நமது கலைத்துறை.. சுதேசிய வளர்ச்சியில் நிமிர வேண்டும்..

 # நமது கலைத்துறை.. சுதேசிய வளர்ச்சியில் நிமிர வேண்டும்..

-மு.சிவலிங்கம்

தமிழகத்தின்… கலை இலக்கியத் துறைகளின் அசுர வளர்ச்சியால்¸ ஒரு காலத்தில்… இலங்கையின் கலை இலக்கிய சிருஷ்டிகள் பெரிதும் தாக்கப்பட்ட வண்ணமாகவே இருந்தன. சிறிமா அம்மையாரின் தலைமையில் சோசலிச கூட்டரசு உருவாகியது…. சுதேசிய சிந்தனைக்கு இடதுசாரிகள் பாதை அமைத்தனர்… பல்துறை இறக்குமதிகள் தடை செய்யப்பட்டன…. உள்ளுர் உற்பத்திக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது….
இந்த சுதேசிய நடவடிக்கையால் இந்திய நாட்டுத் திரைப்படங்கள் கட்டுப்படுத்தப்பட்டன…. புத்தகங்கள்¸ சஞ்சிகைகளின் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டன.. இலங்கை தமிழ் சினிமா படத் தயாரிப்பாளர்களை அரசு ஊக்குவித்தது. மிக வேகமாக பல தமிழ்ப் படங்கள் உருவாகின. வானொலி நாடகங்கள்…. வானொலி பாடல்கள் எல்லாமே இலங்கைப் படைப்புக்கள் ஆயின. நடிப்புக் கலைஞர்கள்¸ கதாசிரியர்கள்¸ பாடலாசிரியர்கள்¸ பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என்று உள் நாட்டுக் கலைஞர்கள் உருவாகினார்கள். வீரகேசரி பதிப்பகம் இலங்கை எழுத்தாளர்களின் புகழ் பெற்ற பல நாவல்களை மலிவு பிரசுரங்களாக வெளியிட்டன. பல இலக்கியப் படைப்புக்கள் வேகமாகத் தோன்றின…. இந்த பொற்காலம் 70 களிலிருந்து 80 கள் வரை ஒளி வீசிப் பிரகாசித்தன…..

அந்த 70¸ 80 காலங்களில்… இலங்கை வானொலி உள்நாட்டுக் கலைஞர்கள் உருவாகுவதற்கு காரணமாகியது. இந்த ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்குவதற்கு அன்று இலங்கை வானொலி தமிழ்ச் சேவை பணிப்பாளர் சபையில் உறுப்பினராகவிருந்த எச்.என்.பி.முகைதீன் அவர்களும்¸ இன்னும் பல தமிழ் அறிஞர்களும் செயல்பட்ட வரலாறு பெருமைக்குரியதாகும்.

….அந்த ஒளிமயமான எதிர்காலம்¸ திடீரென ஜே.ஆரின் திறந்தப் பொருளாதாரக் கொள்கையால் மீண்டும் இருள்மயமாகிப் போனது!

இருந்தாலும்… அந்த இன்பமயமான நாட்களை மீட்டிப் பார்ப்போம்.! இலங்கை வானொலி மெல்லிசைத் துறையில் பல புகழ் பூத்த கலைஞர்கள் நூற்றுக் கணக்கில் அறிமுகமாகினார்கள்.! அவர்களைப் பற்றி ஓர் ஆழமான ஆய்வு நூலினை எழுதுவதற்கு மனம் ஆசைபடுகிறது!... அது வரையிலும் சிலரைப் பற்றிய சிறிதளவிலான அறிமுகப் பணியை செய்வது முதற்கட்ட முயற்சியாகும். தற்போது நினைவில் நிற்கும் சில பிரபல்யங்களை எனது முகநூல் பக்கத்தில் முதல் கட்டமாக பதிவிடுகின்றேன்.

பாடகர்¸ கலைஞர் சூரியகுமார் முத்தழகை இலங்கை ரசிகர்களும் ஏன் தமிழக ரசிகர்களும் அறியாதவர்கள் இல்லை.! இவர் 1971 ம் ஆண்டு இலங்கை வானொலியில் அறிமுகமாகினார். ஏ.எம்.ராஜா போன்ற குரல் உடையவர் என்று¸ அன்று எல்லோரினதும் பாராட்டைப் பெற்றவர். அன்னை பராசக்தி… என்று தொடங்கும் இவரது முதல் பாடல் 1972 ல் வெளிவந்தது. இசையமைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில் புன்னகை செய்வாயா.. பெண்ணே புன்னகை செய்வாயா.. என்ற பாடலை நாம் மறக்க முடியாது. பொப்பிசை பாடலான வெக்கம் வந்ததோ… வெறுப்பும் வந்ததோ… என்ற பாடலும் மனதில் நிற்கின்றது. இப் பாடலை எழுதியவர் மலையகக் கவிஞர் சக்தி பாலஐயா ஆவார்..! இவர் கவிமணி சி.வி வேலுப்பிள்ளையை தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர். இவர் பொப்பிசை கவிஞர் என்பது புதியத் தகவலாகும்!

முத்தழகு அவர்கள் இலங்கை தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடகராக வலம் வந்தார். அனுராகம் படத்தில் எண்ணங்களாலே இறைவன்தானே…¸ பொன் வண்ணத்தாலே வரைந்து விட்டானே.. எழில் கொஞ்சும் மலையகமே..¸ இளவேனிலே… மனவானிலே..¸உன்னை வரைந்தேனே...உள்ளமதிலே... புதிய காற்று படத்தில் ஓஹோ என் ஆசை ராதா..¸ இந்தாம்மா..அவள் ஒரு ஜீவநதியில் பருவம் பதினாறு.. உன் பார்வை பல நூறு..¸ சம்மதமா சொல்லித் தரவா… போன்ற நெஞ்சம் மறக்காத பாடல்களை பாடியுள்ளார். இவரது டூயட் பாடல்களில் கலாவதியே நிறைய பாடல்கள் பாடியுள்ளார். சிங்கள திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அன்று ஏ.எம்.ராஜாவும்¸ ஜமுனா ராணியும் பாடிய “ஜீவனமே கமன சன்சாரே…” என்ற பிரபல்யமான பாடலை மீண்டும் முத்தழகும்¸ கலாவதியும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் புகழ் பூத்த கலைஞருக்கு நம் நாட்டு கலையுலக வரலாற்றில் ஓர்பசுமையான பதிவு நிலைத்திருக்கும்!

அடுத்ததாக.. திரைப் பட…. வானொலிப் பாடகியான திருமதி கலாவதி முன்னணி வகிக்கின்றார். இவர் 1972 களில் இலங்கை வானொலியில் அரங்கேற்ற நிகழ்சியின் மூலம் அறிமுகமாகினார். இனிமையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த இவர்;¸ இலங்கை சிங்கள…. தமிழ்த் திரைப்படத் துறையில் கணிசமான பாடல்களைப் பாடியுள்ளார்.

விக்டர் ரத்நாயக்க இசையில் பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்கிது… அதனைத் தொடர்ந்து… சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..¸ இரவிலே வீசும் இளங் காற்றும் சந்திரனும்… மலரன்பன் எழுதி¸ மோகன் ராஜ் இசையமைத்த மகாவலியே.. மாநதியே… என்ற பாடலும்¸ சோலையோரம் மாலை நேரம் சல சல நதிக் கரையிலே…¸ என்ற மலரன்பனின் வரிகளில்¸ சரத் விக்ரம இசையிலும் இவர் பாடியுள்ளார். கே..கே. மதிவதனன் எழுதிய சொல்லத்தான் நானும்… தேனில் சுவை சேர்த்து.. என்ற பாடலை டி.கிருஷ்ணனும் இவரும் இணைந்து பாடியுள்ளனர். பொப் இசை பாடகர் ஏ.ஈ.மனோகரனோடுதான் தனது முதல் பாடல் அமைந்தது என்று கலாவதி கூறுகின்றார். எம்.எஸ்.செல்வராஜின் இசையில் ஜி.சின்னசாமி வரிகளில் சங்கீதமே.. சௌபாக்கியமே… பாடலும்¸ கோமாளிகள் (1976) படத்தில் சம்மதமா.. சொல்லித் தரவா… என்ற பாடலையும்¸ புதிய காற்று (1974) படத்தில் ஓஹோ என்னாசை கண்ணா… என்ற பாடலையும் முத்தழகோடு சேர்ந்து பாடியுள்ளார்.

எம்.எஸ் செல்வராஜ் இசையில்¸ அவள் ஒரு ஜீவ நதி படத்தில் ஈழத்து ரத்தினத்தின் பாடலான மாத்தளையில் மாசி மாதம் திரு விழா… என்ற பாடலையும் பாடியுள்ளார். தென்றலும் புயலும் படத்தில் திருமலை பத்மநாதன் இசையில் சந்திர வதனத்தில் இந்த நீலப் பூ… மற்றும் ஏ.மகேந்திரன் இசையில்¸ ஜி.சின்னசாமி வரிகளில்… சோலைக் குயில்கள் பாடும் கீதம்… ஸ்டான்லி பீரிஸ் இசையில் சிங்களப் பாடகர் பிரடி சில்வாவுடன் தே கூடய பிட்டே பந்தா நும்ப எனவா கந்த உடின்… (1981) என்ற பாடல் சிங்கள பட உலகில் பிரபல்யமாகி இவருக்குப் புகழை கூட்டியது. வானொலிப் பாடல்கள்.. தமிழ்.. சிங்களத் திரைப்படப் பாடல்கள் கணிசமான அளவில் பாடி¸ நமது நாட்டு கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்த பாடகி கலாவதிக்கு இலங்கை தமிழ்.. சிங்களக் கலையுலகின் வரலாற்றுப் பதிவில் சில பிரதானப் பக்கங்கள் உண்டு..!
இன்னும் நம் இலங்கை வானொலியில் புகழ் பெற்ற பாடல்களைத் தந்த திருமதி ஜெகதேவி விக்னேஷ்வரன் எம் மனதில் நிற்கின்றார். தமிழகப் பாடகி பி.சுசிலாவுக்கு இணையாகப் பாடி வந்தவர். 1977 ல் அரங்கேற்றம் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். 1978ல்; இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி இசையில்¸ ஆனை முகன் தம்பி ஆறுமுகன்... என்று பாடிய பாடல் 1979 ல் ஒலிபரப்பாகியது. எழுத்தாளர் அகலங்கன் எழுதி¸(?) மெல்லிசை மன்னர்களில் ஒருவரான எஸ் கே..ராமமூர்த்தியின் இசையில் சேற்று வயல் காட்டினிலே நாற்று நட வந்த பெண்ணே… என்ற கிராமிய பாடல் ஒன்றையும்¸ ஷெல்லிதாசன் எழுதிய சிரித்து சிரித்து வந்தவளே… உன் சிரிப்பின் ரகசியம் என்னடியோ… என்ற பாடலையும் பாடியுள்ளார். கார்மேகம் நந்தா எழுதிய… இக் கரையில் இல்லாத வாழ்க்கையைத் தேடி… என்ற பாடல் மோகன் ராஜ் இசையிலும்¸ ஆறறிவு படைத்த மானிடனே… பாடல் எஸ்.கணேஷ்ராஜ் இசையிலும் வெளிவந்தன.

ஜெகதேவியின் மிக உணர்ச்சிபூர்வமான இரண்டு பாடல்கள் இவரை இசைத்துறையில் மிகவும் பிரபல்யமாக்கியது. ஒன்று கவிஞர் வைரமுத்துவின் போரை எதிர்க்கும் பாடலான எங்கே பூமியில் போர்கள் இல்லையோ… அங்கே கூவுக பூங்குயிலே…¸ இப் பாடலுக்கு எம்.எஸ்.செல்வராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை கேட்டு ரசிக்கும் எந்த ஒரு ரசிகனுக்கும் கவிஞர் ஷம்ஸ் எழுதி¸ தேமதாச இசையமைப்பில் நிரோஷா விராஜினி பாடிய வெள்ளி சிறகடிக்கும் வெண் புறாவே… நேரம் இன்னும் வரவில்லையோ.. பாடலும் சரிநிகரானது என்பது நினைவில் வரும்..! மற்றொரு புகழ் மிக்க பாடலான தாய் நாட்டு உரிமைக்காக ஏங்கும்… என் தேசக் காற்றும்.. என் தோட்டப் பூவும்.. என் தாயின் மடியும்… எனக்கில்லையா? என்ற பாடல் கருத்திலும்¸ இசையிலும் உருக்கமாக அமைந்திருந்தது.. இப் பாடலுக்கு எம். மோகன்ராஜ் (
Muthuswamy Mohanraaj
) இசையமைத்துள்ளார். ஆனந்த ரமேஷ் வரிகள் எழுதியுள்ளார். இன்னும் ஒரு பாடல் மயில் வாகனம் சர்வானந்தா எழுதி¸ மோகன்ராஜ் இசையமைத்த இளமையே.. இசை தரும் இனியத் தென்றலே.. என்ற பாடல் மிகவும் ரசிக்கக்கூடிய “மெலடி” யை கொண்ட பாடலாகும்.

ஜெகதேவி இரண்டு திரைப்படங்களுக்கு பாடியுள்ளார். ‘’எங்களில் ஒருவன்” படத்தில் முத்தழகுவுடன் இணைந்து உன்னைத் தேடி வந்ததோர் தோகை… என்ற பாடலும்.. பாதை மாறிய பருவங்கள் படத்தில்… முகிலே.. என்ற பாடலும் மோகன்ராஜ் இசையில் வெளிவந்தன.. நம் நாட்டு மெல்லிசை உலகில் மறக்க முடியாத பாடகியான இவருக்கு இலங்கை வானொலி இசை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு.

மேலும் இங்கு இன்னொரு கவிஞரை… கலைஞரை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். சிறுகதை படைப்பாளர்¸ நாவலாசிரியர்¸ தமிழ்¸ சிங்கள மொழி பெயர்ப்பு எழுத்தாளர்¸ மெல்லிசை பாடலாசிரியர்¸ பாடகர் ஆகிய பல்துறை கலைஞராக மாத்தளை மண்ணுக்கு புகழ் சேர்த்தவர் மலரன்பன் ஆவார். தனது படைப்புகளுக்கு நான்கு முறை அரச சாகித்திய விருதுகளைப் பெற்றுள்ளார். பாடலாசிரியரான மலரன்பன்¸ எம்.எஸ்.செல்வராஜா இசையமைப்பில் 14 பாடல்களைக் கொண்ட இரண்டு ஒலிப் பேழைகளுடன் (Album) 4 இருவட்டுகளும் மெல்லிசைத்துறையில் இவரே முதன் முதலாக வெளியிட்டுள்ளார். பாடகர் ரகுநாதன் பாடிய மூங்கிலின் நாதமும்… தென்றலின் கீதமும் உன் புகழ் பாடுதம்மா… என்ற பாடல் மலரன்பனுக்கு புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்றாகும்.. மலரன்பனின் பாடல் வரிகளுக்கு ..இசையமைப்பாளர்கள்.. எம்.எஸ்செல்வராஜா..எம்.மோகன்ராஜ்.. ஜெயவிக்ரம ஆகியோர் இசையமைக்க
முத்தழகு..கலாவதி..ஜெகதேவி..உட்பட இன்றைய முன்னணி பாடகர்களான மகிந்தகுமார்..ஜெகதீசன்..அக்னி சிவகுமார்..நிரோஷா விராஜினி.. நிலுக்ஷி ஜெயவீரசிங்கம்..ஆகியோர் பாடியுள்ளனர். ஆதர மீனா.. ஹலோ மிஸ்டர்..¸ மம டிரெக்டர்.. ஆகிய இரு சிங்களப் படங்களுக்கும்.. ரத்தரங் மங் ஆதரே என்ற சிங்கள படத்தின் தமிழாக்கமான அப்பாவி கண்கள் படத்துக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

கலைஞர் மலரன்பன் அவர்களை இலங்கை கலை இலக்கிய வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு சில அழகான பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன…!

-மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: