- மு.சிவலிங்கம்
அந்தத் தனிநபர் பிரேரணைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. பிரேரணை இன்று விவாதத்துக்கு விடப்பட்டிருக்கின்றது.
பிரேரணையை முன்வைத்த உறுப்பினர் தனது உரையை ஆரம்பித்தார்...
பிரேரணைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூக்குரல் சபையைக் குலுக்கிக் கொண்டிருந்தது...
“கரு சபாநாயக்கத்து மனி...! நமது நாட்டில் எலிகளின் தொல்லைகள் என்றுமில்லாதவாறு பாதிப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன... மாகாணங்களிலுள்ள அரிசி களஞ்சியங்கள், மாவு களஞ்சியங்கள் இன்னும் உழுந்து, பயறு, பருப்பு, கடலை, சோளம் எல்லா தானியங்களும் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன... அதிகாரிகள் என்னிடம் முறைப்பாடு செய்த வண்ணமே இருக்கின்றார்கள்...
“நாட்டில் உணவு சேதங்கள் மட்டுமல்ல... எல்லா மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சல் உண்டாகி, வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதை நேற்று சுகாதார அமைச்சர் இந்த சபையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்....”