மலையகத் தமிழரை இணைத்துக் கொள்ளாத தமிழர் பிரச்சினைகள் எதுவும் முழுமையடையாது..!

கடந்த 28.02.2014 அன்று இந்தியப் பிரதமர் மோடி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரான திரு.ஜி. பார்த்தசாரதி அவர்களை மலையகச் சமூக செயற்பாட்டாளர்களான எம்.வாமதேவன், மு.சிவலிங்கம், பெ.முத்துலிங்கம், கலாநிதி எஸ்.சந்திரபோஸ் ஆகிய நால்வர்கள் அடங்கிய குழுவினர் ஹோட்டல் சமுத்திராவில் சந்தித்து உரையாடினர். இக் கலந்துரையாடலில் இந்திய தூதுவராலய அரசியல் பிரிவு செயலாளரும் பிரசன்னமாகியிருந்தார்.


இச் சந்திப்பில் மலையகத் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலைமைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்பே இப் பேச்சு வார்த்தை நடந்தது. திரு.ஜி.பார்த்தசாரதி அவர்கள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் ஆலோசகராகவும் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்படி குழுவினர் தங்களது மகஜர் ஒன்றினையும் மோடி அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கையளித்தனர்.

இப் பேச்சுவார்த்தை நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகியதும், அவரை இலங்கைத் தமிழ் கூட்டமைப்பினர் சந்தித்த போது, மலையகத் தமிழரை ஒதுக்கிவிட்டு, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவது முழுமையான தீர்வாகாது என்று இந்திய தரப்பினர் கூறிவிட்டதாக மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி, வெளியாகிய செய்தியின் தொடர்பாக பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியாளர் திரு.சிவராம கிருஷ்ணன் மு.சிவலிங்கத்திடம் தொடர்பு கொண்டார்.

தங்கள் குழுவினரது பேச்சுவார்த்தையின் பயனாகவே இந்தியத் தரப்பினர் இந்நிலைப்பாட்டினை எடுத்திருக்கலாம் என்று மு.சி. உறுதியுடன் பதிலளித்தார்.






-மு.சிவலிங்கம்


- மு.சிவலிங்கம்
(முன்னாள் ம.ம.மு.செயலாளர் நாயகம்)

மலையகக் கட்சிகள் இம்முறை எவரை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்கள் என்பதை மட்டுமே அறியமுடிகின்றது. தாங்கள் ஆதரவு வழங்கவிருப்பவரிடம் முன் வைக்கவிருக்கும் கோரிக்கைகள் பற்றியும் கோரிக்கைகளுக்கான உடன்படிக்கை பற்றியும் அறிந்து கொள்வதற்கு மக்கள் இம்முறை மிக  ஆர்வமாகவிருக்கின்றார்கள். குறிப்பாக இளைய சமூகத்தினர்களின் எதிர்பார்ப்புகள் ஆவேசமாகவே இருக்கின்றன.  காரணம் தங்களது அரசியல் சமூக நிலைமைகளை அறிந்தவர்களாக… இன்றைய அரசியல் போக்குகள் தங்களது சமூகத்தை எப்படியெல்லாம் ஓரங்கட்டி வருகின்றன என்பது பற்றியெல்லாம் தெளிவாக புரிந்த நிலையில் உள்ளனர்.

ஆகவே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாகவிருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் பட்சத்தில்  எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவரிடம் உடன்படிக்கைகள் எழுதிக்கொள்ளாமல்   “நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளோம்” என்று விவஸ்தையற்ற நிலப்பாடுகளை எடுப்பதில் மலையகக் கட்சிகள்  ஞானசாதூரியமாக செயல் பட வேண்டுமென வாக்களிக்கவிருக்கும் பொறுப்புள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று மலையகத்தில் இளையப் பரம்பரையினர் தங்களது சமூக அரசியலில்   ரொம்பவே தெளிவாகவிருக்கின்றனர். அவர்கள் அரசியல்¸ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கப்பால் சமூகப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதை இன்று அவதானிக்க முடிகின்றது.

தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற சம்பள நிர்ணயத்தில் தோட்ட முதலாளிகளின் திமிர் நிறைந்த விடாப்பிடியும்…   அரசாங்கத்தின் வழமையான  அலட்சியமும்… தோட்டக் கம்பெனிகளுக்கே சார்பாகவிருக்கும் அதன் நிலைப்பாடும் இருநூறு வருசங்களாகியும் தொழிலாளர்களை அரச ஊழியர்களாக ஏற்றுக்கொள்ளாது ஒதுக்கியே வைத்திருக்கும்  பாரபட்சமும்   சர்வதேச மட்டத்துக்கு எட்டும் வரை தலைநகரில்  மலையக இளைஞர்கள்  பல போராட்ட வடிவங்களை முன்னெடுத்தனர். இவர்களின் போராட்டங்கள் தேசிய ரீதியில் சிங்கள இளைஞர்களின் ஆதரவுகளையும்¸ இளம் பௌத்த துறவிகளின் ஒத்துழைப்புக்களையும் நாடளாவிய மட்டத்தில் தமிழ்¸ முஸ்லிம் இளைஞர்களின்  தார்மீகக் குரல்கள் எழுப்பப் பட்டதையும் எந்த சமூக அவதானியும் அறியாமலிருந்திருக்கமுடியாது..

இவ்வாறான சமூக எழுச்சிகளும்… தொழிற்சங்க¸ அரசியல் கட்சிகளுக்கப்பால் நடைபெற்று வரும் சமூகப் போராட்டங்களும்  சமூக மாறுதலுக்கான  புரட்சிகள்  என்பதை சமூக அக்கறையுள்ளவர்கள் அங்கீகரிக்கவேண்டும்.

இவர்கள் மத்தியில்¸ சமூகத்துக்கு வெளியே போய் நின்று … பதுங்கி.. ஒதுங்கி..  கருத்துக்களையும் விமரிசனங்களையும்  மட்டுமே  சொல்லிக் கொண்டிருக்கும்  நமது  “படிப்பாளி” பிரிவினர்களும். நமது .அரச ஊழியர்களும்.. ஆசிரிய சமூகத்தினரும்;… வர்த்தக சமூகத்தினர்களும்;…  காலங்காலமாக தங்களை   நாட்டிலிருந்தும்¸ சமூகத்திலிருந்தும் அந்நியப் படுத்திக்கொண்டே ஒதுங்கி   வாழ்ந்துக் கொண்டிருக்கும் தோட்ட ஊழியர்களும்  சொந்த சமூகத்தின் தேசிய வாழ்வுரிமைகளுக்கான பங்களிப்புக்களை இனி வருங்காலங்களிலாவது வழங்குவதற்கு முன் வரவேண்டும். காரணம் நாங்கள் இன்னும் தேசிய வாழ்வுரிமைகளைப் பெற்றுக்கொள்ளாத “அரைகுடி மக்களாகவே” இருந்து வருகின்றோம்.

நமது  பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றிருப்பவர்களை  சிவில் சமூகத்தினராகச் சென்று தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டியது … நமது பொறுப்பாகவிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலும் சரி…பொது தேர்தலிலும் சரி … இந்த பங்களிப்பு அவசியமாகின்றது.    இவர்களின் கருத்துக்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதிகள்   செவி  மடுக்க முன் வர வேண்டியது அவர்களின் பொறுப்பாகவிருக்கின்றது. இந்த அரசியல் கலாச்சாரம் ஏனைய சமூகங்களில் வழமையாக   இருந்து வருகின்றது.

இன்றைய தேர்தல் சூழலில் வடக்கு¸ கிழக்கு தமிழ் கட்சிகளும்¸ முஸ்லிம் கட்சிகளும்¸ தாங்கள் ஆதரவு வழங்கவிருக்கும் வேட்பாளர்களிடம் முன் வைக்கவிருக்கும் தமது அரசியல் கோரிக்கைகளை தயாராக வைத்திருக்கின்றார்கள்..

அரசியல் கட்சிகளுக்கப்பால்; தொண்டு நிறுவன அமைப்பாகவோ.. அல்லது சமூக அரசியல் புரியும் அமைப்பாகவோ இருந்தாலும்  ஜனாதிபதி வேட்பாளர்களை  ஆதரிக்கும் பட்சத்தில் அவர்களை அணுகி தங்கள் கோரிக்கைகளை முன் வைக்கலாம். இச் சந்தர்ப்பத்தில்¸ எமது ஆதரவை வழங்குவதற்கு  முன்பு¸ எமது கோரிக்கைகள் ஓர் உடன்படிக்கையாக பதிவாக வேண்டுமென்பதும் அவசியமாகிறது.

இன்றைய நிலையில்  தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கும்  அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வடக்கு கிழக்கு தமிழர்  பிரச்சினைகளுக்கான தங்களது நிலைப்பாடுகளை தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் காட்டுவதற்கு இடமளித்து வருவதாக அறியமுடிகிறது. ஐக்கிய தேசிய முன்னணி…சிறி லங்கா சுதந்திரக் கட்சி …பொது ஜன முன்னணி…மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தேசியக் கட்சிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை செய்து கொள்வது முக்கியமென முன் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் மலையகக் கட்சிகளை ஒரு பொருட்டாகக் கூட அவைகள்  மதிக்கவில்லை..!  மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி வழமைபோலவே அவர்கள்  கண்டு கொள்ளாமலிருக்கின்றார்கள். காரணம் மலையகத் தமிழ் மக்களின் அரசியல்  பிரச்சினைகள் சிங்களக் கட்சிகளிடமும்…சிங்கள அரசியல்  வாதிகளிடமும் சென்றடையவில்லை. இன்று வரை நாடாளுமன்றத்திலிருக்கும் அனைத்து பெரும்பான்மை இன   பிரதிநிதிகளும்  மலையகத் தமிழ் மக்களின் அடிப்படை அரசியலைப் பற்றி அறிந்தவர்களாக  இல்லை.. இது வரலாற்று சாபக் கேடாகும். இந்த சாபக் கேட்டுக்கு நமது தலைமகள் காரணமாகும்.

 இவ்வாறான நிலைமையில்  ஊடக வாயிலாகவேனும் தங்களது கருத்துக்களை¸ மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்தை சென்றடைய சமூக நலன் விரும்பிகள் முன் வர  வேண்டும்.

இக் கட்டுரையில்  மூன்று அடிப்படை தேசிய உரிமைகள் முன் வைக்கப் பட்டிருக்கின்றன.

இன்று இலங்கை அரசியல் யாப்பில் குடியுரிமை பற்றிய 26 வது உறுப்புரையில்  “இலங்கை வம்சாவளி பிரஜைகள்” – “பதிவு பிரஜைகள்” என்று பிரகடனப் படுத்தியுள்ளது.  அதே நேரம் இரண்டு தகைமைகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது  என்றும் குறிப்பிடுகின்றது. அப்படியாகின் ஏன் இந்த இரு பிரிவுகள் என்பது பற்றிய தெளிவு போதாமல் உள்ளது.  மலையகத் தமிழர்கள்   பதிவுப் பிரஜைக்குள்ளடங்குகின்றனர்.   சர்வதேச குடியுரிமை சட்டத்தின் படி ஐந்து ஆண்டுகள் ஒரு நாட்டில் வாழ்ந்திருந்தால் அக் குடிமக்கள் அந்நாட்டின் குடிகளாவர். அவர்களுக்கு முதலாம் தகைமை இரண்டாம் தகைமை என்றில்லை.!


  1. ஆகவே 200 ஆண்டுகளை  அண்மிக்கும் எம் மக்களை பதிவு பிரஜை அந்தஸ்திலிருந்து வம்சாவளி பிரஜை அந்தஸ்துக்குள்ளாக்க வேண்டும்.  இது முதல் கோரிக்கையாகும்.

  2. எமது தேசிய அடையாளம் “மலையகத்தமிழர்” என்று பதிவாக வேண்டும்.

    இதில் எமக்குள்ளே முரண்பாடுகள் இருப்பின் “இந்திய” என்ற சொல்லற்ற தனியான தேசிய அடையாளத்தைப் பதிவு செய்தல் வேண்டும். “இந்திய வம்சாவளியினர்” என்பது வரலாற்றுப் பாரம்பரியத்துக்குரிய சொல்லாகும். அது இன்னொரு நாட்டுச் சட்டத்துக்குள் வரவேண்டிய  அவசியமில்லை. அது சட்டங்களுக்கப்பால் நிலைத்திருக்கும்.

    இந்த தேசிய அடையாளக் குளறுபடியின் காரணமாக இன்று வரை நாட்டின் குடிசனத்தொகை மதிப்பீட்டில்  மலையகத் தமிழரின் உண்மையான  எண்ணிக்கை  பதிவாக்கப் படவில்லை.

    மேற் குறிப்பிட்டுள்ள இரண்டு கோரிக்கைகளும் யாப்பு சீர்திருத்தத்துக்குள்ளானவைகளாகும்.

  3. நாட்டின் தேசிய இருப்பை  நிலை நிறுத்திக் கொள்வதற்கு  எம் மக்கள் வாழ்வாதாரத்துக்கான நிலவுடைமை சமூகமாகவிருக்க வேண்டும். ஆகவே வாழ்வாதாரத்துக்கான நிலப் பங்கீடு எம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    இம்மூன்று கோர்க்கைகளுமே மலையக மக்களுக்கான அடிப்படை அரசியல் கோரிக்கைகளாகும். ஏனையவையெல்லாம் பொதுவாக எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டிய ஜனநாயக உரிமைகளாகும்..

    ஆகவே இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலிருந்தாவது புதிய அரசியல் திருப்பங்களுக்கான   மாற்றங்களை மலையகக் கட்சிகள் உருவாக்குமா என்று எதிர்பார்ப்போம்.


மலைகளின் மக்கள்......
-மு.சிவலிங்கம்


மேகமலைத் தோட்டத்துப் பக்கத்தில்தான் வானக் காடு தோட்டம் இருக்கிறது. வானக்காடு தோட்டத்துப் பக்கத்தில் தான் ஆனைத் தோட்டம் இருக்கிறது. மேகத்தை அந்த மலை சதா தழுவிக் கொண்டிருப்பதால் மேகமலை என்றும் வானத்தை அந்தக் காடு உரசிக் கொண்டிருப்பதால் வானக்காடு என்றும்¸ யானையைக் கண்டு விரட்டியதால் ஆனைத்தோட்டம் என்றும் அந்தக் காலத்தில் தென்னாட்டுத் தமிழர்கள் இலங்கைக் காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது வைத்த காரணப் பெயர்கள் தாம் இவைகள்... இந்தத் தோட்டங்களுக்குப் பக்கத்திலே 'மண்ராசி” என்றும் ஒரு தோட்டம் உண்டு. மண்ணிலே ராசி கண்ட மக்கள் அப்படி மகுடமிட்டிருந்தார்கள்!

மண்ராசி தோட்டத்துக்கு நேரே உச்சியிலிருக்கும் மலைக்குப் பெயர்தான் ராமர் மலை. அந்த மலையருகில் தான் இன்று எட்டாம் நம்பர் மலை கவ்வாத்து... மலையகத்து கொள்ளையழகுகளையெல்லாம் கூட்டி மெருகுக் காட்டிக் கொண்டிருக்கும் அந்த மலையிலுள்ள ஒரு வட்டப் பாறையில் மூன்று நான்கு அடி உயரத்தில் ஒரு கற்கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்குள் 'ராமர் அந்த காலத்தில் எய்த அம்பு ஒன்றை நாட்டியிருக்கிறார்கள்! அதுதான் ராமர் கோவில். 

“இந்தக் கோவிலிருக்கும் உச்சிமலையிலிருந்து பார்த்தா இந்தியா தெரியுமோ...? ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியுமோ..?” என்று அந்தக்காலத்தில் காடழிக்க வந்த தென்னாட்டு மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டார்களாம்.... 

அதே மலையில் தான் இன்றைய புதிய பரம்பரையினரும் காடு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் ....

வெள்ளி வார்ப்புகளால் கவ்வாத்து கத்திகள் பளபளவென மின்னுகின்றன. வெய்யில் ஏறுவதற்குள் பாதி வேலையை முடித்துக் கொண்ட தொழிலாளர்கள் சிவராமனைக் கூட்டத்தை ஆரம்பிக்கும்படி அவசரப் படுத்தினார்கள். 

மேலும் படிக்க....

மதுர கீதம்...
-மு.சிவலிங்கம்


அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள் இப்படி பலவாறு அவனது வாழ்வுச் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடும் மலைச்சரளைகளென உதிர்த்துக் கொண்டிருந்தன.... 

அந்த¸ பெரிய குப்பைமேடு அந்த லயத்துக்கோடியில் தான் இருக்கிறது. பத்து வீடுகளை வரிசையாக்கிக் கொண்டிருக்கும் லயத்தின் குப்பைக் கூளங்களெல்லாம்¸ அந்தக்கோடிப்புற குழியை நிறைத்து மேடாக்கிவிட்டிருந்தன. அந்தக் குப்பை மேட்டின் ஜீவசத்துக்களையெல்லாம் உண்டு கொழுத்து அதையே ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து¸ பூத்துக்குலுங்கி¸ காய்த்துக் கனிந்து கொண்டிருக்கிறது ஒரு கொய்யாமரம். 

அந்த கொய்யாமரத்தின் உச்சிக்கிளையில் குரங்கைப் போல உட்கார்ந்து கால்களை ஆட்டி வரட்டுச் சத்தமிட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான் சீனி. 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!”

கொய்யாமரத்தின் எதிர்ப்பள்ளத்தில் ஓர் ஓடை ஓடையின் மறுகரையில் ஒரு லயம்¸ அது ஆத்து லயம் அங்கிருந்தும் அதே பாட்டு மோகனராகத்தில் தென்றலோடு மிதந்து வருகிறது. மாரிக்குட்டி¸ ‘கீச்சுக்’ குரலில் அழகு காட்டி பாட்டோடு ஆட்டமும் போடுகிறாள். 


மேலும் படிக்க....