புதிய காற்று என்ற இலங்கை தமிழ்த் திரைப்படம் 1975 ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூடியது. அதற்கு முன்பதாக தோட்டக்காரி, பொன்மணி, மஞ்சள் குங்குமம், குத்து விளக்கு, கடமையின் எல்லை, வாடைக் காற்று, நிர்மலா, காத்திருப்பேன் உனக்காக, சர்மிளாவின் இதய ராகம், டெக்ஸி டிரைவர், ஹம்லட், நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி, கோமாளிகள் போன்ற படங்களை வரிசைபடுத்தாமல் இங்கு தந்துள்ளேன்.

Pudhiya Kaatru Mu Sivalingamஇப் படக்கதை தோட்ட மக்களை மையமாகக் கொண்டதாகும். தோ ட்டத் தொழிலாளர்கள் வீடற்று வாழும் நிலைமையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. ஒரே அறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்ந்து வரும் கலாச்சார சீரழிவையும், மனித உரிமை மீறல்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் இக் கதை எழுதப்பட்டது.ஒரு வகையில் இக் கதை நாட்டு மக்களும், அரசும், தோட்டக் கம்பெனி நிர்வாகங்களும் அறிந்துக் கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் ஓர் பிரசார படமாக உருவாக்கப்பட்டது. கதையோட்டமும், படத்துக்கான நோக்கமும் சிதைந்து விடாமல் இருப்பதற்காக இப்படத்தின் டைரக்டர் ராமநாதன் அவர்கள் செயல்பட்டார். இவர் மாத்தளையைச் சேர்ந்தவர். அவருக்கு ஆலோசனை வழங்குபவனாக, உதவியாளனாகவும் அத்தோடு ப்ரொடக்ஷன் மெனேஜராகவும் நான் செயற்பட்டேன்.


படப்பிடிப்பு பண்டாரவளை, ஐஸ்லபி, மல்வத்தை, ஊவா ஹைலன்ஸ், யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டங்களில் நடைபெற்றது. பூவை செங்குட்டுவனும், கவிஞர் கண்ணதாசனும், மற்றும் இலங்கைக் கவிஞர் சாது ஹமீதும் பாடல்களை எழுதியிருந்தார்கள்.
‘மேதினம்.. மேதினம். மேதினி எங்கும் மேதினம்' மண்டிய காடு விலங்குகளோடு' மருண்டு கிடந்தது மலையகம்.. அதை கண்டு திருத்தி கழனிகள் தந்தது தமிழினம்’ என்ற இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசனும், டூயட் பாடல்களை பூவை செங்குட்டுவனும், “மலை நாட்டில் ஒரு மாற்றம் வர வேண்டும் புதிய காற்று” என்ற பாடலை சாது என்ற புனை பெயர் கொண்ட ஹமீதும் எழுதியிருந்தார்கள்.
பாடல்களை பாடகர் முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுஜாத்தா அத்தனாயக்க, வவுனியா பாலச்சந்திரன், மற்றும் சிலரும் பாடியிருந்தார்கள்.
மலையகத்தின் இயற்கை காட்சிகளை அழகுற கெமராவுக்குள் கலைஞர் லெனி கொஸ்தா கொண்டு வந்திருந்தார். வேறு எந்த இலங்கைப் படங்களையும் விட புதிய காற்று படம் வெற்றி பெற்றதற்கு மலையகத்தின் இயற்கை காட்சிகளும், மலையகத் தொழிலாளர் பற்றிய உருக்கமான கதையமைப்புமே காரணமாகும். இப் படம் காண்பிக்கப்படும் போது, நாடு முழுவதிலும் தமிழ், சிங்கள ரசிகர்களின் நல்ல வரவேற்பு கிடைத்தது. வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பட மாளிகைகளில் வாழை மரங்கள், தென்னோலை தோரணங்கள் கட்டி வரவேற்பு செய்திருந்தனர். தயாரிப்பாளர் வி.பி.கணேசனுக்கு இப் படம் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த உத்வேகத்தின் காரணமாக அவர் “நான் உங்கள் தோழன்”, “நாடு போற்ற வாழ்க” போன்ற இரு படங்களையும் அடுத்தடுத்து தயாரித்தார். கலைஞர் கலைச்செல்வன், நான் உங்கள் தோழன் படத்துக்கு திரைக் கதை வசனம் எழுதி, கதாநாயகி அப்புத்தளை சுபாசினிக்கு தந்தையாக பாகமேற்று நடித்திருந்தார். இப் படத்தில் வானொலி, மேடை நாடக சினிமா நடிகரான ஜவாஹிர் முக்கிய பாகமேற்று நடித்திருந்தார். நாடு போற்ற வாழ்க படத்துக்கு எஸ்.என்.தனரத்தினம் திரைக் கதை வசனம் எழுதி நடித்திருந்தார். இம் மூன்று படங்களின் தகவல்கள் யாவும் நினைவுகள் மூலமே எழுதப்பட்டுள்ளன. தகவல் அறிந்தவர்கள் மேலதிகத் தகவல்கலைத் தந்துதவலாம்.