மீண்டும் பனை முளைக்கும்? - மு.சிவலிங்கம்

 மீண்டும் பனை முளைக்கும்?

 -மு.சிவலிங்கம்


வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார். 


செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது. 


கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள்... நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப் போய் முடிவது...? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித் தெருவுக்குள் நுழைவது...?


 “வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா...?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்க விருக்கும் கூட்டம் இவரது பின்னால் நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம் தயங்கித் தயங்கி நின்றுக் கொண்டிருந் தார்கள். 


எங்கிருந்தோ வேகமாக வந்த ஒரு பெண் திடீரெனக் கையை நீட்டிக் கொண்டு சாரையைப் போல சரேலென்று வீதியில் குறுக்கே இறங்கி நடந்தாள். 


சீறி வந்த வாகனங்கள் கப் சிப் என நின்றன. அந்த தைரியசாலிப் பெண் ‘தலைமை’ கொடுக்கவும், அவள் பின்னே மக்கள் கூட்டம் பாதுகாப் பாகப் பின் தொடர்ந்தது. 


வாழ்க்கையில் - சமுதாயத்தில் யாரோ ஒரு தைரியசாலி வீதியைக் கடக்கக் கூட தலைமை கொடுக்க வேண்டும்... அந்த யாரோவை முன்னுக்கு வர முடியாததுக்கள், தங்களது தேவைக்குக் கபடத்தனமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். 


“என்ன உலகமடா... புதுமை நாடன் அந்த நெருக்கடியிலும் சமுதாயத்தின் கபடத்தனத்தை வைதுக் கொண்டே செட்டித் தெருவுக்குள் நுழைந்தார். 


நுழைவாயிலிருந்து தொங்கலில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை வரை எல்லா தெரிந்த கடைகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்து முடிந்தது. 


புத்தகசாலையைத் திரும்பிப் பார்த்தார். 


“மகராசன் எப்போதும் இருபது, முப்பது பிரதிகள் வாங்குவார். தங்க மான மனுசன்... இவர் மாதிரி நாலைஞ்சு புத்தகக் கடைக்காரர்கள் இருந்தால், தைரியமாகத் தொடர்ந்து புத்தகம் போடலாம்...'' 


புத்தக சாலை சந்தியிலிருந்து சென் அந்தனீஸ் தேவாலயம் வரை கொடுத்து முடிந்தது. நாடன் சுறு சுறுப்பாக ஜெம்பட்டா வீதிக்குள் நுழைந்து... புதுச் செட்டித் தெருவைக் கடந்து... பாபர் வீதியில் இறங்கி... இளமையில் எம்.ஜியாரின் ‘அடிமைப் பெண்’ பார்க்க வந்து அடிபட்ட கிங்ஸ்லி தியேட்டரின் இனிமை நினைவையும் மீட்டிக் கொண்டு, ஆமர் வீதி சந்தியில் போய் நின்றார்... 


அந்த சந்தியில் நின்றுக் கொண்டு, இந்தப் பக்கம் திரும்பி, கொட்டாஞ்சேனையைப் பார்ப்பதா...? அல்லது கிரேன்ட்பாஸ் வீதியை முடித்துக் கொண்டு மீண்டும் மெசெஞ்ஜர் வீதி... அப்துல் ஜபார் மாவத்தையைப் பார்த்த பிறகு பஞ்சிகாவத்தையைப் பார்ப்பதா...? என்று யோசித்தவர் “மெசெஞ்சர் வீதிக்கே போய் வாணி விலாசில் பகல் சாப்பாட்ட முடிச்சுக்கிட்டு...” 


“வேணா... வேணா வயித்த நெறைச்சா நடக்க முடியாது” என்று வாய்க்குள் பேசிக் கொண்டு, கிரேன்ட்பாஸ் வீதியை நோக்கினார்... வீதி கொஞ்சம் ஏற்றம்... சின்ன வயதில் நடந்த நடையை ஒப்பிட்டு, வயது போய் விட்டதை ஏற்றுக் கொண்டார். 


நாடனுக்கு 76... 


நெற்றியில் கொப்பளித்து வடிந்த உப்பு நீர் கண்களுக்குள் இறங்கி எரிவை உண்டாக்கியது. வேட்டிக்குள் செருகியிருந்த கை லேஞ்சியை உருவி முகத்தை நன்றாகத் தேய்த்துத் துடைத்தார். வீரகேசரிக்குள் நுழைந்து, விசயத்தை முடித்துக் கொண்டு... பலா மரத்துச் சந்தி வரை சென்று.. மீண்டும் கிரேன்ட்பாஸ் வழியாக வந்து... மெசெஞ்சர் வீதிக்குள் நுழைந்தார். 


சும்மாயிருக்காத வாய் முணுமுணுத்தது. 


“இவர் ஆடாத ஆட்டமா...? இவரும் ஆடி அடங்கிட்டாரு...” என்று மோசம் போன ஜனாதிபதியின் நினைவுத்தூபியைக் கடந்து சென்றார். 


நேரம் பகல் ஒரு மணி... உச்சி வெய்யில்... 


பாவம் புதுமை நாடன்... ரொம்பவும் களைத்துவிட்டார். 


வயது 76 ஐத் தாண்டியிருந்தாலும், 26க்குள்ள இளமை முறுக்கு இன்னும் அப்படியே இருக்கிறது. 


வேகமாக நடந்தவர் தெம்பிலி வண்டிக்காரனைக் கண்டதும் நின்றார். பெரிய சைஸைக் காட்டி வெட்டச் சொன்னார். 


ஆடு, மாடுகள் முகம் அசையாமல் ஒரே மூச்சாக நீராகாரம் அருந்துவதே ஒரு அழகு...! 


நாடனும் தெம்பிலியை வாயில் வைத்தவர் அண்ணாந்தபடி உறிஞ்சி முடித்தார். ஒரு ஏப்பத்தை விட்டவர், தெம்பிலியை வெட்டித் தரும்படி கேட்க, அவனும் இரண்டாகப் பிளந்து, ஓரத்தில் தெம்பிலி கரண்டியையும் சீவிக் கொடுத்தான். 


இரண்டு சிரட்டையிலும் பால் அப்பம் போல ‘வழுக்கை’ இருந்தது. தெம்பிலி கரண்டியால் வழித்து... வழித்துத்... தின்று, இன்னுமொரு ஏப்பத்தை விட்டவர், காசை நீட்டினார். 


“முருகா... இந்த நாடு இன்னும் மோசம் போகல்ல... 25 ரூவாயில் பசியாறிப் போச்சே..” வாயைத் துடைத்துக் கொண்டு, மனதுக்குள் நகைத்தபடி நடந்தார். 


நாடன், அப்துல் ஜபார் மாவத்தையை முடித்துக் கொண்டு, பழைய சோனகத் தெரு வழியாக டாம் வீதிக்கு வந்துவிட்டார். மீண்டும் அஞ்சு லாம்பு சந்தி வழியாக பீப்பள்ஸ் பார்க்கைக் கடந்து... புதிய சுயதொழில் சந்தைக்குள் நுழைந்து... ஒல்கொட் மாவத்தை வழியாகக் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் வந்து நின்றார். 


அவர் நின்ற இடம் இந்த நாட்டின் அதி பிரசித்தி பெற்ற பிக்கட்டிங் ஸ்தலம் என்று நினைவூட்டியது... ‘பிக்கட்டிங்’ விவகாரங்களில் மனதை நுழைக்கும் முன்பு மொரட்டுவ பஸ் வந்து நின்றது. 


நாடன் வெள்ளவத்தையை நோக்கி பயணித்தார். விழா மண்டபத்துக்குரிய காசைக் கட்டி விட்டு... 


“அப்பாடா...” என்று சாப்பாட்டுக் கடையை நோக்கி நடந்தார். 


“நாடா...? சம்பாவா...?” 


“நாடு...” “மீன் கோழி..? ரால் நண்டு...? கனவாய் ஆடு...?” கவிதை நடையில் ஜோடிக் கேள்விகள். 


“கனவாய்...” 


முதல் ரவுன்டை முடித்தவர், இரண்டாவது ரவுன்டில் இறங்கினார். இரண்டாவது ரவுன்டில் எல்லாமே தாராளமாக இலையில் விழும். 


கனவாய் குழம்பு மட்டும் இரண்டொரு துண்டுகளோடு அளவுக் கிண்ணத்தில் வரும்! 


காரச் சாரமான சாப்பாடு... 


மூக்கைச் சீந்தி தெருவில் போட்டுவிட்டு, விரல்களை வேட்டியில் துடைத்துக்கொண்டு நின்ற ஒரு சகபாடியை அருவருப்போடு பார்த்த நாடன், நண்பனின் வீட்டையடைந்தார். நாடன் இன்றைய ஒருநாள் பொழுதில் இன்விடேசன் வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் நிம்மதியடைந்தார். 


“இன்விடேசன்கள ஆளைச் சந்திச்சு நேரடியாக் கையில் குடுத்தாத்தான்... நிகழ்ச்சிக்கு வருவாங்க... போஸ்ட்ல அனுப்புற சங்கதி சரிவராது...” இம்முறை புத்தக வெளியீட்டுக்கு முன்னூறு அழைப்பிதழ்கள் அச்சிட்டிருந்தார். அழகான கடதாசி, அலங்காரம் செய்த கவர், வசீகரமான புதிய எழுத்துக்களில் வரிகள்...! 


ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்...! 


பாரதியின் கவிதையை அழைப்பிதழின் மகுடமாக அச்சிட்டிருந்தார். 


“இன்விடேசன் எப்படியிருக்கு...?” என்று பெருமையோடு நேற்று மனைவியிடம் காட்டியபோது, பரமேஸ்வரி ஒரு 'லுக்கு' விட்டாள் அந்த லுக், “இதோட புத்தகம் வெளியிடுற வேலைய நிறுத்திக் கொள்ளுங்க...” என்பதைப் போல் தெரிந்தது. 


மனைவியின் வார்த்தை மீண்டும் அவர் முதுகைத் தட்டியது. “பிறர் ஈன நிலைக் கண்டு துள்ளித் துள்ளித் தான் குடும்பம் இந்த நெலைமைக்குப் போய்க் கெடக்குது...” 


பாவம் மனைவி பரமேஸ்வரி... புதுமை நாடனின் பத்து புத்தக வெளி யீடுகளுக்கும் நகைகளைக் கழற்றிக் கழற்றிக் கொடுத்தாள். 


“புத்தகம் விற்கும் பணத்தில் அடைவு வைத்த நகைகள் மீட்டுத் தரப் படும்” என்று அவர் கொடுத்த பத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்து போன கதைகளாய் முடிந்திருந்தன. 


இந்த பதினோறாவது புத்தக வெளியீட்டிலும் பரமேஸ்வரி அம்மாளுக்கு நம்பிக்கை கிடையாது.... 


வர்த்தக நோக்கம் இல்லாத ஒரு எழுத்துச் சிந்தனையாளனின் குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொள்ளுவதுண்டு. சில புகழ் பூத்த படைப்பாளர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாது போன கதைகளையும் நாடன் நன்கு அறிவார். மனைவி, குடும்பம், பிள்ளைகள் என்ற பொறுப்புக்களில் தலையிடாமல், பிள்ளைகளின் கல்வி, கலியாணம், என்ற கடமைகள் பற்றி கவலைப்படாமல், எல்லா சுமை களையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு, இலக்கியம், எழுத்து, புத்தகம், கூட்டம் என்று இன்றுவரை திரிந்துக் கொண்டிருக்கும் அவரது மனம் அடிக்கடி சுடும்.

 

பரமேஸ்வரியின் பாஷையில்... “சமுதாயத்தை நிமிர்த்துவதற்காக வீட்டை மறந்து திரியும் மனுசன்...'' சில வீடுகளில் சில இலக்கியவாதிகள் விளையாட்டுப் பிள்ளைகள் மாதிரி... 


***

உள் வீட்டு விசயங்கள் எவ்வளவு ஓட்டையாக இருந்தாலும், புதுமை நாடன் இந்த நாட்டின் புகழ்பூத்த ஒரு படைப்பாளி...! 


அவரது பதினோறாவது வெளியீடான ‘மீண்டும் பனை முளைக்கும்...?’ என்ற நெடுங்கதை அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது... 


இவரது இலக்கிய வாழ்க்கையில், இந்த நெடுங்கதை ஒரு முத்திரைப் படைப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது... 


புதுமை நாடனின் பெறுமதி மிக்க படைப்புக்கள் எவற்றுக்கும் ஏனோ இன்றுவரை தேசிய ரீதியில் இலக்கிய மண்டலத்தால் எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை... 


விருது பற்றி புதுமை நாடனும் எதிர்பார்த்ததில்லை... அலட்டிக் கொண்டது மில்லை 


ஆனால், ஒரு தேசிய மண்டலத்தின் அங்கீகாரம் கூட இந்த பெறுமதி நிறைந்த படைப்பாளனுக்கு கிடைக்கவில்லை என்பது பற்றி அவரது மனதுக்குள் ஒரு சிறு வலி இருந்து வருவது மட்டும் உண்மை... 


அவரைப் பொறுத்தமட்டில் இந்த விருதுக் குழு, தெரிவுக் குழு எல்லாம் மோசடிக் கும்பல்கள்... ஊழல் இழிசனர்கள். குடி கூத்துக்கும், கமிசன், கைமாற்றுக்கும் கீழே கிடப்பவர்கள்... 


ஆரம்பக் காலத்து மண்டலக் குழு முதல் இன்று வரையிலுள்ள, எல்லா இலக்கியக் கொம்பன்களும் பாரபட்சம், கோஷ்டி உறவுகள் என்ற ஈனச் செயல்களைப் புரிந்து வருவதால், நாடன் தனது படைப்புக்களை இந்த மண்டலத்துக்கு அனுப்பி நட்டப்படுவதற்கு விரும்புவதில்லை... 


நாடன் இந்த மண்டலக்காரர்களை கொஞ்சம் ஏளனமாக நினைத்துப் பார்த்தார். இவர்கள் படைப்புக்களைத் தரப்படுத்துவதற்குக்கூட தகுதியற்றவர்கள்... சென்ற வருடம் சாம்பார் செய்வது எப்படி...?' என்ற நூலுக்கு விருது வழங்கியிருந்தார்கள். அதற்கு முந்திய வருடத்தில் ‘வெங்காய சட்னி’ என்ற நூலுக்கும் விருது வழங்கியிருந்தார்கள். 


சலசலப்பு கிளம்பியபோது, “மனிதனின் சாம்பாரும் சட்னியும், ஒரு வகை உணவு பற்றிய ஆய்வு இலக்கியங்களாகும்... அதற்காகவே மண்டலப் பரிசுகள் வழங்கப்படுகின்றன...'' என்று விருதுத் தெரிவுக் கோஷ்டிகள் நியாயப்படுத்தியிருந்தார்கள்...! 


இந்த ‘சாம்பார் செய்வது எப்படி...?’என்ற நூலுக்குக்கூட நமது பேரா சிரியர்கள் ஆய்வுரைகள், நயவுரைகள் என வியந்துரைகள் ஆற்றி மேடையில் சக்கை போடு போட்டார்கள்...! 


அவர்களுக்கென்ன? ஒரு படைப்பாளியின் வெளியீட்டு நிகழ்ச்சியில் எத்தனை புத்தகங்கள் விற்பனையாகின என்பதை அறிந்து கொள்வதில் அக்கறைப்படமாட்டார்கள். மேடையில் விலாசித் தள்ளுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலே அவர்களுக்குப் போதுமானது. 


பாவம் அவர்களும் இந்த படைப்பாளிகளைப் போன்று மேனியா பசி கொண்டவர்களே. 


***

நாடன், அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழா சம்பந்தமாகவே நினைத்துக் கொண்டிருந்தார். இன்றைய டி.வி., டி.வி.டி. காலத்தில் எவர் புத்தகம் வாசிக்கின்றனர்...? 


புத்தகம் வாசிக்கும் கலாச்சாரம் அழிந்து போய்விட்டது. 


இலக்கியப் படைப்பாளிகளுக்கு கைகொடுக்க இன்று சமூகத்தில் எவரும் இல்லை . இந்தச் சூழலில் புத்தகம் எழுதி விற்பனை செய்ய முயல்வது பெரும் சவாலாகும்... ஊர்க்காரனோ அல்லது சொந்த சமூகத்தில் ஒருவனோ புத்தகம் எழுதி வெளியீடு செய்தால், அதிலொரு ஐந்து புத்தகமாவது விற்று, ஊக்கமளிக்கும் பண்பாடு எவருக்கும் கிடையாது... 


நாடன் இந்தத் துயர நினைவுகளை பலவந்தமாக மறக்கடித்துவிட்டு, புத்தக வெளியீட்டுக்கான பட்ஜட்டை எழுதத் தொடங்கினார். 


விழா மண்டபத்துக்கு ஆறாயிரத்து ஐந்நூறு, எதிர்பார்க்கும் கூட்டம் நூற்றைம்பது பேர், நூற்றைம்பது வடைக்கு இருபது ரூபாய்படி மூவாயிரம். கோப்பியோ, கூல் ட்ரிங்ஸோ முப்பது ரூபாய் போகும். அதற்கு நாலா யிரத்து ஐநூறு. அழைப்பிதழ், பஸ் பயணம், எல்லாமாக இரண்டா யிரத்தை நூறு... 


வரவேற்புரை, வெளியீட்டுரை, இரண்டு விமர்சன உரை, தலைமையுரை ஆகிய ஐந்து உறுப்பினர்களுக்கு, ஐந்து புத்தகங்கள் அன்பளிப்பு... முன்னூறு ரூபாய்படி அதிலும் ஆயிரத்து ஐநூறு ரூபாய்... மொத்தம் பதினெட்டாயிரம் வெளியீட்டுச் செலவு... 


நாடனுக்கு தலை சுற்றியது. 


பட்ஜட்டை மீளாய்வு செய்தார்... 


வடையை வெட்ட வேண்டும்..! வடையை வெட்டினால் மூவாயிரம் தேறும். கோப்பியை வெட்டி பால் பக்கெட் மாத்திரம் கொடுத்தால்... ஆயிரம் தேறும். அப்படிப் பார்த்தாலும் பதினாலாயிரம் செலவாகிறது.


இந்தமுறை நூறு புத்தகமாவது விற்கப்பட்டால், அன்பளிப்போடு ஐம்பதாயிரமாவது கிடைக்கலாம். பரமேஸ்வரியின் நகை நட்டுக்கள் சிலவற்றை மீட்கலாம்...! 


மீண்டும் புத்தகம் வெளியிடும் செலவுகள் பற்றி நாடன் மனதைப் போட்டு குடைந்தார். 


இருநூறு பக்கத்தில் ஐந்நூறு பிரதிகள் அடித்தால், எண்பத்தையாயிரம், தொன்னூறாயிரம் என்று அச்சக செலவு பயமுறுத்துகிறது. புத்தக வியாபாரிக்கு 35 வீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். வெளியீட்டு மேடையிலும் விபரீத விளையாட்டுக்கள் நடக்கின்றன முன்னூறு ரூபாய் புத்தகத்தை வாங்க வரும் நண்பர்கள், நூறு ரூபா வையும் கவருக்குள் வைப்பதுண்டு... சில விஷமிகள் 50 ரூபாவையும் வைப்பதுண்டு. இதுவும் ஒரு வகை பகிடிவதை... சிறப்பு விருந்தினர்கள் கூட முன்னூறு ரூபாயோடு நின்றுக் கொள்வதுண்டு. புத்தக வெளியீடு என்பது ஒரு விஷப்பரீட்சை. 


“நடப்பது நடக்கட்டும். நான் வியாபாரி இல்லையே...? புத்தகத்தை விற்று அரிசி வாங்கவா பிழைப்பு நடத்துகிறேன்...?” என்று பிதற்றியபடி புதுமை நாடன் பட்ஜட் புத்தகத்தை மூடிவிட்டு படுக்கைக்குச் சென்றார். 


***

விழா மேடை 

இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை . மாலை நான்கு மணி... 

கும்பம்... குத்துவிளக்கு... வரவேற்பு... 


ஐயாயிரமாவது கொடுக்கக்கூடியவர்கள் என்போரை விளக்கேற்றுவதற்கு தொகுப்பாளர் மிகவும் கௌரவமாகப் பெயர் கூறி அழைத்தார். விளக்கேற்றும் வைபவம் நிறைவேறியது! 


நிகழ்ச்சி நிரல்படி வரவேற்புரை, தலைமையுரை, வெளியீட்டுரை நடந்த பின்னர் ஒரு ஆய்வாளர் பேசி முடிக்க சிறப்புப் பிரதிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது! 


அடுத்து வாழ்த்துரை... 

அதற்கடுத்து கருத்துரையும் நிகழ்ந்து முடிந்தது.! 

சரியாக தேநீர் நிகழ்ச்சியின் போது திடீரென இருபது இருபத்தைந்து பேர் மண்டபத்துக்குள் நுழைந்தார்கள்.


மேடையில் இருக்கும் நாடனுக்கு மனம் மகிழ்ச்சி பொங்கியது... 

“இன்னும் இருபது புத்தகமாவது போகும்...” உள் மனம் சிரித்துக் கொண்டது... 


வந்த கூட்டம் வயலுக்குள் இறங்கும் கிளிக்கூட்டத்தைப் போன்றது என்று நாடன் அறியார்... கிளிகள் கதிர்களைப் புசித்து பசியாறி பறந்து விடும்... வந்த கூட்டம் பால் பெக்கட்டுக்குப் பிறகு மெதுவாக வெளியேறி விட்டன... இது அந்த மண்டபத்தில் நடைபெறும் வழமையான ஒரு தாக்குதல்...!


இரண்டாவது ஆய்வாளர் முன்னவரை விட மிகவும் சுவாரஷ்யமாகப் பேசி சபையைக் கலகலப்பாக்கினார். 


நாடனின் மனம் எவர் பேச்சையும் ரசிக்காமல் திக்திக்' என்று அடித்துக் கொண்டிருந்தது... ஏற்புரை நேரமும் வந்தது... தனது படைப்பிலக்கிய நோக்கம் பற்றி விளக்கிய நாடன், ஆய்வாளர்களின் கருத்துக்குப் பதில் கூறி நன்றியுரையையும் அவரே முடித்துக் கைகூப்பினார்... 


சபை கலைந்தது... தட்டில் கவர் கூடுகள், காசுகள் நிறைந்திருந்தன. நாடனின் மருமகப்பிள்ளை எல்லாவற்றையும் சேகரித்து உறைக்குள் நுழைத்தான். 


நாடன் மேடையை விட்டு இறங்கி சபையில் கலந்தார். சிலர் நாடனின் முதுகைத் தட்டினார்கள். சிலர் கை குலுக்கி வாயாரம் பாடினார்கள்... மண்டபம் வெறுமையாகியது. 


பால் பெக்கெட் பரிமாறியவர்கள், பெனர் கட்டியவர்கள் யாவரும் ஒதுங்கி நின்றார்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தனுப்பினார் நாடன். 


'தம்பி. எத்தன புத்தகம் மிஞ்சியிருக்கு...?” 

“இருநூத்தி அறுவது...' 

“அப்போ நாப்பது புத்தகங்களே போயிருக்கு... 

பக்கத்து மண்டபத்திலும் புத்தக வெளியீடு நடந்திருக்கு... 

தேதி மாறியிருந்தா, ரெண்டு பேருக்கும் கலெக்ஷன் ஒரு மாதிரி கெடைச்சிருக்கும்...'' 


“பால் பெக்கெட்மிஞ்சி இருக்கு... ரிட்டன் எடுக்க மாட்டாங்களாம்...” 

“ஆட்டோக்குள்ள போடு... தேத்தண்ணிக்கு உதவும்...” 


புதுமை நாடனும், மருமகனும் நண்பரின் வீட்டுக்கு ஆட்டோவைத் திருப்பினார்கள்... மருமகன் ஆட்டோவுக்கு முன்னூறு கொடுத்தான். அறைக்குள் நுழைந்த நாடன், நண்பனின் கட்டிலில் காசைக் கொட்டி எண்ணிப் பார்த்தார். மொத்த கலெக்ஷன் பதினேழாயிரம்! 


ஐந்து பேர்கள் மட்டுமே கவருக்குள் மயில் நோட்டு வைத்திருந்தார்கள். இந்த ஐயாயிரத்தோடு முன்னூறும்... நூறு ரூபாய்க்காரர்களினதும் பன்னிரண்டாயிரம். யாரோ நாசமாப் போவான்கள் மூனு பேர் ஐம்பது ஐம்பது ரூபாய் 


வைத்திருந்தான்கள்... 

“எனக்கு இப்படியான எதிரிகளா..” 

நாடன் மறுவழியிலும் யோசித்தார். 

“வசதியில்லாதவர்களும் புத்தகம் வாங்கியிருக்கலாம் தானே...” நாடன் அமைதியானார். 


இருந்தாலும் அவரது உடலும், மனமும் கொதித்துக் குமுறியது... பதினா லாயிரம் செலவு போக, மூவாயிரத்தைத் தலையில் மூட்டைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போவதா...? 


எப்படி பரமேஸ்வரியின் முகத்தில் விழிப்பது...? 


எப்படி விசயத்தைப் போடுவது..? 

நாடன் தலை மயிரைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தார். கூட இருந்தே குழி தோண்டியது போல மருமகன் செல்போனைத் தட்டி மாமியிடம் வந்த உடனேயே நியூஸ் அனுப்பிவிட்டான்...! 

மறுநாள் விடிந்தது... 


“வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோ டிலங்கைப் புக்கான்” 

என்ற ராவணன் நிலைமையோடு புதுமை நாடன் வீட்டுக்குச் சென்றார். அங்கே இதுவரை காலமும் நடந்திராத ஒரு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


நாற்பது வருசமாக அவரது பிரத்தியேக காரியாலயமாகப் பாவித்து வந்த முன் அறையின் கதவு திறந்து கிடந்தது... உள்ளூர் பழைய பேப்பர் கடை வியாபாரி தராசும் கையுமாக நிறுவை வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்... 


பரமேஸ்வரி கிலோ கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறாள். மாமியார் பக்கத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறாள். 


“தூசி...! தூசி...! புஸ்தகத் தூசி... கூடவே கூடாது! இந்த ரூமுக்குள்ள நொழைஞ்சா தும்மல் தும்மலாத்தான் வருது” என்கிறாள். 

“மொத்தம் முன்னூறுகிலோவா...?” 

“ஆமாம்மா... பொஸ்தகம் முன்னூறு கிலோ... நியூஸ் பேப்பர் முப்பது கிலோ...”


பழைய பேப்பர்காரனும், பரமேஸ்வரியும் நாடன் வந்திருப்பதை சட்டை செய்யாமல் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். நாடன் அந்த வீட்டில் தனது சொந்த ராச்சியமாக ஆண்டு வந்த தனது அறையின் பக்கம் பார்க்காமலே, வீட்டின் பின்புறம் சென்று, மௌனமாக நின்றார். 


அவர் கண்கள் குளமாகியிருந்தன. இத்தனை வருசம் என்னோடு வாழ்ந்து, எனது எண்ணம், இலட்சியம், எழுத்து, ஆற்றல், அறிவு எல்லாவற் றையும் அறிந்து, எனது படைப்புலகத்துக்குப் பாதியாகத் துணை நின்ற மனைவியா இந்த முடிவுக்கு வரவேண்டும்? 


நாடனின் இரத்த நாளங்கள் கொதித்தன. அவரது மனதுக்குள் சில மறைந்து போன எழுத்தாள நண்பர்களின் நினைவுகள் வந்து நின்றன. 


அவரறிந்த சில எழுத்தாள நண்பர்கள் இறந்து போனதும், மனைவிமார்கள், இரக்கமே இல்லாது அவர்களுடைய புத்தகங்கள்... ஏன் அந்தரங்கமாகப் பாவித்த டைரிகளைக்கூட கடலைக் கடைக்கும், பேப்பர் கடைக்கும் தூக்கிக் கொடுத்துவிட்ட சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. 


சில எழுத்துப் பிரதிகள் தேநீர் கடைகளிலும் போய்க் கிடந்தன... இந்தத் தகவல்களைப் பல இலக்கிய நண்பர்கள் அவரிடம் அடிக்கடி கூறி கவலைப்பட்டதும் உண்டு! 


நாடன், விற்கப்படாது வீட்டில் முடங்கிக் கிடக்கும் புத்தகங்களைப் பற்றி அன்றொரு நாள் நினைத்துப் பார்த்தார்... 


ஒரு நாள் பஸ் ஸ்டேன்டில் மகா வித்தியாலய பிரின்ஸிபல் அவரைக் கண்டு சிரித்த போது, அந்த மனுசனிடமும் கேட்டுப் பார்த்தார்.... 


“நான் வெளியிட்ட ஐந்நூறு புத்தகங்கள் இருக்கு... எல்லாமே பாடசாலை மாணவருக்கு உகந்தது. ஐந்நூறு மாணவருக்கும் அன்பளிப்பாகத் தரமுடியும். ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா...?” என்று கேட்டார். 


“ஐயோ சேர் ! அதுக்கெல்லாம் எனக்கு நேரமேயில்லை... ஒங்களுக்கு முடிஞ்சா ஸ்கூல் ஆப்பீஸ்ல குடுத்துட்டுப் போங்க... நான் இல்லாட்டியும் பரவாயில்ல...” என்று நழுவினார். 


“மயிராண்டி... புத்தகப் பெறுமதியைப் பற்றி ஒரு வாத்தியாரே புரியாமலிருக்கிறான்... அவன் அன்னைக்கி கொண்டு போயிருந்தா, பிள்ளைகளுக்குப் பிரயோசனப் பட்டிருக்கும் தானே...? இப்படி பழைய பேப்பர் கடைக்காரன் ஓட்டலுக்குக் கை துடைப்பதற்கு...”அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது... 


நாடன் மெதுவாகத் தனது அறையில் வந்து நின்றார். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பேப்பர்காரனின் மூட்டைக்குள் தினிக்கப்பட்டிருந்தன. அவை ஏழெட்டு வருசங்களாக விற்கப்படாது முடங்கிக் கிடந்தவைகள்.... 


சுத்தம் செய்யப்பட்ட அறை, திறந்து விடப்பட்ட ஜன்னல்களோடு காற்றும், வெளிச்சமுமாக ஒரு புதிய சூழலை உருவாக்கிக் கொண் டிருந்தது. 


அந்த அறையை மாமியார் யாரோ ஒரு வங்கி உத்தியோகத்தருக்கு வாடகைக்கு விடப் போகிறாளாம். பரமேஸ்வரி இன்னும் நாடனிடம் பேசவில்லை . 


பத்து வெளியீடுகளிலும் பத்து... பத்து... புத்தகங்களை மட்டும் ஞாபகத்துக்காக ஒதுக்கி வைத்திருந்தாள்... 


பேப்பர்காரன் நாடனின் பொக்கிஷங்களை மூட்டைக் கட்டி ஆட்டோவில் ஏற்றினான். 


ஆட்டோ நகர்ந்தது... நாடன் வீதியில் சென்று ஆடாமல்... அசையாமல் மரமாக நின்றார். 


ஆட்டோ ஓடி மறைந்தது... 


அவர் பைத்தியக்காரனைப் போல தனியாகப் பேசிக் கொண்டு வீதியிலே நின்றார். அவரது புதிய நெடுங்கதை மனதைக் குடைந்தது... மீண்டும் பனை முளைக்கும்...?' 


“இல்லை... இல்லை... இனிபனை முளைக்காது...!'' அந்த வரியையும் அவர் தன் வாய்க்குள்ளேயே திருத்தம் செய்துக் கொண்டார். 

“என் தோட்டத்தில் மட்டும் தான் அது முளைக்காது... இனி நான் எழுதப் போவதில்லை...” 


புதுமை நாடன் மீண்டும் தனியாகப் பேசிக் கொண்டு ஆட்டோ சென்று மறைந்த பாதையைப் பார்த்துக் கொண்டே நின்றார்...! 

(யாவும் நடப்பவை) 

ஞானம் ஜனவரி 2012 


கருத்துகள் இல்லை: