மலையகத் தமிழரை இணைத்துக் கொள்ளாத தமிழர் பிரச்சினைகள் எதுவும் முழுமையடையாது..!

கடந்த 28.02.2014 அன்று இந்தியப் பிரதமர் மோடி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரான திரு.ஜி. பார்த்தசாரதி அவர்களை மலையகச் சமூக செயற்பாட்டாளர்களான எம்.வாமதேவன், மு.சிவலிங்கம், பெ.முத்துலிங்கம், கலாநிதி எஸ்.சந்திரபோஸ் ஆகிய நால்வர்கள் அடங்கிய குழுவினர் ஹோட்டல் சமுத்திராவில் சந்தித்து உரையாடினர். இக் கலந்துரையாடலில் இந்திய தூதுவராலய அரசியல் பிரிவு செயலாளரும் பிரசன்னமாகியிருந்தார்.


இச் சந்திப்பில் மலையகத் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலைமைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்பே இப் பேச்சு வார்த்தை நடந்தது. திரு.ஜி.பார்த்தசாரதி அவர்கள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் ஆலோசகராகவும் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்படி குழுவினர் தங்களது மகஜர் ஒன்றினையும் மோடி அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கையளித்தனர்.

இப் பேச்சுவார்த்தை நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகியதும், அவரை இலங்கைத் தமிழ் கூட்டமைப்பினர் சந்தித்த போது, மலையகத் தமிழரை ஒதுக்கிவிட்டு, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவது முழுமையான தீர்வாகாது என்று இந்திய தரப்பினர் கூறிவிட்டதாக மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி, வெளியாகிய செய்தியின் தொடர்பாக பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியாளர் திரு.சிவராம கிருஷ்ணன் மு.சிவலிங்கத்திடம் தொடர்பு கொண்டார்.

தங்கள் குழுவினரது பேச்சுவார்த்தையின் பயனாகவே இந்தியத் தரப்பினர் இந்நிலைப்பாட்டினை எடுத்திருக்கலாம் என்று மு.சி. உறுதியுடன் பதிலளித்தார்.






-மு.சிவலிங்கம்