சாந்தி எனது நண்பன். ஆத்மார்த்தம் நிறைந்த சமூகஜீவி...கருத்தியல்வாதி

சாந்தி எனது நண்பன். ஆத்மார்த்தம் நிறைந்த சமூகஜீவி...கருத்தியல்வாதி...

இலங்கையில் மூன்று பிரதேசங்களில் 1960களிலிருந்து 1975வரை இளைஞர் எழுச்சி கிளர்ந்தெழும்பியக் காலமாகும். இலங்கையில் முதன் முதலாக ஓர் ஆத்திரப் பரம்பரை 1960களில் மலையகத்தில்தான் கிளர்ந்தெழுந்தது.. அதன் பின்னரே தான் தென்பகுதியில் ஜே.வி.பி 1970களில் ஆயுதப் போராட்டத்தில் குதித்தது. அதன் பின்னர்தான் வடக்கில் 1975களில் இளைஞர்கள் ஆயுதப்புரட்சியில் குதித்தனர்...அந்த ஆவேசப் பரம்பரை பின்னால் கிளர்ந்தெழுந்த இரண்டு சமூகங்களைச்சேர்ந்த இளையப்பரம்பரையினரைப்போன்று ஆயுதங்களைச் சுமக்கவில்லை..!பதிலாக பேனாக்களைத் தூக்கினார்கள் புற்றீசலைப் போன்று எழுத்தாளர்கள் தோன்றினார்கள். தோட்டவாரியாக சமூக நாடகங்கள் மேடையேறின.வீதிப்பாடகர்கள் தோன்றினார்கள்..தோட்டங்களில் நம்நாடு.. திராவிடநாடு....முரசொலி..மாலைமணி...தென்றல்....முழக்கம்..விடுதலை...போன்ற தி.மு.க ஏடுகள் மக்கள் கரங்களில் தவழ்ந்தன. படித்த ..மட்டத்தினர் சமூக அரசியலில் ஈடுபட்டனர்.




இர.சிவலிங்கம்..திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் மலையக இளைஞர் முன்னணி அமைத்து சமூக அரசியலில் ஈடுபடத்தொடங்கினர். 1972ம் ஆண்டில் அவர்கள் முன்னணியின் கொள்கை விளக்கக் கூட்டத்துக்கு அனைவரையும் அழைத்திருந்தனர். கூட்டம் கொழும்பு 12 விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. கொள்கை விளக்கத்தின்போது சாந்தி முரண்பட்டார். அவரது கூற்றில் "இளைஞர்களின் அணியாகவல்லாமல்.. அதுவும் படித்த இளைஞர்களின் அணியாகவல்லாமல் அனைவரும் பொதுவாக இணைந்த மக்கள் அணியாக ஓர் அமைப்பை அமைப்பதே தேவையானது.." என்பதாகவிருந்தது. தனது நண்பர்களோடு தர்க்கம் செய்தபோது. "இதுதான் எங்கள் கொள்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறலாம்"என்று சிவலிங்கம் சேர் கோபமேலிடப் பேசவும் சாந்தி தனது நண்பர்கள் பலரோடு கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.

(நான் அப்போது அஸீஸ் அவர்களின் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் "ஜனநாயகத் தொழிலாளி" பத்திரிக்கை ஆசிரியராக இருந்தேன்.) நாங்கள் சிலர் ,சிவலிங்கம் சேர் அப்படி வெட்டி பேசியிருக்கக்கூடாதென்று எங்கள் அபிப்பிராயத்தைக் கூறினோம்.அந்த சம்பவம் துயரமானது... இரண்டு நாட்களுக்குப் பின்னர் அஸீஸ் அவர்கள் என்னிடம் விசாரித்தார். அக்கூட்டத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னேன். திம்பிரிகஸ்யாவிலிருந்த தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து டிக்மன் ரோட்டிலிருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று தினசரி தமிழ் பத்திரிக்கை செய்திகளை அவருக்கு வாசித்துக் காட்டுவது எனது வேலையின் ஒரு பகுதி!. அவர் சவரம் செய்துக்கொண்டே....."Yes man..! Indeed..we need such young fellows to inter change ideas.. they have all the rights to express their own ideas. .." என்றார்.

அன்று சாந்திகுமார் வெளிநடப்போடு நின்று விடவில்லை! தனது தலைமையில் நண்பர்களோடு மலையக மக்கள் இயக்கம் உருவாக்கி செயல்படத்தொடங்கினார். இளம் சட்டத்தரணியான சாந்திகுமார்.. காத்திரமான இரண்டு இலக்கிய ஏடுகளான "நந்தலாலா.". தீர்த்தக்கரை" ஆகியன வெளிவருவதற்கு காரணமாக விருந்தவர்.. அதன் பின்னர் படித்த இளைஞர்கள் கூடி மலையகமக்கள் முன்னணியை உருவாக்கி நேரடியாக அரசியலில் இறங்கினர். மலையகத்தில் சமூக அரசியல் தோற்றம் பெறுவதற்கு சாந்திகுமார் வழி சமைத்தார் என்பது மலையக வரலாற்றில் பதிவாகவேண்டிய முதன்மை குறிப்பாகும் .

இளம் சட்டத் தரணியாகவிருந்த அவர் சட்டத் துறையில் ஈடுபட்டிருந்தால் மலையகத்துக்கப்பால் ... இலங்கையில் ஒரு புலமைசார் வழக்குரைஞராக ( academical Lawyer) பரிணமித்திருப்பார். அவரது மறைவு நமது சமூகத்துக்கான துரதிஷ்டமாகும். சாந்தி.. , மறைந்தாலும் மலையக வரலாறு அவனது நாமத்தை சுமந்து நிற்கும்...

கருத்துகள் இல்லை: