இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும்..

இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும். ஐ.நா. பொதுச் சபை 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பிரகடனப்படுத்தியது. எந்த நாட்டு ஆட்சியும்¸ தன்னாட்டு ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்கள்¸ மதங்கள்¸ மொழிகள்¸ தேசிய நிலை ஆகியவற்றின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி 47/135 இலக்கம் கொண்ட தீர்மாணத்தின் படி¸ இன்று இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

( On 18 December 1992 the United Nations General Assembly adopted a resolution recognizing the rights of persons belonging to national or ethnic, religions and linguistic, minorities resolution 47/135 of 18 th December 1992. MIHR Commemorates the day on minorities on 18 th December the day of the adoption of the declaration. )

இலங்கையர்களான¸ தேசிய சிறுபான்மை இனங்களான வடக்கு¸ கிழக்கு¸ மாகாணத் தமிழர்கள்¸ மலையகத் தமிழர்கள்¸ இஸ்லாமியர்கள் ஆகிய இனங்களின் தேசிய உரிமைகள் இன்று வேறு வேறாக உள்ளன.
இவர்களுள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் யாவும் மனித உரிமை மீறல்களாகவே உள்ளன.
இவர்கள் தேசிய நிலைக்கு உறுத்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் நிலமற்ற குடி மக்களாகவே இருக்கின்றனர். அதனால் சுய பொருளாதார நிலையிழந்து¸ தங்கள் வாழ்வாதாரத்துக்கு சக மனிதரை அண்டி வாழ வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்விடம்¸ கிராமங்கள் என்ற தேசியத்தை இழந்து நிற்கின்றது. இவர்கள் கிராமப் புற மக்களாகவன்றி¸ தோட்டப்புற மக்களாகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். (Plantation People)
இவர்களது குடியுரிமை¸ சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. 1948 ம் ஆண்டு ஏவி விடப்பட்ட சட்டங்கள் முதல் 2009 ம் ஆண்டு வரை 12 சட்டங்கள் இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏனைய மக்கள் போலல்லாது பதிவுப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுள்ளனர். பதிவு பிரஜைக்கும் வம்சாவளிப் பிரஜைக்கும் வேறுபாடுகள் இல்லையென்று அரசியல் யாப்பு அறிவித்தாலும் ஏன் இம்மக்களை இன்னும் பதிவு பிரஜைகளாகக் கணித்து வைத்திருக்கின்றது என்பதே எமது உரிமைக்கான கேள்வியாகும்.

இவர்கள் வாழும் பிரதேசங்கள் அரசுக்குரியவை. அரசு இவர்களது வாழ்விடங்களை கிராம மயமாக்க விரும்புவதில்லை. நாட்டில் உள்ளுராட்சிக்குள் இவர்களது வாழ்விடங்கள் உள் வாங்கப்பட வில்லை. இவர்களது உட்கட்டமைப்புக்கு உள்ளுராட்சி நிதி வழங்கப்படுவதில்லை. இன்று வரை (Estate sector) தோட்ட பிரதேசம் என்றே இவர்களது வாழ்விடம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்றும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதிக்குட்பட்ட அல்லது ஆலோசனைக்குட்பட்ட அல்லது சம்மதத்துக்குட்பட்ட விதத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் செய்ய முடியுமென புதிய திருத்தச் சட்டங்கள் அறிவிக்கின்றன. தோட்டங்கள் உள்ளுராட்சிக்கு உள்வாங்கப்படாது¸ தடையாகவிருந்த 33 வது உறுப்புரை நீக்கப்பட்டிருந்தாலும்¸ இந்த பாகுபாடு தொடர்ந்து இருக்கின்றது.
இவர்கள் இன்ற வரை இலங்கைத் தமிழராகவோ¸ மலையகத் தமிழராகவோ தேசிய அடையாளத்தைப் பெறாமல்¸ இந்திய வம்சாவளி என்ற நாமத்துக்குள் இருக்கின்றனர். இவர்களது தேசிய அடையாளத்தை இன்று வரை உறுதிபடுத்திக் கொள்ளாதபடியால்¸ இறுதியாக கணக்கெடுக்கப்பட்ட 1981-2011 வரையிலான 30 ஆண்டுகளுக்கான புள்ளி விபரத்தில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.! இந்த குளறுபடியான கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர் 22 லட்சம் என்றும்¸ இஸ்லாமியர் 18 லட்சம் என்றும்¸ மலையகத் தமிழர் எட்டே 8 லட்சம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் தத்தளிப்பு நிலையில் குடிசன மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டாலும்¸ வடக்கு¸ கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கணிப்பீட்டிலேயே உள் வாங்கப் படுகின்றனர். இதற்கு காரணம்¸ குடிசன தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் இவர்களை இந்தியத் தமிழர்கள் என்றே பதிவேட்டில் அடையாளமிட்டு வைத்திருக்கின்றது.!

இந்த மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளா விட்டால்¸ உலக சனத் தொகை பதிவேட்டிலும் கூட இடம் பெற மாட்டார்கள்.! தேசிய அடையாளமில்லாத அநாமதேயங்களாகவே வாழ வேண்டிவரும்!

அடுத்து ஒரு முக்கியமான தகவல்¸ சில மலையக அரசியல் செயற்பாட்டாளர்கள்…. மற்றும் புத்திமான்கள் பலரும்¸ மலையக மக்களின் மேல் திணிக்கப்பட்ட பிரஜா உரிமை சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன¸ என்று வாய்ப் பேச்சாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்¸ இச் சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன என்ற சட்டத் தகவல் எந்த அரச குறிப்பேட்டிலும் வெளியிடப் பட்டுள்ளதாக அறிய முடியவில்லை. சமூகத்தின் பால் அக்கறை கொண்ட எவராவது ஒரு சட்டவாதி¸ இந்த சந்தேகத்துக்கு தெளிவை தர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய டிசம்பர் 18 ம் திகதியிலிருந்து 2020 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் திகதி வரை மலையக மக்கள் தங்களது மறுக்கப்பட்டு வரும் தேசிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைக் குரலை எழுப்புவார்களா? உரிமைப் போராட்டங்கள் நடத்துவார்களா..? என்பதே இன்றைய தினத்தில் நாங்கள் அனுஷ்டிக்கும் ஏக்கப் பெறுமூச்சாகும்……………

- மு.சிவலிங்கம்



கருத்துகள் இல்லை: