கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில்..

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 15ம் திகதி கலை விழாவும்¸ கலையருவி நூல் வெளியீடும் நடைபெற்றது. 7 மாத கொரோனா முடக்கத்துக்குப் பின் கலை இலக்கிய உணர்வுகள் மாணவ ஆசிரியர் மத்தியில் பீறிட்டெழுந்ததை அறிய முடிந்தது..!


விழாவில் பிரதம உரை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. "வரலாற்றில் பெரும்பான்மை இனங்களால் சிறுபான்மை இனங்களின் கலை..இலக்கியங்கள்..கலாசார..பாரம்பரியங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டு வந்தன..வருகின்றன?" என்ற தலைப்பில் உரையாற்றினேன். நேரமின்மையால் எனது உரையை சுருக்கிக்கொண்டேன்!

இலங்கையில் இரண்டாவது தடவையாக தீயிட்டு அழிக்கப்பட்ட யாழ் நூலகத்தைப்பற்றி விரிவாக மாணவர்களுக்கு கூறமுடியவில்லை..! அக்குறை யை நான் மல்லிகையில் பெப்ரவரி 2012ம் ஆண்டில் எழுதிய சிறுகதை மூலம் முகநூலில் நிவர்த்தி செய்கின்றேன். சிரமம் பாராதோர் வாசித்துப் பார்க்கலாம்..!

மந்திரி இட்ட…. தீ!
- மு.சிவலிங்கம்

உல்லாச விடுதியின் உப்பரிகையில் அரைக் கீற்று நிலா.. மங்கிய ஒளியில் காய்ந்துக் கொண்டிருந்தது. அந்த விடுதிக்குள்ளிருக்கும் உணவு சாலையும்¸ மது மேசைகளுங்கூட மங்கிய வெளிச்சத்துக்குள்தான் அடங்கியிருந்தன.

அந்த மது மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அவர்கள் கொழு கொழுவென்று கொழுக்கட்டையாக இருந்தார்கள். அந்த நால்வரும் நண்பர்களாக இருக்க வேண்டும். வியாபாரிகளாகவும் தெரிய வில்லை. வேறு தொழில் செய்பவர்களாகவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பளிச்சிடும் வெள்ளை ஜிப்பா உடை… வெள்ளை வேட்டி… அவர்களைச் சுற்றி இரண்டு.. மூன்று ‘ஜிப்பா சட்டை’ மனிதர்கள் கைத் துப்பாக்கிகளுடன் அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டுச் சென்றார்கள். அவர்கள்¸ இவர்களின் ‘பொடிகார்டு’ களாக இருக்கலாம். நேரம் செல்லச் செல்லத்தான்.. ஓட்டல் குசு குசுப்பு மூலமாகத் தெரிய வந்தது… அவர்கள் மந்திரிகள் என்று..!

மந்திரி யார்..? தந்திரி யார்..? என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாவிட்டாலும்¸ ஒட்டு மொத்தமாக அவர்கள் பெரும் புள்ளிகளாகத் தெரிந்தார்கள்..

ஆறு மணி வரை பன்சலையில் அமர்ந்திருந்து ‘பன’ கேட்டுவிட்டு¸ சற்று முன்னர்தான் வந்திருந்தனர். வெண்சட்டை உடுத்தி¸ வெண்ணிறப்பூ க்களான பிச்சி¸ அரலி¸ நித்தியக் கல்யாணி¸ என வெள்ளை நிறங்கள் தூய்மையைக் கூறும் தத்துவமாக நிறைந்த தாம்பூலத் தட்டோடு¸ மலர்களை புத்த பகவானின் பாதங்களில் சொரிந்து¸ கரங்களை உயர்த்தி… கண்களை மூடி.. தியானம் புரிந்து மூச்சு இறைக்க பயபக்தியுடன் பன்சலையை விட்டு அவர்கள் சற்று முன்புதான் வந்திருந்தார்கள். பௌத்த ஆலயத்தில் மனத் தூய்மையைக் காட்டும் வெள்ளை நிறமே வேதாந்தமாகவிருக்கும் போது¸ கருணையே வடிவான கௌதமர் மட்டும் காவியில் இருந்தார்…!

‘பகவானும் வெள்ளை நிறத்தில் ‘பார்ளிமென்டு’ உடையில் அமர்ந்திருந்தால் என்ன..?’ என்று ஒரு அரசியல் கிறுக்கன் என்றாவது ஒரு நாளில் குட்டையைக் குழப்பலாம். அதுவும் சட்டமாகலாம்..!
​​​​​
வெண் சட்டைக்காரர்கள் களைப்பாகவிருந்தனர். வெயிட்டரைக் கூப்பிட்டு¸ வள்ளிக் கிழங்கு கஞ்சி கேட்டனர். யாழ்ப்பாணத்து மேல்மட்ட விடுதிகளில்¸ யாழ் பண்பாட்டு உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. வந்தவர்களும் வந்த நாள் முதல் இன்று வரை யாழ் உணவுகளையே விரும்பி உண்கின்றார்கள். ஊதா நிறத்தில் ஒரு வித வாசனையுடன் சுவை தரும் அந்தக் கிழங்குக் கூழ் மருத்துவக் குணம் நிறைந்தது என்று வெயிட்டர் சொல்லிச் சென்றான்.. தென்னிலங்கை வாசிகள் பிரமித்துப் போனார்கள். யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை. பனங் கிழங்கு¸ பனம் பழம்¸ பனங் கள்ளு¸ பனம் பணியாரம்¸ பனங் கருப்பட்டி¸ பனங் கற்கண்டு¸ பினாட்டு¸ ஒடியல்¸ அது போல எள்ளு¸ எள்ளுருண்டை… நல்லெண்ணெய் … திராட்சை¸ திராட்சை வைன்… விதத்தால் ருசி தரும் மாம்பழங்கள்…
அவர்கள் பட்டியல் இட்டு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். இறால்¸ நண்டு¸ கனவாய்.. எனும் கடல் உணவு…

“மகே அம்மே…! செக்ஸி கேம மச்சான்..!” என்றான் ஒரு தந்திரி. எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள். “யாழ்ப்பாணத்து முருங்கைக்காயை மறந்து விட்டாயே..? முருங்கா எதுக்கு நல்லம் தெரியுமா..?” எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

திடீரென கை தொலைபேசி ஒருவருடைய பொக்கட்டிலிருந்து ஓசையை எழுப்பியது. அவர்கள் நிசப்தமாகினார்கள். ஒருவன் எழுந்து ஒதுங்கிச் சென்று மெதுவாகப் பேசினான்;

“வெடே ஹரித..?”
“ஹரி..!”

வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். எழுந்துச் சென்றவன் தொடர்ந்து பேசினான்.. “நீங்க தங்கியிருக்கும் ஓட்டல்ல எல்லாமே இருக்கு.. நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்..! “அது”வும் கிடைக்கும்..!” என்று பல்லை இளித்தான். “அதுவும் கிடைக்குமா..?” மறு புறத்திலிருந்தவர்கள் சத்திமிட்டுச் சிரித்தது கூட கேட்டது..

​​​​ ----
வள்ளிக் கிழங்கு கஞ்சியைக் குடித்து விட்டு நேரத்தைப் போக்கியவர்கள்¸ அவசர அவசரமாக குளியல் போட்டு விட்டு¸ மொட்டை மாடியில் வந்தமர்ந்தனர்.

“வெயிட்டர்..! தல் ராத் எக்க விஸ்க்கி..!” என்றார்கள். பனங் கள்ளையும்¸ விஸ்கியையும் கலந்து அடித்ததில் புதிய சுவையை அவர்கள் கண்டு பிடித்தார்கள்..! திடீர் கிக்..! உடம்புக்கு ஒரு வித சுகம்..
பனங் கள்ளு போத்தல்களும்¸ விஸ்கி போத்தல்களும் மேசையில் வந்து குவிந்தன.

“கனவாய்¸ றால்¸ டெவெல்ட் பண்ணிக் கொண்டு வாங்க..!” என்று ஒருவன் வெயிட்டருக்கு ஓடர் போட்டான்.

“நேத்து மாதிரி நண்டு¸ எறைச்சி செஞ்சிக் கொண்டு வாங்க..!” என்றான் இன்னொருவன்.

“ சின்ன வெங்காயம்¸ ‘அமு மிரிஸ்’ நெறைய வெட்டிப் போட்டு கொண்டு வாங்க..!” என்றான் மற்றுமொருவன்

கலவைக் குடி ஒரு நொடிக்குள் அவர்களை குதூகலப்படுத்தியது.
நண்டு இறைச்சியும்¸ நெஞ்சறை ஓட்டுக்குள் பதப்படுத்திய “டிஷ்” ஆக வந்தது..! கனவாயும்¸ இறாலும் வந்தது..!
“அம்மட்ட வுடு..!” என்றான் ஒருவன். “அம்மட்ட சிறி..!” என்றான் மற்றொருவன்.. “அம்மா சோறு.. டொப்பே டொப்.. கியலா வெடக் நே..!” என்றான் இன்னுமொருவன்.

… இன முறுகலுக்கு முந்திய காலத்தை நினைத்து அவர்கள் மயக்க நிலையிலும் கதை பேசினார்கள்..
எழுபதுகளில் தேசிய உற்பத்திக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது¸.. கிராமத்து உற்பத்திகள் பொதுச் சந்தைக்கு வந்தன. கிராமிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டங்களை அன்றைய அரசு முன் கொண்டு வந்தது.
அந்த சுதேசிய வருமானம்தான்.. தென்னங் கள்ளிலும்.. பனங் கள்ளிலும்.. தென்னஞ் சாராயத்திலும்¸ பனஞ் சாராயத்திலும் உயர்வைக் காட்டியது. சீமைக் குடி வகைகளோடு உள் நாட்டு சரக்குகளும் சமதையாகக் கலந்தன.

அன்றொரு காலம் இருந்தது. பனங் கள்ளுக்காகவே தென்னிலங்கை உல்லாசப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்தனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கிணற்றில் குளித்து விட்டு¸ அப்படியே.. கூவில் கடலோரமாக பொடி நடை நடந்தால் கோர்ப்பரேஷன் கள்ளுக் கொட்டில்கள் கண்களை மயக்கிக் கொண்டிருக்கும்..! ஒவ்வொரு ரகத்தில் நண்பர்கள் கூட்டம் அமர்ந்திருப்பர். பனை மட்டை¸ பாக்கு மட்டை¸ தென்னை மட்டை இவைகளில் இரு பக்கக் கைப்பிடியோடு குவளைகள் செய்யப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் உறிஞ்சி.. உறிஞ்சிக் குடிப்பார்கள்.

கள்ளுக் கொட்டில்களில் ஆட்டு இரத்தப் பொறியலே பிரதான “பைட்ஸ்” ஆக வாடை வீசும்..! சுண்டல் பொட்டலமாக இலைகளில் வாங்கி அப்படி அப்படியே வாயில் கொட்டிக் கொண்டு அரைப்பார்கள்..! வெறியேறியவர்களின் உதடுகளில் கறுப்பு¸ வெள்ளை¸ செம்பட்டையாக ஆட்டு மயிர் ஒட்டியிருக்கும்..! மயிராவது.. மண்ணாங்கட்டியாவது..! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் அந்தச் சூழல்… “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமாக”விருந்தது..! ஒரு பக்கம் தொழிலாளர்கள்.. விவசாயிகள்… கடைச் சிப்பந்திகள்… ஆப்பீஸ் லிகிதர்கள்… மறுபுறத்தில் பென்சன் நண்பர்களான வக்கீல்கள்¸ டாக்டர்கள்.. என்ஜினியர்கள்.. ஸ்டேஷன் மாஸ்டர்¸ போஸ்ட் மாஸ்டர்..

இன்னும் திணைக்கள உத்தியோகத்தர்கள்.. என்று சீனியர் சிட்டிசன்களும் அமர்ந்து பிதற்றிக் கொண்டிருக்கும் சந்தோஷச் சூழல்¸ அந்த அந்திப் பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருக்கும். சில சீனியர் சிட்டிசன்கள் சொந்தம் அறுந்து போன தங்கள் சிங்களச் சம்பந்திகளை நினைத்து அழுதுக்கொண்டிருந்தார்கள்.!
“அந்த குட் ஓல்ட் டேய்ஸ் இனி திரும்பி வராது..!” என்று பெருமூச்சோடு¸ அந்த மேசையில் ஒருவன் விஸ்கியை உறிஞ்சியபடி கவலை மேலிடச் சொன்னான்.

“அத்த ஹரப்பன்; பரண கத்தாவ..!” ‘விட்டுத் தள்ளு பழைய கதையை’ என்று ஒருவன் வெறுப்பாகச் சொன்னான்.. இனங்கள் இணைந்து வாழ்ந்த ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கக்கூட அவன் விரும்ப வில்லை.. எவ்வளவுதான் ஆரியக் கூத்தாடினாலும் அவர்கள் நால்வரும் தங்கள் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள். தாங்கள் மினக்கிட்டு வந்த காரியம் நல்லபடியாக நடை பெற வேண்டும் என்று ‘ஜெபித்து’ க் கொண்டிருந்தார்கள்.

இறாலை சுவைத்துக் கொண்டிருந்த ஒருவன் சற்று நிமிர்ந்து முள்ளுக் கரண்டியை நீட்டிப் பேசினான்.

“நாங்கள் இன்று யாழ்ப்பாண நகரத்தில் இருக்க வில்லை..! யாழ்ப்;பாண ராஜ்ஜியத்தில் இருக்கிறோம்..! இந்த நாட்டின் மூளை வளம் இங்கிருந்துதான் ஊற்றெடுத்தது…! ஒரு காலத்தில் நமது தேசத்தின் இயக்கமே இவன்கள்தான் என்ற நிலை இருந்தது…! இங்குள்ள மண்… இங்குள்ள உழைப்பு… இங்குள்ள உணவு… இங்குள்ளவன்களின் மூளை எல்லாமே அபாரமானது..! அவை காலத்தால் கச்சிதமாக அடக்கப்பட்டு விட்டன..!” என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட பேசினான்.
அவர்கள் தலைக்கேறிய போதையிலும் நிதானமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படிப்பாளிகளாகவும்¸ சிந்தனைவாதிகளாகவும் காணப்பட்டார்கள்.. நாட்டையும்.. சொந்த இனத்தையும் நினைக்கும் போது¸ அறிவாளிகளாகவும்¸ அடுத்த இனங்களை நினைக்குப் போது மடையர்களாகவும் இருந்தார்கள்..!
மொட்டை மாடியில் அந்த மது மேசை சிறிது நேரம் மௌனத்துக்குள்ளாகியது.. அவர்களுக்கு போதை கொஞ்சம் இறங்கியிருந்தது. “இன்றைய இரவு பழங்களாகவே இருக்கட்டும்..!” என்றான் ஒருவன். “ஆமா..! வயிறு ரொம்ப அப்செட்டா போச்சு..!” என்றான் அடுத்தவன்.

யாழ்ப்பாணத்து முக்கனிகளும் கோப்பை கோப்பையாக வந்தன. அவர்கள் சுவைத்து¸ சுவைத்துச் சாப்பிட்டார்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் மாதிரி கேட்டதெல்லாம் கிடைத்தன. தேனாமிர்தமாக இனிக்கும் ஒரு இளஞ் சிவப்பு பலாச் சுளையைப் பார்த்த ஒருவன் அதிசயப்பட்டுப் போனான். “எங்க ஊரில் மஞ்சள் நிறத்தில்தான் பலாச்சுளை இருக்கும்..!” என்றான்.

அவர்கள் உடல் தினவெடுத்துள்ளதாக உணர்ந்தார்கள்.. ஒருவன் தெளிவாகப் பேசினான். மீண்டும் அதே வார்த்தையைச் சொன்னான். “நாங்கள் இன்று யாழ்ப்பாண ராஜ்யத்தில் இருக்கிறோம்… நகரத்தில் அல்ல..” என்று சங்கிலி மன்னனை நினைவு படுத்தினான். அவன் போர்த்துக்கீசரோடு மோதிய தீரத்தை விளக்கினான்.
“ராஜ்யங்கள் வெள்ளைக்காரன்களோடு மறையட்டும்..!” என்றான் ஒருவன். சில சரித்திரங்கள் பாதுகாக்கப்படணும்.. சில சரித்திரங்கள் திருத்தப்படணும்.. சில சரித்திரங்கள் அழிக்கப்படணும்.!” என்றான் மற்றுமொருவன்..

“வரலாற மாத்த முடியுமா..?” என்றான் ஒருவன்.
“ஏன் முடியாது..? வரலாற மாத்துவது என்பது ஊருக்குள்ளே புது ரோடு போடுற மாதிரி..! சூழலே மாறிப் போய் விடும்..!” பதிலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

அவர்கள் அரசியல் வினா விடையில் வரலாற்றை மீட்டிக் கொண்டிருந்தார்கள்..

ஒரு மந்திரி கேட்ட கேள்விக்கு ஒரு தந்திரி பட்டென்று பதில் சொன்னான்.
“போர்த்துக்கீசரை தெரியுமா..?”
“அவன்கள் ரட்டவல் அல்லன்ன சூரயா..! எஹெமய் நேத..?”"அவர்கள் நாடுகள் பிடிக்கும் சூரர்கள்..! அப்படித்தானே?"
“அவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு பிடிச்ச ராஜ்யம் எது..?”
“யாழ்ப்பாண ராஜ்யமே..!”

“காரணம்.. இங்குள்ள குடி மக்கள் தீரர்கள்… அரசன் முதல் ஆண்டி வரை புத்திசாலிகள்.. போர்த்துக்கீசருக்கு சவாலே யாழ்ப்பாண மக்கள்தான்.!”
“அப்போ யாழ்ப்பாணத்தை பிடிக்க முடியாமல் லிஸ்பனுக்கு திரும்பிப் போய்விட்டார்களா..?”

“இல்லை..! அவர்கள் மன்னாரைப் பிடித்தார்கள். முத்து குளித்தார்கள். கடல் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள்…!”
“சுதேசிய கலாச்சாரங்கள்¸ அந்நிய ஆட்சிக்கு எதிரானவை என்றார்கள்.. இந்துக் கோவில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். திருக்கேதீஸ்வரம் பெரிய கோவிலை நொறுக்கினார்கள்..! அதன் கட்டிடப் பொருட்களை¸ மன்னாரில் கோட்டை கட்டுவதற்குப் பாவித்தார்கள்..!”
“ஆஹா..! கோபுரம் வீழ்ந்து.. கோட்டை எழும்பியது..!” ஒருவன் அட்டகாசமாகச் சிரித்தான்.

“அப்புறம் என்ன நடந்தது..?”

“இரண்டாம் சங்கிலியன் காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பிடித்தார்கள்..!”
“முழு ராஜ்யத்திலும் ஐநூறு இந்துக் கோவில்களை அழித்து விட்டதாக போர்த்துக்கீசத் தலைவன் ஒருவன் எக்களிப்பு கொட்டினானாம்..!”
“கோவில் சிலைகளையெல்லாம் மர்மமான இடங்களில் புதைத்து மறைத்தார்களாம்..!”

“அது மட்டுமா..? நல்லூர் கந்தசுவாமி கோவிலை தரை மட்டமாக்கினார்களாம்..!”

“ஆமா..! நல்லூர்.. யாழ்ப்பாண ராஜ்யத்தின் அன்றைய தலைநகரமல்லவா..?”

“கோவிலும்…. கோபுரமும் குட்டிச் சுவராகியது.. !கோவில் கட்டிடப் பொருட்களை யாழ்ப்பாணக் கோட்டை கட்டுவதற்குப் பாவித்தார்களாம்.!”
“கோட்டைகள் கட்டுவதற்கு கோவில் சாமான்கள் சக்தியுள்ளதோ..?” ஒருவன் கிண்டலடித்தான். எல்லோரும் சிரித்தார்கள். அவனது நகைச்சுவையைப் புறந்தள்ளி ஒருவன் இடையில் குறுக்கிட்டுப் பேசினான்.. அவன் நிதானமாக¸ மெதுவாகப் பேசினான்.
“நல்லூர் கோவிலை போர்த்துக்கீசர் அழிக்கு முன்பு சப்புமல் குமாரயா அரசன் 1450 ல் அழித்தான். அந்தக் கோவில் தமிழரின் பூர்வீகச் சொத்து.. 1248 ல் நல்லூர் குருக்கள் வலவில் கட்டப்பட்டது.!”

“சப்புமல் குமாரயா கோவிலை அழித்தும் பிரயோஜனம் இல்லாமல் போனதுதானே..?”

“ஆமாம்..!”
“கோவிலை அழித்தவனை மக்கள் சபித்தார்கள். அவனை மனச்சாட்சி உறுத்தியது. தவறு செய்து விட்டதை நினைத்து வருந்தினான். மீண்டும் அதே இடத்தில் புதிய கோவிலை கட்டி வைத்தான்..!”
“ஊ மோடயா..!” ஒருவன் கோபப் பட்டான்.

“அந்தக் கோவிலுக்குத்தான் … போர்த்துக்கீசர் “கேம்” கொடுத்தார்களோ..?” அவர்கள் சிரித்தார்கள்.
“போர்த்துக்கீசர் கோவிலுக்கு மட்டும் “கேம்” கொடுக்க வில்லை…. சங்கிலி அரசன் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த நல்லூர் சரஸ்வதி மஹால் புத்தக சாலையையும் கொழுத்தி சாம்பலாக்கினார்கள். இங்குள்ளவன்களை முட்டாள்களாக்க வேண்டுமானால்¸ இவன்கள் மூளைக்குத் தீனி போடும் புத்தகங்களை அழிக்க வேண்டும்.. என்றார்களாம்..!”

“சரஸ்வதி மகால் நூல் நிலையத்தைப் பற்றி இன்றைக்கும் உலகம் சொல்லுவதென்ன..?”

“The Royal repository of all literary out put of the Kingdom"

“எமது ராஜ்யம் பெற்றெடுத்த அனைத்து இலக்கிய தோன்றலினதும் அரச களஞ்சியம்..”

மொட்டை மாடியில்¸ அந்த அறைக்குள் வட்டமிட்டு அமர்ந்திருக்கும் மந்திரி¸ தந்திரிகள் வெறுமனே அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அறிவு ஜீவிகளாகவும் இருந்தார்கள்.. அவர்கள் தங்களது வரலாற்றை விட¸ அந்நியரின் வரலாற்றை அறிந்துக் கொள்வதில் அக்கறையாக விருந்தார்கள்.

“வரலாற்றில்¸ புத்தகங்களை எரித்தக் கொடூரம் இலங்கையில் போர்த்துக்கீசருக்குப் பின்னர்¸ ஜெர்மனியில் ஹிட்லராலும் நடத்தப்பட்டது..!யூதர்களின் அனைத்து இலக்கியப் பொக்கிஷங்களெல்லாம் எரித்து சாம்பராக்கப்படடன..!"என்றும் அவர்கள் நினைவு படுத்தினார்கள்.

ஓர் இனத்தை ஒடுக்குவதற்கு¸ அவர்களது கலாச்சாரத்தையும்¸ கல்வியையும் அழிக்க வேண்டுமென்ற சித்தாந்தத்தில் அலி பூட்டோவும் தயங்கி நிற்கவில்லை.. வங்க தேச விடுதலை எழுச்சியாளர்களை ஒழிப்பதற்கு முன்பு¸ அந்நாட்டு அறிவுஜீவிகளான கலைஞர்களை¸ எழுத்தாளர்களை¸ மருத்துவர்¸ என்ஜினியர்¸ மாணவர்களை¸ பேராசிரியர்களை அந்த பாகிஸ்தான் தலைவன் கொன்று குவித்தான்.!.
“இப்படியும் ஒரு அரசியல் “தியரி” இருப்பதை இப்போதுதான் நான் தெரிந்து வருகிறேன்..!” என்று ஒருவன் ‘ஜோக்’ விட்டான்.
அவர்கள் பேசிப் பேசி களைப்படைந்திருந்தார்கள். ஒருவன் விடுதி அழைப்பு மணியை அழுத்தினான். பனங் கற்கண்டு கலந்த செவ்விளநீர் கொண்டு வரும்படி சொன்னான்.

உடலும்¸ மனமும் குளிர இளநீர் அருந்திவிட்டு¸ அவர்கள் அமைதியாக தியானம் செய்வது போல ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல்; அமர்ந்திருந்தார்கள்.
​​​​​

இந்த மந்திரி¸ தந்திரி.. யார்..? இந்த விடுதியில் தங்கி என்னவெல்லாமோ பேசுகிறார்கள்.. என்னவெல்லாமோ செய்கிறார்கள்…! இவர்கள் அரசியல்வாதிகளாகவும்.. அமைச்சர்களாகவும் இருக்கிறார்களே..! இவர்களது கொழும்பு – ‘ஜப்னா’ ட்ரிப் ஓர் உல்லாச நோக்கம் நிறைந்ததல்ல..! சதி நிறைந்த நோக்கமாக இருக்கலாம் என அறிய முடிகிறது..
இந்த மந்திரி தந்திரிகள் குற்றம் புரிய வந்தவர்களாக ¸ ஓட்டல் ஊழியர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்கொள்ள முடிந்தது…

​​​​
----- ஒரு குளிர் தரும் பனி இரவு…
வருசத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தபோது.¸ 1981 ம் ஆண்டு நினைவில் நின்றது.. மே முப்பத்தொன்றும்¸ ஜூன் முதலாம் திகதியும் ஒன்றாய் இணைந்தன.

------ மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் கோபுரம் சரிந்தது போன்று…
----- நல்லூர் கந்தன் கோபுரம் சரிந்தது போன்று…..
----- நல்லூர் சரஸ்வதி மகால் நூல் நிலையம் எரிந்தது போன்று…
யாழ்ப்பாண ராஜ்யத்தின் இன்னுமொரு புத்தகக் கோபுரம்.. அண்ட வெளியில் தனலைப் பாய்ச்சி.. முழு ஊருக்குமே தனது கடைசி வெளிச்சத்தைக் காட்டி.. புகை மண்டலத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது..!

தொண்ணூறாயிரம் புத்தகங்களின் ஆன்மாக்கள் பிரிந்து தகனமாகிப் போன சாம்பல் மேட்டை உலகம் வந்து பார்த்து அதிர்ந்து நின்றது..
எரிந்து¸ கருகி, எழும்புக்கூடாக நிற்கும் அந்த புத்தக வீட்டின் அருகில் ஒரு பெரியவர் தனித்து நின்றுக் கொண்டிருந்தார்…
முன்னை இட்ட தீயையும்… பின்னை இட்ட தீயையும்… அன்னை இட்ட தீயையும்… சொல்லிப் புலம்பிய பட்டினத்தாரை நினைத்த அவர்… “இவன்கள் இட்ட தீயை… என்னவென்பது..?” என்று மனதுக்குள் கேள்வி எழுப்பினார்..

அவரது கையைக் கோர்த்து நின்ற பேரக் குழந்தையின் தலையைக் கோதியபடி ஏக்கத்தோடு கேட்டார்.
“உன் தலைமுறையைப் பற்றி¸ பின்னால் வரும் சந்ததியினருக்குச் சொல்ல இந்த தேசத்தில் அரசியல் எப்படி இருக்கும்..?”
அவன் குழந்தை…தாத்தாவைப் பார்த்துச் சிரித்தான்…!

-மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: