க.பெ.ரணசிங்கம்…. -மு.சிவலிங்கம்

 சமூகப் பிரச்சினையாக…. அதுவே… தேசியப் பிரச்சினையாக.... அதுவே ...சர்வதேசியப் பிரச்சினையாக உருவெடுக்கும் ஒரு குடும்பத்தின் பிரச்சினையை முன்னிட்டு அரசை விரல் நீட்டும் ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்டமே இந்தப் படத்தின் கதையாகும். அரசை ….. நாட்டை…சமூகத்தை உற்று நோக்குகின்ற ஒவ்வொரு இளைஞனும்¸ யுவதியும் பார்க்கவேண்டிய படமே கணவன் பெயர் ரணசிங்கம்.. அதுவே “க.பெ.ரணசிங்கம்”


"தொழில் தேடி வெளி நாடு செல்ப
வர்களுக்கு ஏற்படும் விபரீதப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டும்.. அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்…” என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தும் ஒரு பிரச்சாரமே இப்படத்தின் நிலைப்பாடாகும். இந்தக் கதை ஓர் உண்மை சம்பவத்தை தழுவியது என்று அறிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடொன்றில் தொழிலுக்குச் சென்ற ரணசிங்கம் அங்கே விபத்தில் மரணமாகின்றார். அவரின் உடலை சொந்த நாட்டுக்கு¸…. சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு அவரின் மனைவி அரியநாச்சி அரசாங்கத்தின் துணை கேட்டு¸ நாட்டின் அரச அதிகாரிகள் பல பேர்களையும் சந்தித்து…. கெஞ்சி… கூத்தாடி¸… போராடி…. தவிக்கிறாள். காரியாலயம்..காரியாலயமாக நடையாய் நடக்கிறாள்.. அரச அதிகாரிகள் எல்லோரும் அவளது பிரச்சினையை கேட்டறியாமல் அலட்சியப்படுத்துகின்றார்கள். ஒரு பாமரக் கிராமத்து குடிமகளின் பிரச்சினை எந்தளவு தூரம் அவர்களால் உணரப்படாமல் போகிறது என்பதை படம் காட்டும் விதம்… சக குடிமகனின் ஆத்திரத்தைக் கிளப்புகின்றது.! எந்த ஒரு நாட்டிலும் ஆணவம் காட்டும் அதிகாரத்துவமே
(Bureaucracy) மக்களின் பிரச்சினையை மேலும் அதிகமாக்கிக்கொண்டிருக்கின்றன. மார்க்சீய பார்வைக்குள் இந்த அதிகாரத்துவத்தினர் (Bureaucrats) கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடக்கூடியதாகும்.

வேலை வாய்ப்பு ஏஜண்டுகளையும்¸ வேலை வழங்கும் நாடுகளையும்¸ அந் நாட்டுக் கம்பெனிகளையும்¸ வீட்டுத் தொழில் வழங்கும் தனி நபர்களையும் சொந்த நாட்டு அரசாங்கத்தால் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தையும் இப்படம் சிந்திக்க வைக்கின்றது. வெறும் பாஸ்போர்ட்டை மட்டும் வழங்கி விட்டு கை கழுவாமல் இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு தனது தூதுவராலயத்தின் மூலம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் உணர்த்துகின்றது. காரணம் வெளிநாட்டில் உழைப்பவர் மூலமே அந்நிய செலாவணி சில நாடுகளுக்கு "உயிர்த்தண்ணி ஊத்துகிறது!
படத்தின் இறுதி காட்சி.. அரபு நாடுகளில் இதுவரை 34 ஆயிரம் இந்திய இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள் என்றும் தகவல் தருகின்றது. இளைஞர்கள் தொழில் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்கு தண்ணீர் இல்லாத கட்டாந்தரையில் விவசாயம் செய்ய முடியாத நிலையும்¸ கார்ப்பரேட் கம்பெனிகாரர்கள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி கொள்ளையடிக்கும் வியாபாரமுமே காரணம் என்பதையும்¸ அதற்கான மக்கள் போராட்டத்தையும் இப்படம் தாங்கி நிற்கின்றது.

விஜய் சேதுபதி இப்படத்தின் கதாநாயகன். தண்ணீர் போராட்டத்துக்கு தலைமை தாங்கி எதுவித சினிமாத் தனமுமின்றி…. ஊர் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றார். இப் படத்தில் முழுமையாகத் தோன்றா விட்டாலும் மனதில் ஆழமாகப் பதிந்துக் கொள்கிறார். அரியநாச்சி என்ற கிராமியப் பெயரோடு ஐஸ்வர்யா ராஜேஸ் வந்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகின்றார். கதாசிரியர் சண்முகம் முத்துசாமி ரசிக்கக்கூடிய யதார்த்தமான மொழி நடையில் கதையை நகர்த்தியுள்ளார். கணவனை பறி கொடுத்த ஒரு கிராமத்துப் பெண் அடிமட்ட அதிகாரியிலிருந்து அதியுயர் அதிகாரிவரை உடலை மீட்பதற்கு தவிக்கும் நடிப்பு யதார்த்தமாகவே செல்கின்றது. ஆனால் பாதி படத்துக்குப் பிறகு சராசரி தனிமனித ....எம்ஜியார் பாணி.... கதாநாயகப் போராட்டமாகவும்… பிரதமர் மோடியையும் நடிக்க வைத்திருப்பது… படத்தின் உயிரோட்டத்தை பாதித்துள்ளது எனலாம்! இதனால் உண்மை சம்பவத்தை தாங்கி வந்த கதை¸ இடை நடுவில் கற்பனைச் சித்திரமாகிப் போனது ஏனோ என்ற வினாவை எழுப்பியுள்ளது…
.கமிசனர்¸ பாதுகாப்பு அமைச்சர்¸ பிரதம மந்திரி ஆகியோரை நேருக்கு நேராக எதிர்த்து… விஸ்வரூபமெடுத்து… ‘கணவனின் உடலை’ நாட்டுக்குக் கொண்டு வருவதில் அரியநாச்சி வெற்றி பெற்றும்…. அது வேற்று மனிதரின் உடல் என்பதை அறிகிறாள்.! விபரம் அறியாத ஊர்மக்கள் மரணச்சடங்கு நடத்தி ...பிணத்தை தகனம் செய்கின்றார்கள்..!அரியநாச்சி சுடுகாட்டை விட்டு வீட்டுக்கு விரைகிறாள்.

அரசாங்கத்தின் கையாலாகாதத் தனத்தோடு மேலும் மேலும் போராட திராணி இழந்த அவள்¸ வீட்டு வாசல் முன் நிற்கும் கமிசனரின் கடிதத்தில் “உடலைப் பெற்றுக் கொண்டேன்” என்று வெறுப்போடு கையொப்பம் வைக்கிறாள். வீட்டுக்குள் சென்று கணவன் படத்தின் முன்னால் குமுறி..குமுறி அழுவதோடு படம் முடிகிறது… சில நேரங்களில் சில சினிமாக்கள் மக்களை நெருங்கி வரும்போது மகிழ்ச்சியாகவிருக்கின்றது..!

படத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார். “அறம்” படத்தை தயாரித்த கொட்டப்படி ஜெ.ராஜேஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

-மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: