தமிழ் வளர்த்த சினிமா கவிஞர்கள்…! - மு.சிவலிங்கம்

 தமிழ் வளர்த்த சினிமா கவிஞர்கள்…!

தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. !அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது… அவரின் காலத்தைத்
தொடர்ந்த தமிழ்க் கவிஞர்களை சினிமா என்னும் ஓர் அற்புத ஊடகம் துணைக்கு அழைத்துக்கொண்டது… அவர்களை சினிமா பாடலாசிரியர்களாக்கியது…. அந்த வழித் தோன்றலே இந்த பிரபல்யங்கள் ஆவர்.. அ.மருதகாசி.. உடுமலை நாராயண கவி… .பாபநாசம் சிவன்… கு.மா.பாலசுப்பிரமணியம்…..

கா.மு.ஷெரிப்….. சுரதா.. ஞானகூத்தன்.. தஞ்சை ராமையா தாஸ்.. பாரதிதாசன்... கண்ணதாசன்.. பஞ்சு அருணாசலம்.. கம்பதாசன்.. புலமைப்பித்தன்.. பூவை செங்குட்டுவன்.. குயிலன்.. போன்றோர்களே ஞாபகத்திலுள்ளனர்… இன்னும் பலரும் பாடல்களை இசையுடன் அள்ளிக் கொடுத்தனர்.
அவர்களில் 50 களில் திகழ்ந்த மூன்று கவிஞர்களை முத்தமிழாக.... இங்கே காணுகின்றோம்.. இவர்களைத் தரம் பிரித்து வரிசை படுத்தமுடியாது..! ஒவ்வொருவரும் ஒவ்வொரு புலமையைக்
கொண்டவர்கள்… கண்ணதாசன்.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.. வாலி ஆகியோரின் பாடல்களை
மூத்த.. நடுத்தர.. ஏன் இன்றைய இளைய தலைமுறை வரை அறியாதவரில்லை.. அன்று விஸ்வநாதன்
ராமமூர்த்தி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களும் ஜிக்கி.. பி.லீலா.. பி.சுசிலா.. ஜமுனாராணி.. எல்.ஆர். ஸ்வரி எம்.எஸ்.ராஜேஸவரி சௌந்தரராஜன்.. பி.பி.ஸ்ரீனிவாஸ்..
சீர்காழி கோவிந்த ராஜன்.. ஏ.எம்.ராஜா கன்டசாலா… போன்ற பாடகர்களும் திரை இசைப்பாடல்களுக்கு மேலும் மேலும் சுவையூட்டினர். அக்கால இளவயதினரின் உள்ளங்களை
அப்பாடல்கள் உலுக்கின..! சிலரின் வாழ்க்கையோடு அப்பாடல்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

அன்று ஆட்டோகிரப் எழுதும் பழக்கம் இருந்தது! பாடசாலை விடுமுறை நாளில் மாணவர்கள் அறியாத…புரியாத…காதலில் வசப்பட்டு பாடல்வரிகளை ஆட்டோகிரப்பில் எழுதி மனம்
நெகிழ்ந்து போவார்கள்..! வயதானவர்கள் தத்துவப் பாடல்களில் மனதை பறிகொடுப்பார்கள்.! இவ்வாறு இவர்களை ஆட்டிப்படைத்தக் கவிஞர்களில் கவியரசு கண்ணதாசனைப் பார்ப்போம்.. கண்ணதாசன் 1949ல் திரைப் பாடல் உலகுக்கு வந்தார். 4000 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.

காதல்.. தத்துவம்.. சோகம்.. வீரம். .நகைச்சுவை.. ஜனரஞ்சகம் என எழுதினார். இவரது பாடல்களில் தமிழின் மொழி வளம்.. நிறைந்திருந்தது. சங்க இலக்கியப் பாடல்களின் கருத்துக்களை முதன் முதலாக கண்ணதாசனே தனது காதல் பாடல்களில் நிறையவே தந்துள்ளார். தத்துவப் பாடல்களில் அனைத்து சமயங்களின் சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்திருந்தன. “சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து… நெஞ்சம் மறப்பதில்லை.…. பார்த்த ஞாபகம் இல்லையா…. உன்னை ஒன்று கேட்பேன்….. இதய வீணை தூங்கும்போது…. கண்ணா கருமை நிற கண்ணா.. வாழ நினைத்தால் வாழலாம்.... மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…. தென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது.. இது போன்ற இன்னும் எத்தனையோ பாடல்கள்.. நினைவில் வந்துக்
கொண்டேயிருக்கின்றன!


கண்ணதாசன் பாரதியை குருவாகக்கொண்டவர். ஆரம்ப காலத்தில் தி.மு.க அரசியலில் செயல்பட்டவர். எட்டாம் வகுப்பு வரையே படித்த இவர் ஆங்கிலக் கவிதைகளின் கருத்துக்களையும் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தவர்.. கண்ணதாசன் தோன்றி மறைந்த காலங்கள் 1927--1981 ஆகும்.

அடுத்து.. கவிஞர் கல்யாண சுந்தரம் நினைவில் நிற்கின்றார். பட்டுக்கோட்டை என்ற பிறந்த ஊரோடே மக்கள் மனங்களில் பதிந்தவர்.! இவர் கோட்பாட்டு சிந்தனையாளர். பொது
உடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் உதவியாளராகவிருந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தொழிலாளியாக…
மீன்பிடிப்பவராக.. தண்ணீர் வண்டி ஓட்டுனராக… நிறைய சிறு தொழில் செய்தவர். இசை ரசனைக்காகவே பாட்டு கேட்டு வந்த மக்களெல்லாம் சமூக உணர்வுப் பாடல்களை…
சமூக எழுச்சிப் பாடல்களை இவரது காலத்தில்தான் அவதானிக்கத் தொடங்கினர்.

இவரது சினிமா பாடல் உலகம் 1955லிருந்து 1959 வரையே தொடர்ந்தது. ஐந்தாண்டுகளில் 187
பாடல்கள் மட்டுமே எழுதிய பட்டுக்கோட்டை மக்கள் கவிஞனாக அடையாளப்படுத்தப்பட்டார்.

சினிமாவில் கண்ணதாசனை விட மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தவர்! இவரது பாடல்கள்…. கல்யாணப் பரிசு படத்தில் துள்ளாத மனமும் துள்ளும்…. வாடிக்கை மறந்தது ஏனோ… திருடாதே பாப்பா திருடாதே… தூங்காதே தம்பி தூங்காதே… சின்னப் பயலே சின்னப் பயலே.. சந்திரபாபு பாடிய உனக்காக எல்லாம் உனக்காக.. போன்ற பாடல்களைத் தந்தவர்.
கவிஞருக்கு 1981ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கி அவரது துணைவியாரிடம் கையளித்தது. 1993ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கவிஞரின் பாடல்களை நாட்டுடைமையாக்கினார். 2000ம் ஆண்டில் முதலமைச்சர் மு.கருணாநிதி பட்டுக்கோட்டையில் கவிஞருக்கு மணி மண்டபம் கட்டி கௌரவித்தார். கவிஞரின் துணைவியார் 2018 ம் ஆண்டு மறைந்தார். கவிஞர் தோன்றி மறைந்த காலம் 1930--1959 ஆகும்.
அடுத்து கவிஞர் வாலி திரை இசைப்பாடல் துறையில் முக்கியமானவராக அறியப் படுகிறார்.

இவர் 15000 பாடல்கள் வரை எழுதியுள்ளார். பாடலாசிரியர்.. நடிகர்.. திரைப் பட கதாசிரியர்.. சிறந்தப் பேச்சாளர் என அறியப்பட்டவர்.. அவதாரப் புருஷன் என்ற ராமாயண காதையையும்
மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்றும் வசனக் காவியங்கள் படைத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கும்.. சிவாஜிக்கும் தனிப்பாடல்கள் எழுதி அவர்களை புகழேணியில் ஏற்றி வைத்தப் பெருமை இவரை சாரும். 1954ம் ஆண்டளவில் பாடல் எழுத வந்தவர்


இவரது இடைக் காலத்தில்தான் திரைப் படப் பாடல்களுக்கு சோதனை வந்தது.! முன்னைய காலத்தில் பாடல்
வரிகளுக்கேற்பவே இசையமைக்கப்பட்டன. வாலியின் காலத்தில்தான் மெட்டுக்கு தகுந்தவாறு வரிகள் எழுத வேண்டுமென்ற காலம் திரும்பியது..! அன்று கவிஞர்களே உயர்ந்திருந்தனர். இன்று இசையமைப்பாளர்களே பாடல்களை தீர்மாணிப்பவர்களாகி விட்டார்கள்.! ;. இன்று இசையமைப்பாளர்களின் ஆதிக்கத்தால் பாடல்; வரிகள் எல்லாமே சொல் பொருள் இழந்து… யாப்பிலக்கணம் இழந்து.. “ஏதோ பாட்டாக” வந்துக் கொண்டிருக்கின்றன.!

கவிஞர் வாலியின் தமிழ் மணக்கும் பாடல்களைப் பார்ப்போம். கண்ணன் ஒரு கைக் குழந்தைமல்லிகை என் மன்னன் மயங்கும் அத்தை மடி மெத்தையடி மன்னவனே அழலாமா கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் உலகம் பிறந்தது எனக்காக தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்.. உனது விழியில் எனது பார்வை யமுனை ஆற்றிலே போன்ற பாடல்கள் இன்று வரை நெஞ்சை விட்டு அகலாது..!

இந்த மூன்று கவிஞர்களின் இலக்கிய மணம் வீசும் பாடல் வரிகள் 1950 லிருந்து 80 கள் வரையிலான காலக் கட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களின் மனதில் பதிந்தப் பாடல்களாகும். மனதை
மயக்கிய பாடல்களாகும்.;. அன்றைய திரை இசைப் பாடல்களை கேட்டு ரசிப்பதோடு படித்து ரசிப்பதற்கும் இந்த மூன்று கவிஞர்களின் சினிமா பாடல் தொகுப்புகளோடு காத்திரமான திரை இசை… ..திரைக்கதைகள் யாவற்றையும் ஆய்வு செய்வதன் மூலம் திரைப்படக் கலை இலக்கியம் என்ற ஒரு புதிய இலக்கிய செல்நெறியை உருவாக்கலாம்…


- மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: