு அரசியல் கிறுக்கன் என்றாவது ஒரு நாளில் குட்டையைக் குழப்பலாம். அதுவும் சட்டமாகலாம்..!
​​​​​
வெண் சட்டைக்காரர்கள் களைப்பாகவிருந்தனர். வெயிட்டரைக் கூப்பிட்டு¸ வள்ளிக் கிழங்கு கஞ்சி கேட்டனர். யாழ்ப்பாணத்து மேல்மட்ட விடுதிகளில்¸ யாழ் பண்பாட்டு உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. வந்தவர்களும் வந்த நாள் முதல் இன்று வரை யாழ் உணவுகளையே விரும்பி உண்கின்றார்கள். ஊதா நிறத்தில் ஒரு வித வாசனையுடன் சுவை தரும் அந்தக் கிழங்குக் கூழ் மருத்துவக் குணம் நிறைந்தது என்று வெயிட்டர் சொல்லிச் சென்றான்.. தென்னிலங்கை வாசிகள் பிரமித்துப் போனார்கள். யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. பனங் கிழங்கு¸ பனம் பழம்¸ பனங் கள்ளு¸ பனம் பணியாரம்¸ பனங் கருப்பட்டி¸ பனங் கற்கண்டு¸ பினாட்டு¸ ஒடியல்¸ அது போல எள்ளு¸ எள்ளுருண்டை… நல்லெண்ணெய் … திராட்சை¸ திராட்சை வைன்… விதத்தால் ருசி தரும் மாம்பழங்கள்…
அவர்கள் பட்டியல் இட்டு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். இறால்¸ நண்டு¸ கனவாய்.. எனும் கடல் உணவு…

“மகே அம்மே…! செக்ஸி கேம மச்சான்..!” என்றான் ஒரு தந்திரி. எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள். “யாழ்ப்பாணத்து முருங்கைக்காயை மறந்து விட்டாயே..? முருங்கா எதுக்கு நல்லம் தெரியுமா..?” எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திடீரென கை தொலைபேசி ஒருவருடைய பொக்கட்டிலிருந்து ஓசையை எழுப்பியது. அவர்கள் நிசப்தமாகினார்கள். ஒருவன் எழுந்து ஒதுங்கிச் சென்று மெதுவாகப் பேசினான்;

“வெடே ஹரித..?”
“ஹரி..!”

வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். எழுந்துச் சென்றவன் தொடர்ந்து பேசினான்.. “நீங்க தங்கியிருக்கும் ஓட்டல்ல எல்லாமே இருக்கு.. நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்..! “அது”வும் கிடைக்கும்..!” என்று பல்லை இளித்தான். “அதுவும் கிடைக்குமா..?” மறு புறத்திலிருந்தவர்கள் சத்திமிட்டுச் சிரித்தது கூட கேட்டது..

​​​​ ----
வள்ளிக் கிழங்கு கஞ்சியைக் குடித்து விட்டு நேரத்தைப் போக்கியவர்கள்¸ அவசர அவசரமாக குளியல் போட்டு விட்டு¸ மொட்டை மாடியில் வந்தமர்ந்தனர்.

“வெயிட்டர்..! தல் ராத் எக்க விஸ்க்கி..!” என்றார்கள். பனங் கள்ளையும்¸ விஸ்கியையும் கலந்து அடித்ததில் புதிய சுவையை அவர்கள் கண்டு பிடித்தார்கள்..! திடீர் கிக்..! உடம்புக்கு ஒரு வித சுகம்..
பனங் கள்ளு போத்தல்களும்¸ விஸ்கி போத்தல்களும் மேசையில் வந்து குவிந்தன.

“கனவாய்¸ றால்¸ டெவெல்ட் பண்ணிக் கொண்டு வாங்க..!” என்று ஒருவன் வெயிட்டருக்கு ஓடர் போட்டான்.

“நேத்து மாதிரி நண்டு¸ எறைச்சி செஞ்சிக் கொண்டு வாங்க..!” என்றான் இன்னொருவன்.

“ சின்ன வெங்காயம்¸ ‘அமு மிரிஸ்’ நெறைய வெட்டிப் போட்டு கொண்டு வாங்க..!” என்றான் மற்றுமொருவன்

கலவைக் குடி ஒரு நொடிக்குள் அவர்களை குதூகலப்படுத்தியது.
நண்டு இறைச்சியும்¸ நெஞ்சறை ஓட்டுக்குள் பதப்படுத்திய “டிஷ்” ஆக வந்தது..! கனவாயும்¸ இறாலும் வந்தது..!
“அம்மட்ட வுடு..!” என்றான் ஒருவன். “அம்மட்ட சிறி..!” என்றான் மற்றொருவன்.. “அம்மா சோறு.. டொப்பே டொப்.. கியலா வெடக் நே..!” என்றான் இன்னுமொருவன்.

… இன முறுகலுக்கு முந்திய காலத்தை நினைத்து அவர்கள் மயக்க நிலையிலும் கதை பேசினார்கள்..
எழுபதுகளில் தேசிய உற்பத்திக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது¸.. கிராமத்து உற்பத்திகள் பொதுச் சந்தைக்கு வந்தன. கிராமிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டங்களை அன்றைய அரசு முன் கொண்டு வந்தது.
அந்த சுதேசிய வருமானம்தான்.. தென்னங் கள்ளிலும்.. பனங் கள்ளிலும்.. தென்னஞ் சாராயத்திலும்¸ பனஞ் சாராயத்திலும் உயர்வைக் காட்டியது. சீமைக் குடி வகைகளோடு உள் நாட்டு சரக்குகளும் சமதையாகக் கலந்தன.

அன்றொரு காலம் இருந்தது. பனங் கள்ளுக்காகவே தென்னிலங்கை உல்லாசப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்தனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கிணற்றில் குளித்து விட்டு¸ அப்படியே.. கூவில் கடலோரமாக பொடி நடை நடந்தால் கோர்ப்பரேஷன் கள்ளுக் கொட்டில்கள் கண்களை மயக்கிக் கொண்டிருக்கும்..! ஒவ்வொரு ரகத்தில் நண்பர்கள் கூட்டம் அமர்ந்திருப்பர். பனை மட்டை¸ பாக்கு மட்டை¸ தென்னை மட்டை இவைகளில் இரு பக்கக் கைப்பிடியோடு குவளைகள் செய்யப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் உறிஞ்சி.. உறிஞ்சிக் குடிப்பார்கள்.

கள்ளுக் கொட்டில்களில் ஆட்டு இரத்தப் பொறியலே பிரதான “பைட்ஸ்” ஆக வாடை வீசும்..! சுண்டல் பொட்டலமாக இலைகளில் வாங்கி அப்படி அப்படியே வாயில் கொட்டிக் கொண்டு அரைப்பார்கள்..! வெறியேறியவர்களின் உதடுகளில் கறுப்பு¸ வெள்ளை¸ செம்பட்டையாக ஆட்டு மயிர் ஒட்டியிருக்கும்..! மயிராவது.. மண்ணாங்கட்டியாவது..! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் அந்தச் சூழல்… “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமாக”விருந்தது..! ஒரு பக்கம் தொழிலாளர்கள்.. விவசாயிகள்… கடைச் சிப்பந்திகள்… ஆப்பீஸ் லிகிதர்கள்… மறுபுறத்தில் பென்சன் நண்பர்களான வக்கீல்கள்¸ டாக்டர்கள்.. என்ஜினியர்கள்.. ஸ்டேஷன் மாஸ்டர்¸ போஸ்ட் மாஸ்டர்..

இன்னும் திணைக்கள உத்தியோகத்தர்கள்.. என்று சீனியர் சிட்டிசன்களும் அமர்ந்து பிதற்றிக் கொண்டிருக்கும் சந்தோஷச் சூழல்¸ அந்த அந்திப் பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருக்கும். சில சீனியர் சிட்டிசன்கள் சொந்தம் அறுந்து போன தங்கள் சிங்களச் சம்பந்திகளை நினைத்து அழுதுக்கொண்டிருந்தார்கள்.!
“அந்த குட் ஓல்ட் டேய்ஸ் இனி திரும்பி வராது..!” என்று பெருமூச்சோடு¸ அந்த மேசையில் ஒருவன் விஸ்கியை உறிஞ்சியபடி கவலை மேலிடச் சொன்னான்.

“அத்த ஹரப்பன்; பரண கத்தாவ..!” ‘விட்டுத் தள்ளு பழைய கதையை’ என்று ஒருவன் வெறுப்பாகச் சொன்னான்.. இனங்கள் இணைந்து வாழ்ந்த ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கக்கூட அவன் விரும்ப வில்லை.. எவ்வளவுதான் ஆரியக் கூத்தாடினாலும் அவர்கள் நால்வரும் தங்கள் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள். தாங்கள் மினக்கிட்டு வந்த காரியம் நல்லபடியாக நடை பெற வேண்டும் என்று ‘ஜெபித்து’ க் கொண்டிருந்தார்கள்.

இறாலை சுவைத்துக் கொண்டிருந்த ஒருவன் சற்று நிமிர்ந்து முள்ளுக் கரண்டியை நீட்டிப் பேசினான்.

“நாங்கள் இன்று யாழ்ப்பாண நகரத்தில் இருக்க வில்லை..! யாழ்ப்;பாண ராஜ்ஜியத்தில் இருக்கிறோம்..! இந்த நாட்டின் மூளை வளம் இங்கிருந்துதான் ஊற்றெடுத்தது…! ஒரு காலத்தில் நமது தேசத்தின் இயக்கமே இவன்கள்தான் என்ற நிலை இருந்தது…! இங்குள்ள மண்… இங்குள்ள உழைப்பு… இங்குள்ள உணவு… இங்குள்ளவன்களின் மூளை எல்லாமே அபாரமானது..! அவை காலத்தால் கச்சிதமாக அடக்கப்பட்டு விட்டன..!” என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட பேசினான்.
அவர்கள் தலைக்கேறிய போதையிலும் நிதானமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படிப்பாளிகளாகவும்¸ சிந்தனைவாதிகளாகவும் காணப்பட்டார்கள்.. நாட்டையும்.. சொந்த இனத்தையும் நினைக்கும் போது¸ அறிவாளிகளாகவும்¸ அடுத்த இனங்களை நினைக்குப் போது மடையர்களாகவும் இருந்தார்கள்..!
மொட்டை மாடியில் அந்த மது மேசை சிறிது நேரம் மௌனத்துக்குள்ளாகியது.. அவர்களுக்கு போதை கொஞ்சம் இறங்கியிருந்தது. “இன்றைய இரவு பழங்களாகவே இருக்கட்டும்..!” என்றான் ஒருவன். “ஆமா..! வயிறு ரொம்ப அப்செட்டா போச்சு..!” என்றான் அடுத்தவன்.

யாழ்ப்பாணத்து முக்கனிகளும் கோப்பை கோப்பையாக வந்தன. அவர்கள் சுவைத்து¸ சுவைத்துச் சாப்பிட்டார்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் மாதிரி கேட்டதெல்லாம் கிடைத்தன. தேனாமிர்தமாக இனிக்கும் ஒரு இளஞ் சிவப்பு பலாச் சுளையைப் பார்த்த ஒருவன் அதிசயப்பட்டுப் போனான். “எங்க ஊரில் மஞ்சள் நிறத்தில்தான் பலாச்சுளை இருக்கும்..!” என்றான்.

அவர்கள் உடல் தினவெடுத்துள்ளதாக உணர்ந்தார்கள்.. ஒருவன் தெளிவாகப் பேசினான். மீண்டும் அதே வார்த்தையைச் சொன்னான். “நாங்கள் இன்று யாழ்ப்பாண ராஜ்யத்தில் இருக்கிறோம்… நகரத்தில் அல்ல..” என்று சங்கிலி மன்னனை நினைவு படுத்தினான். அவன் போர்த்துக்கீசரோடு மோதிய தீரத்தை விளக்கினான்.
“ராஜ்யங்கள் வெள்ளைக்காரன்களோடு மறையட்டும்..!” என்றான் ஒருவன். சில சரித்திரங்கள் பாதுகாக்கப்படணும்.. சில சரித்திரங்கள் திருத்தப்படணும்.. சில சரித்திரங்கள் அழிக்கப்படணும்.!” என்றான் மற்றுமொருவன்..

“வரலாற மாத்த முடியுமா..?” என்றான் ஒருவன்.
“ஏன் முடியாது..? வரலாற மாத்துவது என்பது ஊருக்குள்ளே புது ரோடு போடுற மாதிரி..! சூழலே மாறிப் போய் விடும்..!” பதிலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

அவர்கள் அரசியல் வினா விடையில் வரலாற்றை மீட்டிக் கொண்டிருந்தார்கள்..

ஒரு மந்திரி கேட்ட கேள்விக்கு ஒரு தந்திரி பட்டென்று பதில் சொன்னான்.
“போர்த்துக்கீசரை தெரியுமா..?”
“அவன்கள் ரட்டவல் அல்லன்ன சூரயா..! எஹெமய் நேத..?”"அவர்கள் நாடுகள் பிடிக்கும் சூரர்கள்..! அப்படித்தானே?"
“அவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு பிடிச்ச ராஜ்யம் எது..?”
“யாழ்ப்பாண ராஜ்யமே..!”

“காரணம்.. இங்குள்ள குடி மக்கள் தீரர்கள்… அரசன் முதல் ஆண்டி வரை புத்திசாலிகள்.. போர்த்துக்கீசருக்கு சவாலே யாழ்ப்பாண மக்கள்தான்.!”
“அப்போ யாழ்ப்பாணத்தை பிடிக்க முடியாமல் லிஸ்பனுக்கு திரும்பிப் போய்விட்டார்களா..?”

“இல்லை..! அவர்கள் மன்னாரைப் பிடித்தார்கள். முத்து குளித்தார்கள். கடல் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள்…!”
“சுதேசிய கலாச்சாரங்கள்¸ அந்நிய ஆட்சிக்கு எதிரானவை என்றார்கள்.. இந்துக் கோவில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். திருக்கேதீஸ்வரம் பெரிய கோவிலை நொறுக்கினார்கள்..! அதன் கட்டிடப் பொருட்களை¸ மன்னாரில் கோட்டை கட்டுவதற்குப் பாவித்தார்கள்..!”
“ஆஹா..! கோபுரம் வீழ்ந்து.. கோட்டை எழும்பியது..!” ஒருவன் அட்டகாசமாகச் சிரித்தான்.

“அப்புறம் என்ன நடந்தது..?”

“இரண்டாம் சங்கிலியன் காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பிடித்தார்கள்..!”
“முழு ராஜ்யத்திலும் ஐநூறு இந்துக் கோவில்களை அழித்து விட்டதாக போர்த்துக்கீசத் தலைவன் ஒருவன் எக்களிப்பு கொட்டினானாம்..!”
“கோவில் சிலைகளையெல்லாம் மர்மமான இடங்களில் புதைத்து மறைத்தார்களாம்..!”

“அது மட்டுமா..? நல்லூர் கந்தசுவாமி கோவிலை தரை மட்டமாக்கினார்களாம்..!”

“ஆமா..! நல்லூர்.. யாழ்ப்பாண ராஜ்யத்தின் அன்றைய தலைநகரமல்லவா..?”

“கோவிலும்…. கோபுரமும் குட்டிச் சுவராகியது.. !கோவில் கட்டிடப் பொருட்களை யாழ்ப்பாணக் கோட்டை கட்டுவதற்குப் பாவித்தார்களாம்.!”
“கோட்டைகள் கட்டுவதற்கு கோவில் சாமான்கள் சக்தியுள்ளதோ..?” ஒருவன் கிண்டலடித்தான். எல்லோரும் சிரித்தார்கள். அவனது நகைச்சுவையைப் புறந்தள்ளி ஒருவன் இடையில் குறுக்கிட்டுப் பேசினான்.. அவன் நிதானமாக¸ மெதுவாகப் பேசினான்.
“நல்லூர் கோவிலை போர்த்துக்கீசர் அழிக்கு முன்பு சப்புமல் குமாரயா அரசன் 1450 ல் அழித்தான். அந்தக் கோவில் தமிழரின் பூர்வீகச் சொத்து.. 1248 ல் நல்லூர் குருக்கள் வலவில் கட்டப்பட்டது.!”

“சப்புமல் குமாரயா கோவிலை அழித்தும் பிரயோஜனம் இல்லாமல் போனதுதானே..?”

“ஆமாம்..!”
“கோவிலை அழித்தவனை மக்கள் சபித்தார்கள். அவனை மனச்சாட்சி உறுத்தியது. தவறு செய்து விட்டதை நினைத்து வருந்தினான். மீண்டும் அதே இடத்தில் புதிய கோவிலை கட்டி வைத்தான்..!”
“ஊ மோடயா..!” ஒருவன் கோபப் பட்டான்.

“அந்தக் கோவிலுக்குத்தான் … போர்த்துக்கீசர் “கேம்” கொடுத்தார்களோ..?” அவர்கள் சிரித்தார்கள்.
“போர்த்துக்கீசர் கோவிலுக்கு மட்டும் “கேம்” கொடுக்க வில்லை…. சங்கிலி அரசன் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த நல்லூர் சரஸ்வதி மஹால் புத்தக சாலையையும் கொழுத்தி சாம்பலாக்கினார்கள். இங்குள்ளவன்களை முட்டாள்களாக்க வேண்டுமானால்¸ இவன்கள் மூளைக்குத் தீனி போடும் புத்தகங்களை அழிக்க வேண்டும்.. என்றார்களாம்..!”

“சரஸ்வதி மகால் நூல் நிலையத்தைப் பற்றி இன்றைக்கும் உலகம் சொல்லுவதென்ன..?”

“The Royal repository of all literary out put of the Kingdom"

“எமது ராஜ்யம் பெற்றெடுத்த அனைத்து இலக்கிய தோன்றலினதும் அரச களஞ்சியம்..”

மொட்டை மாடியில்¸ அந்த அறைக்குள் வட்டமிட்டு அமர்ந்திருக்கும் மந்திரி¸ தந்திரிகள் வெறுமனே அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அறிவு ஜீவிகளாகவும் இருந்தார்கள்.. அவர்கள் தங்களது வரலாற்றை விட¸ அந்நியரின் வரலாற்றை அறிந்துக் கொள்வதில் அக்கறையாக விருந்தார்கள்.

“வரலாற்றில்¸ புத்தகங்களை எரித்தக் கொடூரம் இலங்கையில் போர்த்துக்கீசருக்குப் பின்னர்¸ ஜெர்மனியில் ஹிட்லராலும் நடத்தப்பட்டது..!யூதர்களின் அனைத்து இலக்கியப் பொக்கிஷங்களெல்லாம் எரித்து சாம்பராக்கப்படடன..!"என்றும் அவர்கள் நினைவு படுத்தினார்கள்.

ஓர் இனத்தை ஒடுக்குவதற்கு¸ அவர்களது கலாச்சாரத்தையும்¸ கல்வியையும் அழிக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தில் அலி பூட்டோவும் தயங்கி நிற்கவில்லை.. வங்க தேச விடுதலை எழுச்சியாளர்களை ஒழிப்பதற்கு முன்பு¸ அந்நாட்டு அறிவுஜீவிகளான கலைஞர்களை¸ எழுத்தாளர்களை¸ மருத்துவர்¸ என்ஜினியர்¸ மாணவர்களை¸ பேராசிரியர்களை அந்த பாகிஸ்தான் தலைவன் கொன்று குவித்தான்.!.
“இப்படியும் ஒரு அரசியல் “தியரி” இருப்பதை இப்போதுதான் நான் தெரிந்து வருகிறேன்..!” என்று ஒருவன் ‘ஜோக்’ விட்டான்.
அவர்கள் பேசிப் பேசி களைப்படைந்திருந்தார்கள். ஒருவன் விடுதி அழைப்பு மணியை அழுத்தினான். பனங் கற்கண்டு கலந்த செவ்விளநீர் கொண்டு வரும்படி சொன்னான்.

உடலும்¸ மனமும் குளிர இளநீர் அருந்திவிட்டு¸ அவர்கள் அமைதியாக தியானம் செய்வது போல ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல்; அமர்ந்திருந்தார்கள்.
​​​​​

இந்த மந்திரி¸ தந்திரி.. யார்..? இந்த விடுதியில் தங்கி என்னவெல்லாமோ பேசுகிறார்கள்.. என்னவெல்லாமோ செய்கிறார்கள்…! இவர்கள் அரசியல்வாதிகளாகவும்.. அமைச்சர்களாகவும் இருக்கிறார்களே..! இவர்களது கொழும்பு – ‘ஜப்னா’ ட்ரிப் ஓர் உல்லாச நோக்கம் நிறைந்ததல்ல..! சதி நிறைந்த நோக்கமாக இருக்கலாம் என அறிய முடிகிறது..
இந்த மந்திரி தந்திரிகள் குற்றம் புரிய வந்தவர்களாக ¸ ஓட்டல் ஊழியர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்கொள்ள முடிந்தது…

​​​​
----- ஒரு குளிர் தரும் பனி இரவு…
வருசத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தபோது.¸ 1981 ம் ஆண்டு நினைவில் நின்றது.. மே முப்பத்தொன்றும்¸ ஜூன் முதலாம் திகதியும் ஒன்றாய் இணைந்தன.

------ மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் கோபுரம் சரிந்தது போன்று…
----- நல்லூர் கந்தன் கோபுரம் சரிந்தது போன்று…..
----- நல்லூர் சரஸ்வதி மகால் நூல் நிலையம் எரிந்தது போன்று…
யாழ்ப்பாண ராஜ்யத்தின் இன்னுமொரு புத்தகக் கோபுரம்.. அண்ட வெளியில் தனலைப் பாய்ச்சி.. முழு ஊருக்குமே தனது கடைசி வெளிச்சத்தைக் காட்டி.. புகை மண்டலத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது..!

தொண்ணூறாயிரம் புத்தகங்களின் ஆன்மாக்கள் பிரிந்து தகனமாகிப் போன சாம்பல் மேட்டை உலகம் வந்து பார்த்து அதிர்ந்து நின்றது..
எரிந்து¸ கருகி, எழும்புக்கூடாக நிற்கும் அந்த புத்தக வீட்டின் அருகில் ஒரு பெரியவர் தனித்து நின்றுக் கொண்டிருந்தார்…
முன்னை இட்ட தீயையும்… பின்னை இட்ட தீயையும்… அன்னை இட்ட தீயையும்… சொல்லிப் புலம்பிய பட்டினத்தாரை நினைத்த அவர்… “இவன்கள் இட்ட தீயை… என்னவென்பது..?” என்று மனதுக்குள் கேள்வி எழுப்பினார்..

அவரது கையைக் கோர்த்து நின்ற பேரக் குழந்தையின் தலையைக் கோதியபடி ஏக்கத்தோடு கேட்டார்.
“உன் தலைமுறையைப் பற்றி¸ பின்னால் வரும் சந்ததியினருக்குச் சொல்ல இந்த தேசத்தில் அரசியல் எப்படி இருக்கும்..?”
அவன் குழந்தை…தாத்தாவைப் பார்த்துச் சிரித்தான்…!

-மு.சிவலிங்கம்