கேட்டிருப்பாயோ காற்றே...! - மு.சிவலிங்கம்

கேட்டிருப்பாயோ காற்றே...! 

- மு.சிவலிங்கம்


இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து, தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது... இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து, அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன... 


அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும் போதுதான் சுய உணர்வு வந்தது... நடப்பது உண்மை சம்பவமே என்று... விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்... 


சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... இனி... தமிழர்களோடும் சேர்ந்து வாழ நினைத்த நம்பிக்கை அற்றுப் போனதாய் அவர் மனம் விரக்தியடைந்தது. கடைசி காலத்தில் இனத் தோடு இனமாய் சேர்ந்து வாழலாம்... என்ற நப்பாசையும் இன்றோடு விட்டுப் போனது... 


***

வேலாயுதம் மாஸ்டர் காலி மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தில் அடிப்பட்டு, கட்டியத் துணியோடு மனைவி, மக்களை இழுத்துக் கொண்டு, செட்டிக்குளத்துக்கு வந்துச் சேர்ந்தவர். குருவி மாதிரி நாற்பது வருசங்கள் உழைத்துச் சேமித்தப் பணத்தில் வீடு கட்டி, தோட்டம், துறவு தேடி, இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் வளர்த்தெடுத்த இறுமாப்பில் வாழ்ந்துக் கொண்டிருந்த போதுதான் 77ம் ஆண்டு ஆடிக் கலவரம் முதற் கட்டத்தை ஆடி முடித்தது... 


இரவு ஏழு மணி கூட ஆகவில்லை. 


மாஸ்டர் வீட்டுக் கதவு உதைக்கப்பட்டது... பின்னர் உடைக்கப்பட்டது... பெற்ரோல் கேனை வீட்டுக்குள் விசிறினான் ஒருவன்... 


“பன பேராகென துவப்பன் எலியட்ட...” (உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே ஓடு) என்றான் இன்னொருவன்... 


அவனைத் தொடர்ந்து திமு... திமு... வென காடையர் கூட்டம் வீட்டுக்குள் நுழைந்தது... ஏற்கனவே வதந்தியைக் கேள்விப்பட்டிருந்தவர், விசயத்தைப் புரிந்துக் கொண்டு, மனைவி, பிள்ளைகளோடு வெளியே ஓடிவந்தார்... 


பெற்ரோல் தீயில் வீடு குபீரென எரிந்து வெளிச்சத்தைக் காட்டியது... கம்பு, கத்தி ஆயுதங்களுடன் விரட்டி வருபவர்களிடம் அகப்படாமல், ஓடி மறைந்து, பதுங்கிப் பதுங்கி... கால்கள் காட்டியப் பாதையில் எங்கோ விளக்கெரியும் ஒரு வீட்டருகில் போய் நின்றார்கள்... அதுவும் ஒரு சிங்களக் குடும்பம்... திரும்பிப் போக நினைத்தவர்களை, அவர்கள் அழைத்து வீட்டுக்குள் மறைந்திருக்கும்படி சொன்னார்கள். 


அக்கம் பக்கத்திலும் தூரத்திலும் சத்தங்கள்... ஓலங்கள்... அதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன... வீட்டுக்காரர்கள் வேலாயுதம் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னார்கள்... 


இரவு சாப்பாடும்... மாற்றுத் துணிகளும்... கொடுத்தார்கள்... விடிந்ததும் ஊருக்கு வெளியே அழைத்து வந்து பஸ் ஏற்றிவிட்டார்கள்... பிரயாணச் செலவுக்குப் பணமும் கொடுத்தனுப்பினார்கள்... அவர்கள் இனவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அப்பாற்பட்ட மனிதாபிமானிகளாக இருந்தார்கள்... 


***

காலி, தெணியாய தோட்டத்திலிருந்து, துரத்தப்பட்டபோது மூட்டை, முடிச்சுக்கள் கிடையாது... கட்டிய துணியோடுதான் ஓடி வந்தனர்... இன்று வவுனியா செட்டிக்குளத்திலிருந்து துரத்தப்பட்ட போதும், மூட்டை, முடிச்சுக்கள் கிடையாது. 


விடிய... விடிய... குழந்தை, குட்டிகளோடு நெடுஞ்சாலை தார் ரோட்டில் உட்கார்ந்துக் கிடந்து, விடியற்காலையில் எழும்பி குடியிருந்தக் காணிகளை, அத்தனைக் குடும்பங்களும் போய் பார்த்தனர். குடிசைகள் சாம்பல் மேடுகளாய் கிடந்தன. பயிர்களுக்கு எந்த சேதமும் நடக்கவில்லை... அதுவரை அவர்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டார்கள்... 


செட்டிக்குளம் டி.ஆர்.ஓ. காரியாலயத்தை அதிகாலையிலேயே போய் முற்றுகையிட்டார்கள்... முற்றுகையிட்டார்கள் என்றுகூட சொல்ல முடியாது, அவர்கள் போராட்டம் செய்யும் ஆவேசத்திலோ, நீதி கேட்கும் நோக்கத்திலோ இல்லாமல், அபயம் கேட்கும் நிலையில் மருவி நின்றார்கள்...


ஒன்பது மணியளவில் டி.ஆர்.ஓ. காரில் வந்து இறங்கினார். காரியாலயத் துக்குள் நுழையாமலேயே படிக்கட்டில் ஏறி நின்று, குழுமியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிரசங்கம் செய்வது போல பேசத் தொடங்கினார். 


அவரின் பேச்சிலிருந்து முன் கூட்டியே நடந்த சம்பவங்கள் யாவும் அவர் அறிந்தவையாகவிருந்தன... 


"நீங்கள் மலைநாட்டிலிருந்து வந்தச் சனங்கள்... யாரையும் கேக்காமல், காணி பிடிச்சு, குடிச போட்டு, விவசாயமும் செய்தனீங்கள்... உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது..? யார் கொட்டில் போடச் சொன்னவை...? யார் காணி பிரிச்சுக் கொடுத்தவை...? சொல்லேலுமோ...?" என்று உரத்தத் தொனியில் வினாக்களைத் தொடுத்தார்.


“ஐயா... நாங்க அகதி சனங்க... எங்க குடிசைகள எரிச்சிட்டாங்க... காணியில் நிக்கவுடாம வெரட்டிட்டாங்க... எங்களுக்குப் போக ஊர் கெடையாது...”


கலவரத்துல காலியிலயிருந்து சிங்களவங்க வெரட்டியடிச்சாங்க… புள்ளக் குட்டிகளோட உயிரப் பாதுகாத்துக்கிட்டு, இங்க ஓடி வந்தோம்... இங்கேயும் அடிச்சு கலைச்சா நாங்க எங்க போறது... எங்க உயிர் வாழ்றது...? நீங்களேதான் அரசாங்கம்... நீங்கதான் எங்களுக்கு ஒதவி செய்யணும்...” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் தெளிவாகப் பேசினார்... 


அரசாங்க அதிகாரிக்குக் கோபம் வந்து விட்டது... 


“சும்மா விசர்கதை கதைக்காதே...” என்று பாய்ந்தார். 


“கொட்டில்கள எரிச்சிருப்பினம்... ஆக்கள விரட்டி இருப்பினம்... ஊர் சனங்கள் குழம்பும் போது, எங்களாலை ஒன்டும் செய்யேலாது...! நீங்க நல்லபடியா உங்கட ஊர் பக்கம் போய்ச் சேருங்கோ... நாங்க எங்கட சட்டம் ஒழுங்க கவனிக்க உதவி செய்யுங்கோ...” என்று பேச்சை முடித்து, திரும்பிப் பார்க்காமல் காரியாலயத்துக்குள் நுழைந்து விட்டார். 


பியோன் வந்து கதவைச் சாத்தினான். விக்கித்து நின்ற குடும்பங்கள் மத்தியில் மரண அமைதி நிலவியது... அங்கே வந்திருக்கும் அத்தனை குடும்பங்களும் டி.ஆர்.ஓ. காரியாலயத்தின் அருகிலேயே உட்கார்ந்து விட்டனர்... போக்கிடம் தெரியாத நிலை... 


“அந்த அரசாங்க அதிகாரி, நாங்க காடு வெட்டுறப்பவே எங்கள் வெரட்டி யிருக்கலாம். அந்த மனுசன் கபடக்காரன்... துரோகத்தனமா எங்கள பாவிச்சியிருக்காரு... காடுகள் அழிச்சி... காணி உண்டாக்கி... கெணறு வெட்டி, பயிர் பச்ச வளந்தப் பொற்கு நடவடிக்க எடுக்கிறாரு... இவரு ஒரு தமுழ் அதிகாரி... தமுழ் சனங்களுக்கு ஒதவி செய்வாருன்னு நம்பிக் கெட்டுப் போனோம்...” என்று ஒருவர் முணுமுணுத்தார்.... 


“பாவி மனுசன்... இவ்வளவு காலமும் சும்மா இருந்திட்டு, இப்ப நிக்க வச்சி கழுத்த அறுக்கலாமா..?” என்று ஒரு பாட்டி அங்கலாய்த்தாள்... 


வேலாயுதம் மாஸ்டர் கடந்த கால நடப்புக்களைச் சொன்னார்... நாங்க இன்னைக்கி நேத்தா வடக்குல வந்து குடியேறியிருக்கோம்.... பிரிட்டிஷ் காரேன் காலத்திலேயிருந்து முல்லத்தீவு, கிளிநொச்சி, வவுனியான்னு நம்ம சனங்க இன்னைக்கி வரைக்கும் காணி நெலத்தோட வாழ்ந்துக் கிட்டுதான் இருக்காங்க... இப்ப மட்டும் இந்த அதிகாரிக்கு என்னா நடந்திருச்சி...? வந்த வழியப் பாத்துக்கிட்டு போகச் சொல்றாரு...?” 


வேலாயுதம் மாஸ்டர், முழு சிங்கள பிரதேசமான காலி மாவட்டத்தில் தமிழனாகப் பிறந்து... கொட்டை போட்டு பழம் தின்றவர். தெணியாய தோட்டத்தில் தமிழ் வாத்தியாராக இருந்தவர்... எத்தனையோ சிங்களவர் களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர்... நாட்டின் நடைமுறை அரசியலை நன்றாக அறிந்தவர். டீ.ஆர்.ஓ காரியாலய வாசலில் கூடியிருக்கும் மக்களிடம் கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டிருந்தார்...


“ஒவ்வொரு வன்செயல் காலத்திலேயும் சிங்கள இனவாதிக்கிட்ட நாங்க அடிபடுறப்பயெல்லாம்... மலையகத் தலவருங்க அரசாங்கக் காலடியிலேயே கெடந்தாங்க..! தானாடாட்டியும் அவுங்க சதகூட ஆடாமப் போச்சி... வட பகுதி தமிழ்த் தலவர்மாருங்கதான் ஆதங்கப்பட்டாங்க... வடக்குல குடியேற எவ்வளவோ ஒதவி செஞ்சாங்க... அவுங்ககிட்டேயும் மலைநாட்டுத் தமிழ் சனங்களப் பத்தி வெவ்வேறு கருத்து வேறுபாடு இருந்திச்சு... தலவர் செல்வநாயகம் நம்ம சனங்கள ஆதரிச்சாரு... மந்திரி பொன்னம்பலம் வெறுப்பு காட்டினாரு... 


அவர் தொடர்ந்து பேசினார்... காந்தியம் நிறுவனத்தையெல்லாம் மறக்க முடியுமா...?” ஓமந்தை, குருவிமேடு, பம்பைமடு, செக்கடி பிளவு, கணேசபுரம், கல்லியங்காடு... குடாச்சூரி... வாரிக்குட்டியூர்... கப்பாச்சி, அழகாபுரி, நேரியக்குளம், நித்திய நகர் ஆகிய கிராமங்களையெல்லாம் மூச்சு விடாமல் வாய்விட்டுக் கூறி... கடந்த கால நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தார்... 


கதை கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் கவனத்தை திருப்பும் வகையில் காரியாலய பியோன் வந்து கத்தினான்.... 


“இஞ்சை நிக்காதிங்கோ... ஒருத்தரும் இவ்விடத்தில் இருக்கக் கூடாது... பொலிஸ் வரப்போகுது...” என்றான். 


டீ.ஆர்.ஓ. காரியாலயத்தில் கூடி இருந்த யாவரும் நெடுஞ்சாலையை நோக்கி நகர்ந்தார்கள்... 


இன்று நெடுஞ்சாலையில் நிற்கும் வேலாயுதம் மாஸ்டர், அன்று அந்த இனக் கலவரத்தில் மாட்டி, தத்தளித்த போது, உயிர் பிச்சைக் கொடுத்து, தங்களைக் காப்பாற்றி அனுப்பிய அந்த சிங்களக் குடும்பம் வாழும் தென் மாகாணத்தை நோக்கி செட்டிக்குளத்திலிருந்து கை கூப்பிக்கும்பிட்டார்...! 


செட்டிக்குளத்தில் பூர்வீகமாக வாழும் பெரியவர் ஒருவர் வேலாயுதம் மாஸ்டரின் காதுகளில் குசு குசுத்தார்....


 “கந்தோர் பெரியாள் டீ. ஆர்.ஓ. தான் நெருப்பு வைக்கச் சொன்னவர்... குடியிருந்தச் சனங்கள அடிச்சிக் கலைக்கச் சொன்னவர்... உங்கள அடிச்சி கலைச்ச பெடியள்மார்களுக்குத்தான் உங்கட காணியெல்லாம் பயிர் பச்சையோடு சொந்தமாகப் போகுது...! இத மனசுல வச்சிக்கொள்ளுங்கோ... பிடிச்சக் காணிகள் விட்டுப் போட்டு போகாதீங்கோ... போராடிப் பாருங்கோ... நீதி கிடைக்கும்... வருத்தமா இருக்கு... நீங்களும் எங்கட தமிழ்ச் சனங்கள்...” என்றவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். 


வியர்த்துப் போய் நின்ற வேலாயுதம் மாஸ்டருக்கு பெரியவரின் கடைசி வார்த்தை பாலையில் ஊறிய சுனையாகத் தெரிந்தது... 


கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்த மக்களை, வவுனியா பிரதேசத்தில் குடியேறும்படி ஆதரவு காட்டியவர்கள்... குடியேறக் கூடிய இடங்களைக் காட்டி “முடிஞ்சதை செய்து கொள்ளுங்கோ...” என்று கண்களைக் காட்டி விட்டுச் சென்றவர்கள், இந்த துரதிஷ்டமான வேளையில் எவரையும் காண முடியவில்லை .. 


***

அகதிகளாக வந்த குடும்பங்கள், அவர்கள் காட்டிய காட்டுப் பகுதிகளை சுத்தம் செய்தார்கள்... நிலத்தைக் கொத்தினார்கள்... வேலிகள் போட்டுக் கொண்டார்கள்... கிணறு தோண்டி தண்ணீரை எடுத்தவர்கள் எல்லையற்ற சந்தோசமடைந்தார்கள்... உளுந்து, பயறு, கவ், கச்சான், எள்ளு, சோளம், பப்பாசி யாவும் புது மண்ணில் செழிப்புடன் பசுமை காட்டி வளர்ந்தன. 


முதல் அறுவடையில்... குடிசைகளை, வீடுகளாகக் கட்டிக்கொள்ள வேண்டும்... கூரைத் தகரங்கள், சீமெந்து கல்லுகள்... காலம் போகப் போக மின்சாரம் என்றெல்லாம்... அவசர அவசரமான திட்டங்கள் மனதுக்குள் குவிந்து நிறைந்தன... 


அடிக்கடி இவர்களது குடியிருப்புப் பிரதேசங்களில் நோட்டமிட்டுச் சென்ற நபர்களைப் பற்றி இந்தப் பாமரக் குடும்பங்கள் அறிந்திருக்க வில்லை... 


கிராம சேவகர்கள் அகதிகள் குடியிருக்கும் நிலங்களில் வந்து விபரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள்... இவர்கள் எந்தப் பிரதேசத்து அகதிகள்...? பலாத்காரமாக குடியிருப்பதற்கான காரணங்கள் யாவை...? குடும்பத் தலைவர்கள் யாவர்...? உழைக்கக்கூடியவர்கள் இருக்கின்றனரா...? என்றெல்லாம் வினா எழுப்பிக் கொண்டிருந்தவர்களிடம், தமிழ்க்குடி வாசிகள் பலர் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.... 


இங்கே குடியிருப்பவர்கள் மலைநாட்டுத் தமிழர்கள் என்றும், சொந்த ஊர்களுக்கு அவர்கள் போய் விடுவார்கள் என்றும்... அவர்களுக்கு இங்கே காணிகள் கொடுக்கக் கூடாது என்றும்... அவர்கள் இந்த ஊர் தமிழர்கள் அல்ல என்றும்... கண்டனக் குரல்கள் எழுப்பிக் கொண்டிருந் தார்கள். 


“நாய்கள் நாய்களின் இறைச்சியை சாப்பிடுகின்றன...” ஒரு சீன நாட்டுப் பழமொழி... இந்தப் பரபரப்பான சூழ்நிலையை அங்கீகரித்துக் கொண் டிருந்தது .. 


வந்திருந்த சிங்கள கிராம சேவகர்களுக்கு நாட்டில் வாழும் தமிழர்கள் வெவ்வேறு இனங்களானவர்கள்... என்பதை அன்றுதான் விளங்கிக் கொள்ள முடிந்தது. இவ்வளவு காலமும் தமிழர்கள் எல்லாம் ஒரே இனம் என்று நினைத்துக் கொண்டிருந்த தங்களது முட்டாள்தனத்தை எண்ணி, விபரங்கள் சேகரிக்காமலேயே , மனதுக்குள் சிரித்துக் கொண்டு, திரும்பிச் சென்றார்கள்...! 


***

வேலாயுதம் மாஸ்டர் நேற்று இரவு நடந்த அந்தக் கொடூரமான சம்ப வத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தார். 


அந்திப் பொழுது... 


இருள் கவ்வும் நேரம்... 


அந்தச் சம்பவம் நடந்தது... 


சண்டியர்கள் பலர் மது அருந்தியவர்களாக வெறியோடு, சத்தம் போட்டுக் கொண்டு, குடிசைகளில் இருந்தவர்களை, குழந்தைக் குட்டிகளோடு வெளியே விரட்டி, குடிசைகளுக்கு நெருப்பு வைத்தனர்... அவர்கள் சிங்களவர்கள் அல்ல... தமிழ் வாலிபர்கள்... பயங்கரமாகத் தோற்ற மளித்தார்கள்... கம்பு, தடிகள், வெட்டருவாள் என ஆயுதங்களோடு அவர்களை நெடுஞ்சாலைக்கு விரட்டிக் கொண்டிருந்தார்கள்... 


இதுவரை காலமும் சிங்களச் சண்டியர்களின் அட்டகாசங்களையே அனுபவித்து வந்தவர்களுக்கு, இந்தக் காடையர்கள் புதுமையாகவும் நம்ப முடியாதவர்களாகவும் தெரிந்தார்கள்... 


“ஐயோ தம்பிகளா..! ஐயோ ராசா..” என்று வயதானவர்கள் கூக்குர லிட்டார்கள்... கண் மண் தெரியாமல், அடிகள் விழுந்தன. காய்ந்த ஓலைகளால் வேயப்பட்டிருந்த குடிசைகள், சுடர் விட்டு எரிந்து... சாம்பலாகின... விவசாயப் பயிர்களுக்கு எந்த சேதங்களையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை... 


சுட்டெரிக்கும் பட்டப் பகலில், வியர்த்து வடியும் அவர்களின் முகங்கள் கண்ணீரையும் கொட்டிக் கொண்டிருந்தன... 


திடுதிப்பென பொலிஸ் வண்டிகள் பறந்து வந்தன... பின்னால் ஓடி வரும் இரண்டு மூன்று அரசாங்க பஸ் வண்டிகளில் நிர்க்கதியாக நின்ற மக்கள் பலவந்தமாக ஏற்றப்பட்டார்கள்... அவைகள், எந்த பிரதேசத்தை நோக்கி ஓடும் என்று எவருக்கும் புரியாமலிருந்தது... வாகனத்துக்குள் திணிக்கப் பட்டவர்கள் பரிதாபகரமாகக் கூக்குரலிட்டார்கள்.... 


திக்கற்ற அவர்கள் அதிகாரங்களையும்... அதிகாரிகளையும்... காக்கிச் சட்டைகளின் துப்பாக்கிகளையும்... எதிர்த்துப் போராடும் திராணியிழந்து நின்றார்கள்... எத்தனை காலங்கள்தான் இவர்களுக்கும்... இவைகளுக்கும் எதிராகப் போராடி மாய்வது...? 


அகதிகளாக செட்டிக்குளத்துக்கு வேலாயுதம் மாஸ்டரும் அவரது மனைவியும் இளங்காளைகளான இரண்டு மகன்மார்களோடும், மகளோடும் வந்தார்கள்... இயக்கங்களின் நடவடிக்கைகள் துளிர்விட்ட காலம் அது...


போராளிகள் “வீட்டுக்கு ஒரு பிள்ளை...” என்று வாகனங்களோடு வந்து நின்றார்கள்... 


மறுக்க முடியாத நிலை... 


வேலாயுதம் மாஸ்டர் ஒரு கணம் கலங்கிப் போய் நின்றார்... மேட்டுக்குடியினரிடம் போகாது, தரித்திரப்பட்ட அடிநிலை மக்களிடமே அவர்கள் வந்து நின்றார்கள். 


போரின் முதல் குண்டு வெடிச் சத்தத்திலேயே விமானமேறி வெளி நாடுகளுக்கு ஓடிவிடத் தகுதி பெற்றவர்கள், அகதி விசா வாங்கிக்கொள்வதற்கு யுத்தத்தை சாதகமாக்கிக் கொண்டார்கள். தஞ்சம் புகுந்த நாடுகளில் அகதி விசா மறுக்கப்பட்டவர்கள், தமிழர்கள் வகை தொகையாக சாக வேண்டும்... அது சர்வதேசச் செய்தியாக வெண்டும்... அதன் மூலம் விசா கிடைக்கவேண்டும் என்று கந்தனையும், கணபதியையும் வேண்டிக் கொண்டார்கள் ! 


பாமர மக்களோ, தங்கள் பிள்ளைகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு, கண்ணீருடன் யுத்தக்களத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்... 


அந்தக் காட்சிகளை அவர் மனத் திரையில் ஓடவிட்டுப் பார்த்துக் குமுறினார்... 


ஒரு மகனை போராட்டத்துக்கு காணிக்கையாகவும், இன்னொருவனை ராணுவத்துக்குப் பலியாகவும் பறிகொடுத்துவிட்டு, இன்று இந்த பஸ்ஸுக்குள், ஒரு பக்கம் மனைவிக்கும் மறுபக்கம் மகளுக்கும் இடையில் மூவருமாய் இருப்பதை உறுதி செய்துகொண்டு  ஜடமாக அமர்ந்திருந்தார்... 


சாலையோரத்து வீர மரம், பாலை மரம், நாவல் மரங்களும் அசையாது நிற்பதை அவரது கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன... 


டீ.ஆர்.ஓ. காரியாலய ஜன்னல்களுடே அரச பணிபுரியும் விசுவாச ஊழியர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்... 


தேசிய இருப்புக்கான நிலமும், குடியிருப்புமற்ற ஒரு சிறுபான்மைத் தேசிய இனம்... போக்கற்றுப் போய், பிறந்த நாட்டுக்குள்ளேயே பரதேசி களாக அலைக்கழிக்கப்பட்டு... 


பேரினவாதப் பகையாலும், ஒரே இனத்தின் பிரதேசவாதப் பேதங்களாலும், எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டு வரும் நிலைமையை நினைத்து அவர்கள் விம்மி அழுதார்கள்... 


பாரதி வேதனையடைந்ததைப் போன்று அவர்கள் விம்மி விம்மி... விம்மி விம்மி... அழுங்குரலை காற்றிடம் மட்டுமே சாட்சி சொல்லி விட்டு, அயர்ந்துவிட முடியுமோ...? 


பஸ் வண்டிக்குள் தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருக்கும் வேலாயுதம் மாஸ்டரின் செவிப்பறையில் இரண்டு வார்த்தைகள் வந்து விழுந்தன... 


அந்த மந்திரச் சொற்கள் எவ்வளவு பரிச்சயமானவை...! 


“த…மி…ழ…ர்… தா…ய…க…ம்… த…மி…ழ்…த்…தே…சி…ய…ம்…”


அந்த நிழலுக்குள் அண்டிக் கொள்ள முடியாத, அந்தத் தமிழரும், கடைசியாக ஒருமுறை அதே வார்த்தைகளை உச்சரித்துவிட்டு வாயை மூடிக் கொண்டார் !


பஸ் வண்டிகள் பறந்துக் கொண்டிருந்தன... 


(யாவும் கற்பனையல்ல!) 

நவம்பர் 2013 



கருத்துகள் இல்லை: