Mu Sivalingam Short Stories - Madhura Geetham

மதுர கீதம்...

- மு.சிவலிங்கம்

அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள் இப்படி பலவாறு அவனது வாழ்வுச் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடும் மலைச்சரளைகளென உதிர்த்துக் கொண்டிருந்தன.... 

அந்த¸ பெரிய குப்பைமேடு அந்த லயத்துக்கோடியில் தான் இருக்கிறது. பத்து வீடுகளை வரிசையாக்கிக் கொண்டிருக்கும் லயத்தின் குப்பைக் கூளங்களெல்லாம்¸ அந்தக்கோடிப்புற குழியை நிறைத்து மேடாக்கிவிட்டிருந்தன. அந்தக் குப்பை மேட்டின் ஜீவசத்துக்களையெல்லாம் உண்டு கொழுத்து அதையே ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து¸ பூத்துக்குலுங்கி¸ காய்த்துக் கனிந்து கொண்டிருக்கிறது ஒரு கொய்யாமரம். 

அந்த கொய்யாமரத்தின் உச்சிக்கிளையில் குரங்கைப் போல உட்கார்ந்து கால்களை ஆட்டி வரட்டுச் சத்தமிட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான் சீனி. 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!”

கொய்யாமரத்தின் எதிர்ப்பள்ளத்தில் ஓர் ஓடை ஓடையின் மறுகரையில் ஒரு லயம்¸ அது ஆத்து லயம் அங்கிருந்தும் அதே பாட்டு மோகனராகத்தில் தென்றலோடு மிதந்து வருகிறது. மாரிக்குட்டி¸ ‘கீச்சுக்’ குரலில் அழகு காட்டி பாட்டோடு ஆட்டமும் போடுகிறாள். 

சீனி உச்சிக்கிளையில் சைக்கிள் ஓட்டுகிறான் மாரிக்குட்டியின் எதிர்ப்பாட்டு அவனை என்னவோ செய்ய¸ அவன் மேலும் மேலும் அந்த உச்சி மரக் கொப்பின் மேல் ஏறுகிறான். மாரிக்குட்டி 
சத்தமிடுகிறாள். 

“ஐய்யோ அதுக்கு மேலே ஏறாதே.”

ஹும்¸ இன்னும் பாரு ஒசரப் போறேன்!” சீனி - குரங்காகவே மாறிவிட்டான். மாரிக்குட்டிக்கு கால் கூச்சம் எடுக்கிறது. 
“சீனி கொரங்கோ.... எறங்குடா கீழே” சொந்த உணர்வுகள் உந்த சின்ன இதயம் மீறிட்டு அழுகிறது. சீனிப்பயல் கொய்யாப்பழத்தைப் பிடுங்கி வீசுகிறான்; அது கல்லிற்பட்டுச் சிதறுகின்றது. அவள் கைகளுக்கு அகப் படவில்லை. 

'சீனி மாமோவ்! வூட்டுக்கு கொண்டு வாயேன்” சீனிப்பயல் மரத்தை விட்டு இறங்கு முன் பாதி உயரத்திலிருந்தே குப்பை மேட்டில் குதிக்கிறான். குப்பை மேடு அவனுக்கு பஞ்சு மெத்தை! அந்த சிற்றோடையைக் கடக்கும் மரப் பாலத்திலோடி மாரிக்குட்டிக்கு அழகழகாய் கொய்யாப்பழங்கள் கொடுத்தான்.

கொய்யாப்பழங்களை வாங்கு முன்னே மாரிக்குட்டி 'கோ”வென அலறிவிட்டாள். குப்பை மேட்டில் தொண்ணூற்றொன்பது வீதம் கிடக்கும் கண்ணாடி ஓடுகளில் ஒன்று அவனது குதிக்காலைப் பதம் பார்த்துவிட்டது. ஆடறுத்த இரத்தமாக அந்த இஸ்தோப்புத்திண்ணையே நனைந்து விட்டது. மாரிக்குட்டி பாவாடைச் சீலையைக் கிழித்துக் கட்டினாள். அவன் குப்பை மேட்டுக் காலை கழுவி அடுப்பு ஒத்தடம் கொடுத்தாள். இந்த மாதிரி எத்தனையோ நாட்களில் குப்பை மேட்டுக் கண்ணாடி ஓடுகளுக்குத் தன் ரத்தப்பலியைக் கொடுத்த சீனி சிரித்தான். அந்த மாரிக் குட்டியை அணைத்து அவள் உச்சித் தலையில் முத்தம் மோந்தான். 

இருவரும் அடுப்பங்கரையில் அமர்ந்து கொண்டு கொய்யாப்பழம் தின்றனர். காலம் பள்ளத்தில் ஓடும் நதியாகிக் கொண்டிருக்கிறது. மாரியும் சீனியும் லயத்தைச் சுற்றி புளியங்கொட்டை பொறுக்குவதிலும்¸ மாங்கொட்டை எத்துவதிலும் மாரியம்மா கோவிலில் போய் நொண்டி விளையாடுவதிலும் தோட்டத்து கொழுந்து லொறியை விரட்டுவதிலும் முன்னணியில் நின்றனர். 

சீனிப்பயலுக்கு அந்த நான்கு லயத்துப் பையன்களெல்லாம் ஒரே பயம். சீனியின் உத்தரவின்றி அந்த குப்பை மேட்டில் விழுந்து கிடக்கும் கொய்யாக்கனிகளை யாரும் பொறுக்கிவிட முடியாது. மாரிக்குட்டி கண்டு விட்டாலும் போதும் சீனிப்பயலிடம் போய் கயிறு திரித்து முடிச்சுப் போட்டு¸ அவிழ்க்க முடியாது போனால் வெட்டவும் சொல்லி விடுவாள். அதன் பிறகு சீனி குற்றவாளிகளின் மண்டைகளை உடைக்க¸ மண்டை உடைபட்டவர்களின் பிராது கிளம்பி பெரியவர்களின் வாய் வம்புகளை வளர்த்து¸ அவர்களில் யாருக்காவது மண்டை உடைக்கப்பட்டு பொலிஸ்¸ கோர்ட்டு¸ நாடு என்றெல்லாம் ஏறி இறங்கிய காவியங்களும் பல உண்டு. 

சீனிப்பயலால்தான் மாரிக்குட்டி கெடுறாள். இல்லை மாரிக்குட்டியால் தான் சீனிப்பயல் கெடுறான். இப்படி வாதி பிரதிவாதிகளின் தெருக் கூச்சல் அந்த லயத்துக் கும்பல்களிலிருந்து கிளம்பாத நாட்களே இல்லை. ஒன்றுபட்ட அவ்விரண்டு சிட்டு உள்ளங்களைப் பிரிவு படுத்தி தனித்து விட எத்தனையோ பெரிய சீவன்களெல்லாம் தலை எடுத்துப் பார்த்தன. எதுவும் சரிப்படவில்லை. 

மாரியும் சீனியும் இப்படி நெருங்கிப் பழகுவதில் இரு வீட்டாருக்கும் புதினம் எதுவும் தென்படவில்லை. பதிலாக வாஞ்சைகள் வளர்ந்து கொண்டிருந்தன. அச்சின்னஞ் சிறுசுகளின் விளையாட்டு நேசத்தோடு சொந்த உறவும் சம்பந்தி வழியும் கூடவே இருந்தன. மாரிக்குட்டியின் அப்பா கூட 'செல்லக் கலியாணம் செஞ்சுப்புட்டா என்னா? இல்லாட்டி நிச்சயத்தாம்பூலம் மாத்திக்கிட்டா என்னா? என்று “என்னா” போடுவதில் அதிக அக்கறை எடுத்து வந்தார். 

குப்பை மேட்டை கோழிகள் கிளறின. பூச்சியும் புழுக்களும் அவைகளின் தேவலோகத்துத் தீனியாகிக் கொண்டிருந்தன. 

மாரிக்குட்டி அப்பாவுக்கு சுட்டரொட்டியோடு தேயிலைச்சாயம் கொண்டு போகிறாள். அவளோடு சீனிப் பயலும் ஓடுகிறான். 
'சீனி மாமோவ்...!” மாரிக்குட்டி பாடத் தொடங்கினாள். 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!”

சீனிப்பயலும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு நாய் சத்தம் போடுகிறான். 

'அப்படி ஆத்துக்கு அந்தப் புறம்....! 
அப்படி ஆத்துக்கு அந்தப் புறம் ...!”

அதல பாதாள ஒரு பள்ளத்தாக்கில் - காட்டருவியின் பயங்கர ஓலத்தில் அவர்களின் இன்பக் கூச்சல் மட்டும் எதிரொலியாய் எழும்பி மேட்டுத் தேரியில் காற்றோடு கலக்கின்றன. தேயிலைச் செடிகளில் பளிச்சிட்ட பனி நீரை இறைத்த வண்ணம் அந்த மலைப்பாதையில் ஓடுகின்றன அச்சிறுசுகள்...

நாட்களை வாரம் விழுங்கிய குற்றத்தால் மாதம் தண்டிக்க அந்த இரண்டையுமே உண்டு பெருத்தது வருசம்..

மாரிக்குட்டியை முன்னைப்போல சீனிப்பயலோடு சேர்ந்து விளையாட விடுவதில்லை. சீனிப்பயலுக்கும் ஒருநாள் உதை விழுந்தது. 'நீ இனிமே மாரியோடு எங்கேயும் சேர்ந்து போகக் கூடாது.” சீனியும் ஆரம்பத்தில் அழுதவன்¸ இப்போதெல்லாம் குப்பை மேட்டிலிருந்து கொண்டு கொய்யாப் பழம் வீசுவதில் தவறுவதில்லை. 

'அழகான கொய்யாப்பழம் தின்னேன் தின்னேன்” என்று அவள் தோப்புக்குள்ளிருந்து ஆடிக்காட்டும் அழகை எத்தனை முறை அவன் பார்த்து மகிழ்ந்திருக்கிறான்...! 

- ஓர் இன்பக் கிளுகிளுப்பு .... 

கட்டுண்ட வெள்ளம் கரை உடைத்துப் பாய்ந்தது போல் ஒருநாள் சீனி மாரி வீட்டுக்குள் புகுந்தான். கை. நிறையக் கனிந்தப் பழங்கள்.... இருவரும் எச்சில் படுத்தி உண்டு களிக்கின்றனர். 

“மாரி ...”¸ 
'ஹும்...” 

அவள் தேம்பினாள்... விளங்காத பருவத்தில் புரியாத கதையைத் தெரியாத அறிவில் பேசுகின்றனர்... 

குப்பை மேட்டில் கோழிகள் கொக்கரிக்கின்றன. கீரி விரட்டுகின்றது. சீனி சிற்றோடையில் இறங்கி ஓடுகிறான். 

- இந்த வாழ்க்கையில்.... காலம் என்ற மலர் பூத்து மணக்கிறது. 

அந்தச் சுகந்த வாடையில் மாரியும் மலர்ந்து விட்டாள். 
புடைத்து வரும் அரும்போடு பூத்துச் சிரிக்கும் கொழுந்து தென அவளது வாலிப சௌந்தர்யம் இனிப்பை ஏந்தி நின்றது. தாவணி பாவாடையோடு விளங்கும் அவள் இப்பொழுதெல்லாம் லயத்தைச் சுற்றுவதில்லை. பக்கத்து வீட்டு கோமளம் பிள்ளையோடு 'பாண்டி' உருட்டுவதோடு பொழுது கழிந்தது. சீனிப்பயலை மனத்துக்குள் நினைக்கக் கூட அவளுக்கு ஒரு 'பயம்' - 'இதயச்சு10டு' உருவாகியது!" 

- சீனி ....

கொய்யா மரத்தில் ஏறி குரங்காட்டம் போடுவதிலெல்லாம் அவனுக்கு இப்பொழுது விருப்பம் கிடையாது. மாரிக்குட்டியை மனத்துக்குள் நினைத்து - நினைத்து அவன் மௌனியாகிக் கொண்டிருக்கும் வேளையில்..... 

அந்த குப்பை மேட்டுக் கொய்யா மரம் மீண்டும் பூத்துக் குலுங்கியது. அது காய்த்துக் கனிந்து கொண்டிருக்கும் பொழுதே வெளவால்களும் குருவிகளும் முற்றுகையிடுகின்றன. அந்தச் சிட்டு அமர்ந்திருக்கும் சின்னக் கிளையில் சீனியும் ஒருநாள் உட்கார்ந்திருந்தான். அவனது அரும்பிய முகத்தில் சிந்தனை வடுக்கள் படர்ந்து சிவந்தன. 

பறவைகள்தான் கனிந்த மரங்களைத் தேடியோடுகின்றன. சீனியின் இதயம் சுடேறியது. 

“ஆத்துக்கு அந்தப்புறம்...”

இப்பொழுதெல்லாம் அந்தப் பாட்டை அவன் வாய்க் குள்ளேதான் முணகிக் கொள்கிறான். 

ஒரு நாள். 

முழுமதியின் பூரணவிளைச்சல்¸ அந்தப் பொலிவின் உத்வேகத்தில் இரவு உள்ளடங்குகிறது. அந்த மரப்பாலத்தின் அருகிலிருக்கும் வாழைக் கூட்டத்தின் நிழலில் மாரியும் சீனியும் கொய்யாப்பழம் தின்னுகின்றனர். 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!” 

அந்த மதுர கீதத்தில் இருவரும் திளைத்து 'கெக்களி கொட்டுகின்றார்கள். காலம் இவர்களின் களவுக்கு ஆசி கூறியது. கொழுந்து மலை - முகிற்குன்று - மலைச்சாரல் புல்வெளி - காட்டருவி இங்கெல்லாம் மாரியும் சீனியும் கந்தர்வ நடனம் புரிந்ததை ஊரின் வாய் அசுத்தப் படுத்தியது சீவியம் முழுவதுமே அடுத்தவர்களை இழிவு படுத்தி பொல்லாங்கு உரைக்கும் அவர்களுக்கு இப்படி ஒரு ஆணும் பெண்ணும் வயசு வந்த காலத்தில் சந்து பொந்துகளில் சிரித்துப் பேசுவதைக் கண்டால் அவர்களது அசுத்த வாய்களுக்கு ஒரு நாற்றமெடுத்த தீனி கிடைத்தது போல் ஆகாதா...”

'என்னா இருந்தாலும் இப்படியா சிரிக்கப் போயி கெடக்கணும்...?” - தோட்டமே தம்பட்டம் அடித்தன. இருந்தும்.... இம்மலையகத்துப் பசுமைகள் செழித்தோங்கி பொலிவு பெற சம்பந்தி உறவுகள் பசளையிட்டு நீர் வார்த்தன. 

சீனி தோட்டத்தில் “பேர் பதிந்து” வேலை செய்யத் தொடங்கி விட்டான். 

பங்குனியும் பிறந்து விட்டது. மாரியின் வீடும்¸ சீனியின் வீடும் மங்களப் பேச்சுக்கள் பேசினர். சீனி உழைத்த கூலியில் சீட்டுப் பணமும் கிடைத்துவிடும். என் கண் வெளிச்சத்திலேயே இந்தப் பயலுக்கு ஒரு மாலை எடுத்துப் போட்டுட்டா போதும்” என்று சீனியின் அப்பாயி கிழவியும் அவசரப்பட்டாள். 

மாரி¸ சீனியின் காலவோட்டம் ஒரு நல்ல சிறுகதையை தெளிந்த ஞானமுள்ள ஓர் வாசகன் லயித்துச் சுவைப்பது போலத் தொடர்ந்தது. 

காலமென்னும் பூந்தோட்டத்தில் எப்பொழுதும் தென்றல் வீசுவதில்லை ; திடீரெனப் புயலும் வீசி அந்த இனிய மலர்ச் செடிகளைப் பூவோடும் மொட்டோடும் பூண்டோடும் ஒடித்துச் சேற்றில் புதைத்து விடவும் செய்து விடுகிறது. 

அந்த அழகிய சிறுகதை ஒரு குறுகிய விமர்சனத்தால் பழுதடைவது போல நீல வானத்தில் கார்மேகம் படர்ந்தது. 

- இடியின் குமுறல். 

- மின்னல் ஒளி.

வானம் 'கோ” வெனக் கதறுகிறது. விடாத மழை¸ பிரளயம் தன் கோர உருவத்தைக் காட்டுகிறது. மகாவலி மங்கை (மகாவலி மலை நாட்டில் உற்பத்தியாகி ஒடும் ஒரு நதியின் பெயர்.) தலைவிரித்தாடி பேய்க்கோலமாய் வெறி கொண்டு ஓடுகிறாள். அவளது கற்புத் தன்மை களங்கப்பட்டு கறை படர்ந்த உடலால் ... மேனிக் கூச்சத்தால் ... பலி கொண்ட வேகத்தில் புரளுகின்றாள் 

'... ஆத்துக்கு அந்தப்புறம்...”

அந்த மதுர கீதம் மாரிக்கும் சீனிக்கும் இதய கீதமாகிக் கொண்டிருக்கும் போதுதான் .... அந்தச் செய்தி கல்யாண வீட்டில் இழவு விழுந்த கதையாகி விட்டது. இராஜ தர்மம் நெறி பிசகித் தன் கற்பை இழந்து விட்ட நேரம்... நாட்டின் குடிமக்கள்' என்ற ஒரு உடலை இனத்தாலும் மொழியாலும் பிளவு படுத்திக் கூறு போட்டுப் பங்கு பிரித்து விட்டது 'அரசு” என்ற ஒரு சக்தி. அந்த சக்தி மாரி சீனி வாழ்க்கையில் விதியாக நுழைந்தது. வெண்ணெய் திரண்டு வர தாழி உடைந்த கதையாய் அந்த இருவர் வாழ்க்கையிலும் இடி விழுந்தது.... 

'இந்த வருசத்தில் மாரிக் குடும்பம் இந்தியா போக வேண்டும். இது 'சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கட்டளையாகும் ஐந்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் மக்களை இந்தியா பதினைந்து வருசங்களுக்குள் திருப்பி அழைத்துக் கொள்வதும்... மூன்று லட்சம் மக்களை இலங்கை¸ குடிகளாக்குவதும்... மீதமுள்ள ஒரு லட்சத்து எழுபத்தை யாயிரம் மக்கள் நிலையற்ற 'பிறகு பேசுவோம்” என்ற ஒரு கொடுமையான காவியம் ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு படைக்கப்பட்டது. 

ஒரு நாட்டிலே வரலாறு படைத்த மக்களை - மனித உரிமைச் சட்டத்தின்படி ஐந்து வருடங்கள் ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டால் அவர்கள் அந்த நாட்டு குடிகளாக வேண்டிய மக்களை அரசியல் வாதிகள் விலை பேசினார்கள். 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த மக்களை - அவர்களை வழி நடத்தி வந்த தொழிற்சங்கத் தலைவர்களை அந்த சமூகத்தில் உருவாகிய சிந்தனைவாதிகளை - புத்தி ஜீவிகளை அணுகி கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகள் மாத்திரமே அம்மக்களின் தலைவிதியை மாற்றியமைத்தார்கள்... 

இந்தச் சட்டத்தின் மடியில் இலங்கையைச் சுரண்டி கொண்டிருக்கும் இந்திய பெரும் வர்த்தகர்களும் குட்டி வியாபாரிகளும் கௌரவ பிரஜைகளாகவும் 'டி.ஆர் பி. (Temporary Resident Passport) காரர்களாகவும் வளர்க்கப்பட்டார்கள். ஆனால் இந்த நாட்டை உருவாக்கிய தொழிலாளர் இனத்தை அந்தச் சட்டத்தின் கோரப்பற்கள் கடித்துக் குதறின... 

சட்டத்தின் விசாரணையில் இலங்கைப் பிரஜாவுரிமை மறுக்கப்பட்டவர்கள் நாடற்றவர்களாகினர். இந்திய பாஸ்போர்ட் எடுத்தவர்களுக்கு இந்த நாட்டிலே வாழ்வதற்கு காலக்கெடு கொடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் பலவந்தமாக பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு¸ விசா 'குத்தி¸ குடும்ப கார்ட் நிறப்பி¸ சேமலாப நிதியை எடுத்து பயணத்தை ஏற்பாடு செய்வதற்கு தோட்ட நிர்வாகம் துணை நின்றது. பாஸ்போர்ட் காலாவதியான மக்கள் போலீஸ்வண்டியில் ஏற்றப்பட்டு¸ நகரசபை வண்டியில் நாய்களைப் பிடித்துப் போவது போல..... கொழும்பு கொம்பனித்தெரு சிறைச்சாலையில் தள்ளப்பட்டார்கள்¸ 

காலைப்பனியோடு மலையேறி தேயிலைச் செடிகளுக்கு உரம் போட்டவன்¸ தன் கால் கைகளைக் கழுவாமலேயே பொலீஸ்வண்டியில் ஏற்றப்படுவான். அவனது மனைவி¸ பிள்ளைகள் பழைய துணிகளை அள்ளிக்கொண்டு .... நிர்வாகம் நீட்டிய சில்லறைகளோடு தலைமன்னார் இறங்குதுறை சென்றடைய வேண்டும். 

இப்படி கண்ணீரில் கரைக்கப்பட்ட மனிதத் தவிப்புகள் எத்தனை லட்சங்கள்...? 

இந்திய சமூக அமைப்பின் பேய்ச்சக்திகளான ஜமீன்தார்களுக்கும் - மிராசுதார்களுக்கும்¸ பண்ணையார் களுக்கும் பயந்து¸ அடிமைகளாக - கூலி விவசாயிகளாக வாழ முடியாமல் தென்னாப்பிரிக்கா¸ மலேசியா¸ பிஜித்தீவு¸ இலங்கை தீவு என்று வாழ்வைத் தேடி சிதறியோடிய மக்கள் இன்றுவரை வாழ்வைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.... 

ஆட்சி மண்டபத்தின் கட்டளைப்படி. பெரும்பங்கு நாடு  கடந்து கொண்டிருக்கிறது. அந்த நாடோடும் முறை இந்த மாதம் மார்கழி முடியுமுன்பு மாரிக் குடும்பத்தையும் அணைத்துக் கொள்ளும். 
அந்த ஏழைக் குடும்பம் குமுறியது… குன்னிகுறுகிக் கண்ணீர் வடித்தது. ஆட்சி மண்டபத்தின் கால்களைக் கட்டிப் பிடித்து கதறியது. தங்களது காலச் சரித்திரத்தின் கதைகளையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதது. 

- எதுவும் நடைபெறவில்லை 

சட்டத்தின் கண்களுக்கு தர்ம அதர்மதத்துவங்கள் புலப்படுவதில்லை. மாரிக்குடும்பம் இந்தியா செல்லவேண்டும்; சீனிக் குடும்பம் இலங்கை பிரஜையாக்கப்பட்டுவிட்டார்கள். சீனி எவ்வளவோ மன்றாடினான். மாரிக்குடும்பத்தோடு தனது குடும்பத்தையும் அந்தக் அக்கரை மண்ணுக்கு அனுப்பும்படி வேண்டினான். தங்களது தெய்வீகக் காதலைக் காட்டினான். அந்தக் காதலின் புனித கோயிலுக்குப் பூஜையாகக் கிடைக்கப் போகும் அந்தக் களவு மலரையும் கூறினான். 

சட்டத்தின் சிக்கல் இரண்டு முனையிலும் அகப்பட்டு தடுமாறின. 

அந்த ஏழைகள் அழுதக் கண்ணீர் ஆட்சிப் பாறையின் மேல் விழுந்து வடிந்தது. 

உலகத்தைப் புரிந்து கொண்ட சீனியை அன்றுதான் தத்துவங்கள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன. சட்டம் என்பது ஒரு சிலந்திக் கூடு.... அங்கு எளிய பூச்சிகள் தான் சிக்கி மடிகின்றன. வலிமை பெற்ற வண்டுகள் துளைத்து துவாரமிட்டு பறந்தோடி விடுகின்றன." 
‘அல்லல்பட்டு ஆற்றாது அழுத’அந்த ஏழைக்குடும்பம்¸ ஈரல் பிடுங்கப்பட்ட மனிதப் பிண்டமாய் மாரிக்குட்டியோடு பெரும் பயணம் செய்யப் புறப்பட்டன. 

- சீனி அழுதான். 

“மாரி....! அதை அழிச்சுப்புடு!”

“இஹும்.... மாட்டேன்! அது எங்க சீனி மாமா குடுத்த அழகான கொய்யாப்பழம்...” மாரி அரை பைத்திய மானாள். 

'மாரி பொண்ணு! நீ வாழப்போறவ... நீ வாழ வேணும்! அத... நம்ம காதல் சத்தியமா அழிச்சுப்புடடி...” 

“மாட்டவே மாட்டேன்....!”

இந்த ரகசியப் பேச்சுக்களை கப்பலடியில் மாரியும் சீனியும் கதைக்கும் பொழுது காது கொடுத்த இந்து மகா சமுத்திரம் குமுறி ¸ கொந்தளித்து கொடுமை செய்துவிட்ட சிங்களத் தீவின் மேல் சாடிச் சாடி விழுந்தது. 

- கப்பல் ஊளையிடுகிறது .... 

'சீனி மாமா...! சீனி மாமோவ்....!" 

'மாரி பெண்ணு...! என் உயிரே...! 

கொந்தளிக்கும் கடலில் குதியாட்டமிட்டு கப்பலும் நகருகிறது. 
'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா...” மாரி பாடிய அந்த கீதம் சீனிக்கு இழவுக் குரலைக் காட்டியது… ஆனால் இந்த நாட்டின் கண்களையே கட்டிவிட்டு¸ எத்தனையோ காவல் அதிகாரிகளின் கண்களிலேயும் மண்ணைத் தூவிவிட்டு சீனி மாமாவின் களவு மலரோடு அக்கரை போகும் அவளுக்கு அந்தப் பாடல் மதுர கீதமாக இனித்தது. 

(இக்கதையை அட்டன் இலக்கியவட்டம் திரு.ந.அ.தியாகராசன் மூலமாக 20-05-1968ம் ஆண்டில் தனிப் புத்தகமாக. வெளியிட்டது.)





கருத்துகள் இல்லை: