தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்

16.10.2008
Hon. Members of Parliament

அவசர வேண்டுகோள்.


தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..

Bill on granting Sri Lankan citizenship to Indian origin Tamil refugees in Tamil Nadu refugee camps..

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.

இன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.;  இலங்கை அகதிகள் தமிழ் நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள அகதி முகாம்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.. அகதிகளாகச் சென்றவர்களில் பலர் தமிழகத்திலிருந்தே வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.. பலர் சுமுக நிலை ஏற்பட்டதும் இலங்கை திரும்புவதென்ற மன நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.. 

இவர்களில் இன்று 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாக அங்குள்ள 118 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 1977 களில் ஏற்பட்ட ஜூலை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறி வாழ்ந்தனர். இம் மக்கள் யுத்தத்தின் தாக்கத்தினால் நிர்க்கதியாகி தமிழகம் சென்றவர்களாவர்.. 30 வருடங்கள் வாழ்ந்து முடிந்த கால எல்லைக்குள் ஒரு புதிய பரம்பரை உண்டாகியுள்ளதையும் நாம் அறிதல் வேண்டும்.

எனது அவதானிப்பின்படி அங்கு வாழும் இளைய சந்ததியினருக்கு, தாங்கள் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றோ, இலங்கை யுத்த அகதி என்றோ, சரித்திரப் பின்னணி எதுவும் தெரியாது. தங்களை இந்தியர்களாகவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர்.

மனிதர் வாழ்வில் 30 ஆண்டுகள் என்பது ஒரு அறை நூற்றாண்டில் காலடி வைக்கின்ற காலமாகும். இங்கு பெற்றோர்கள் நிர்க்கதி நிலையோடு வந்து விட்ட பின்னர் ஏற்பட்ட இயற்கைப் பெருக்கமும், குழந்தைகளோடு வந்தவர்களின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து புதிய பரம்பரையினரின் தோற்றமும் ஏற்பட்டுள்ளது.. அகதி முகாம்களில் வாழ்கின்ற இளைய பரம்பரையினர் வளர்ந்து, கணிசமான அளவு உயர் கல்வி பட்டம் பெற்றவர்களாகவும் (M.A.,  M.Sc.)  பலர் டாக்டர்களாகவும்;> (M.B.B.S) உருவாகியுள்ள சமூக மாற்றங்களையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

அதிகமானோர் தனியார் வர்த்தக நிலையங்களில், தொழிற்சாலைகளில்  நிலையான உத்தியோகங்கள் செய்து வருகின்றனர். தொழிலாளர் நிலையிலுள்ளவர்கள் சென்னையைச் சார்ந்த திரிசூலம், சென். அந்தனிஸ் மலை பிரதேசங்களில் கல் உடைப்பவர்களாகவும், பெரிய நகரங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதிலும், ஈயத் தொழிற்சாலைகளில் ஈய உருண்டைகள் உருட்டும் தொழில்களையும் செய்து வருகின்றனர்..  இவர்களுக்கு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நினைப்போ, பாரம்பரிய நிலம், வீடு, சொத்துக்களைக் கொண்ட வட கிழக்குத் தமிழர்களைப் போன்று இலங்கை திரும்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, லட்சியமோ கிடையாது.. இந்த புதிய பரம்பரையினரின் பெற்றோர்கள் வட கிழக்கில் குடியேறி,  வீடு, நிலம், விவசாயக் காணி என்று சொத்துடமைக் கொண்டவர்களல்ல. 

இவர்கள் 30 ஆண்டுகள் தமிழகத்தில் வேரூன்றி விட்டவர்கள். தொழிலிலும், வாழ்க்கையிலும் நிரந்தர நிலையை உருவாக்கிக் கொண்டு, தமிழக வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்.  இவர்களின் விருப்பு வெறுப்புக்களை தனித் தனி குடும்ப உறுப்பினர்களாக  சந்தித்து, அல்லது, ஒருமித்து அவர்களை அழைத்து,  அவர்களின் மன நிலையை  அறிந்த பின்னரே, அவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் நல்ல காரியம் ஒரு தீர்க்க தரிசனமான வேலைத் திட்டமாக அமையலாம். அதுவன்றி,  இவர்கள் நாடற்றவர்கள், இவர்களுக்கு ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த தேசிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த நோக்கம் 1964 ல் சிறிமாவும், சாஸ்திரியும் செய்து கொண்ட பிழையான வரலாற்றுத் திருப்பத்தைப் போல் அமைந்து விடக் கூடாது..! அன்று சிறிமா –  சாஸ்திரி, சிறிமா - இந்திரா ஆகிய இலங்கை, இந்திய பிhதமர்கள் தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் பல விபரீதங்கள் நடந்தன. ஒப்பந்தத்துக்குள் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சமூகப் பிரதிநிதிகளிடம் இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிக்க வில்லை. இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சட்டமும் மக்களின் மனித உரிமை பிரச்சினையாக அல்லாமல், ஒரு அரச நிர்வாக வேலையாகவே ஆகிப் போனதை நாம் அறிய வேண்டும்.

மலையகத் தமிழரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களான 1948 ல் நடந்த குடியுரிமை பறிப்பு சட்டத்தின் போதும்,  மலையகத் தலைமைகள் வாளாவிருந்தன. 1964 ல் இலங்கை - இந்திய மக்கள் பங்கு பிரிப்பு ஒப்பந்தத்தின் போதும் வாளாவிருந்தன. இன்று வரை மலையகத் தமிழர்கள் இந்திய – பாகிஸ்தானிய 1949 ம் ஆண்டு 3 ம் இலக்க குடியிருப்பாளர் சட்டத்தின் கீழ்
(The Indian  and  Pakistani Residents(Citizenship) Act No.3 of 1949)   சர்டிபிக்கேட் வைத்துக் கொண்டு குடிகளாக இன்றி(Citizen) குடியிருப்பாளராக (Tenant) ஆப்பிரிக்கர் (Mode of African Pass) “பாஸ்” முறை வைத்திருந்ததைப் போல அரசியல் பேதமையில் வாழ்;ந்து வரும்  நிச்சயமற்ற தேசியத்தை நாம் கொண்டுள்ளோம்..

ஆகவே, இந்திய அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் அவர்கள் இந்திய குடிகளாக விரும்புகின்றார்களா..? இலங்கைக் குடிகளாக விரும்புகின்றார்களா..? என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு ஆய்வு கணிப்பீட்டை (Study survey) ஏற்படுத்திக் கொள்வதே முதல் அடிப்படை முயற்சியாகும்.. இன்றைய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அகதி மக்களைச் சந்தித்து, அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, டெல்லி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், அந்த அரசு செவி மடுக்கலாம். 120 கோடி குடிசனத் தொகையை அடையவிருக்கும் இந்தியாவுக்கு, 28500 மக்களை ஏற்றுக் கொள்வது ஒரு பொருட்டாக இருக்காது..

இந்தச் சமயத்தில் ஏற்கனவே நாடற்றவர்களாக மிஞ்சியிருந்த மலையகத் தமிழருக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் முழு ஆதரவைக் காட்டி, குடியுரிமைப் பெறுவதற்கு துணை நின்றதை வரலாறு மறுக்காது.. மறக்காது.. அது போலவே அவர்களது இன்றைய முயற்சியும், பிரேரணையும் வரவேற்க வேண்டிய இச் சமயத்தில், இந்த மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கி, இலங்கைக்கு அழைக்கும் பட்சத்தில், இவர்கள் இலங்கை அரசினால் மீண்டும் ஒரு புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் இலங்கையில் குடியேற்றப்படுவார்களா..? தொழில் செய்த பலருக்கு பர்மா அகதிகளைப் போல, அதே தொழில் வாய்ப்பு பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்படுமா..? அல்லது ஏற்கனவே இவர்கள் வட கிழக்கில் குடியேறி வாழ்ந்த இடங்களில் இன்றைய யுத்த சூழலில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியேற முடியுமா..?  அல்லது, இவர்களின் பாரம்பரிய தொழிலான பெருந்தோட்டத் தொழிலுக்குள்ளேயே மீண்டும் தள்ளப்படுவார்களா..? என்பவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்..

சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களையும். நிலைப்பாட்டையும் அறிந்துக் கொள்ளாமல்ää ஒரு நாட்டின் பிரஜையாக்கிவிடுவதுää 1964 ம் ஆண்டு நடந்துவிட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்வதாக அமையும்.  மற்றும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகவும் அமையும்..

ஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்துள்ள பிரேரணையின் சட்டமூலத்தை அமுலாக்கும் நிலை ஏற்படுமாயின், அதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, சம்பந்தப்பட்ட அகதி மக்களின் விருப்பங்களை அறிந்த பின்னர், நமது அரசு செயல்பட வேண்டும் என்று, தங்களின் பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாடுவதற்கு, எனது கருத்தினையும் ஆலோசிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


இப்படிக்கு,

Murugan Sivalingam
Ex. Councellor  & Deputy Chairman, Central Provincial Council..
Secretary, Plantation Tamils Social Forum.
No. 56, Rosita Housing Scheme, Kotagala.
T.P. &  Fax -    051 2223012
E.mail  - moonaseena@yahoo.com