தொழிற்சங்க அரசியல்வாதிக்கு எதிராக தடைச் சட்டம் ...

தொழிற்சங்க அரசியல்வாதிக்கு எதிராக தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்...
-மு.சிவலிங்கம்


உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரச பதவிகளை எதிர்நோக்கி தேர்தலில் ஈடுபடுவதில்லை. அந்நாடுகளில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்  அரசு பயப்படுவதில்லை. மாறாக தொழிற்சங்கங்களுக்கும்¸ தொழிற்சங்கவாதிகளுக்கு மட்டுமே பயப்படுகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சக்தி தொழிலாளரின் உழைப்பேயாகும். அவர்களின் நல உரிமைகளும்¸ வேதன உரிமைகளும் அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நாடு வளர்முக நாடாகவும்¸ முன்னேற்ற மடைந்த நாடாகவும் நிர்ணயிப்பது அந் நாட்டின் சகல துறையைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் உழைப்பேயாகும். ஆகவே¸ நாட்டின் நிமித்தம் தொழிலாளர்களின் சுக துக்கங்களுக்கான அதி விசேசமான பாதுகாப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒரு முக்கியமான சட்டம்தான் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடாதிருக்கும் தடைச் சட்டமாகும்.

   அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கவாதிகள் எத்தனித்தால்¸  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கிவிட முடியும். அந் நாட்டின் சகல இயக்கங்களையும் ஸ்தம்பிதமாக்கி விட முடியும். சந்தை பொருட்களின்¸ உள் நாட்டு உற்பத்திகளின் விலைவாசிகளை உயர்த்தி விட முடியும். ஓட்டுமொத்த குடி மக்களின் நுகர்வுகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிட முடியும். இந்த நிலைமைகள் ஏற்படாது இருக்கவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து¸  மேலை நாட்டு அரசுகள் செவி சாய்க்கின்றன..

ஒரு நாட்டின்  கன ரகத்  தொழில்¸ கைத் தொழில்¸  விவசாயத் தொழில்களில்¸ ஈடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் யாவும்¸ தொழில் நிறுவனங்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் அரசுக்கும் எதிரான நடவடிக்கைகளிலும்¸ போராட்டங்களிலும் ஈடுபடுகின்றன.. முதலாளி¸ தொழிலாளருக்கிடையில் தொழில் ரீதியிலான¸ வேதன ரீதியிலான பிணக்குகளையும்¸  தொழிலாளர்களின் சுக நலன்களையும்¸ முதலாளிகளின் ஒடுக்கு முறைகளையும் கண்டு கொள்ளாத  அரசுக்கு எதிராக  நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள்¸ உள் நாட்டு பண பலம் படைத்த வர்த்தக நிறுவனங்களிடம் உதவி பெறுவதன் மூலம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளனர். அது போன்றே இலங்கையில் தேயிலை¸ ரப்பர் வர்த்தக கம்பெனிகள் ஆட்சியனருக்கு அவ்வப்போது¸ பண உதவி செய்வதும்¸ ஆட்சியமைக்கும் பிரதான தேசிய கட்சிகளுக்கு பரஸ்பரம் தேர்தல் செலவுகளுக்கு பண உதவி செய்வதும் வழமையாக இருப்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்தியாவில் டாட்டா பிர்லா¸ அம்பானி போன்ற பெரும் வர்த்தக நிறுவனங்களே மத்திய அரசை வழி நடத்துகின்றன. அவர்களை அண்டி தொழிற்புரியும் தொழிலாளர்களின் தொழிற் பிரச்சினைகள்¸ நிர்வாக ஒடுக்குமுறைகள் பற்றி  அரசு ஒருபோதும் அத்தொழில் நிறுவனங்களுக்கு எதிராக செயல் படுவதில்லை.
சர்வதேச ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகளிலும் சரி¸ வளர்முக நாடுகளிலும் சரி தொழில் நிறுவனங்களுக்கும்¸ அரசுக்கும் எதிராக சதா காலங்களிலும் எதிர் போராட்டங்கள் நடத்திக் கொண்டே இருக்க வேண்டிய நிலைமைகள் இருந்து வந்தன.

இன்று தொழிற்சங்க போராட்டங்கள் அந் நாடுகளில் குறைந்து வருகின்றன. தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்காத போது¸ அது மனித உரிமை மீறளுக்கான நடவடிக்கை என்றும்¸ தொழிலாளரின்  நலன்களை தொழில் தரும் நிறுவனங்கள் மறுக்கும் வேலை¸ அவையும் மனித உரிமை மீறலுக்கு எதிரான நடவடிக்கை என்றும்¸ நாட்டில் சமூக நீதி மையங்கள் குற்றம் சாட்டுகின்றன.  இவ்வுரிமைகள் மீறும் பட்சத்தில்¸ முதலாளிமார்களுக்கு எதிரான போராட்டங்களை தொழிற்சங்கங்களும்¸ சிவில் அமைப்புககளும் இணைந்து முன்னெடுக்கின்றன.. தொழிற்சாலைகள்¸ வயல் நிலங்கள்¸ ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அரச திணைக்களங்கள்¸ நுகர்வோர் மட்டத்திலான பொது மக்களின் நிலைமைகள்  யாவும் ஸ்தம்பிதம் அடைகின்றன..

இந்த அபாயங்களை உணரும் அரசாங்கம்¸ தொழிற்சங்கங்களையும்¸ தொழில் தரும் நிறுவனங்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து உடனடி தீர்வு காண்பதில் அக்கறை காட்டுகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் வரை நாட்டின் சுமுகமான நிலை¸ தொழிலாளர்களின் கரங்களிலேயே தங்கியிருக்கும் நிலை வெளிப்படையாக புலப்படுகின்றன.

நமது நாட்டில் தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டங்களைத் தவிர¸ தொழிலாளர்களால்¸ துறைசார் ஊழியர்களால் உருவாக்கப்படுகின்றன. அங்கு தொழிலாளர்களே தங்களது தலைவர்¸ செயலாளர்களை வழி நடத்துகின்றனர். தொழிலாளர்களே தங்களது தொழிற்சங்கத்தில் பொறுப்புள்ள பதவிகளை வகிக்கின்றனர். அங்கு தலைவரை¸ செயலாளரை விமர்சிப்பதற்கு தொழிலாளர்களுக்கு உரிமை இருக்கின்றது.

மலையக தொழிற்சங்க முறைகள் வித்தியாசமாகவும்¸ விசித்திரமாகவும் காணப்படுகின்றன. பண வசதி உள்ள தனி நபர்களே சங்கங்களை உருவாக்கி¸ அச் சங்கங்களின் ஏக போக உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். தொழிற்சங்கங்களை தாங்களே உருவாக்காத தொழிலாளர்கள்¸ அச் சங்கங்களில் உறுப்பினர்களாக சேருகின்றார்கள். சங்க உரிமையாளர் கோரும் சந்தா பணத்தை தொழிலாளரின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வதற்கு வசதிகள் செய்து கொள்கின்றனர்.  தொழிலாளர் தங்கள் சங்கத் தலைவரை ஐயா.. என்றும் சேர் என்றும் கைகட்டி  ஒடுங்கி நிற்கின்றனர்.  அங்கு தோழமை கிடையாது..! சங்க உரிமையாளருக்கு தோட்டத் தலைவர்களை மாற்றவோ¸ நீக்கவோ உரிமை இருக்கிறது..

முதலாளிமார் சம்மேளனத்துடன் நட்பையும்¸ ரகசிய ஒப்பந்தங்களையும் வைத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாக தொழிலாளரின் சம்பள பேச்சு வார்த்தைகள் பலஹீனப்படுவதையும் நாம் அறிய முடியும். முதலாளிமார்¸ தொழிற்சங்கவாதிகளின் நட்பை உறுதிப்படுத்திய ஓர் சம்பவத்தையும் இங்கே நினைவூட்ட முடியும். ஒரு தொழிற்சங்க தலைவரின் பிறந்த தினத்தன்று முதலாளிமார் சம்மேளனம் பிறந்த தின பரிசாக அதி உயர்ந்த விலையில் நவீன வாகனம் ஒன்றை வழங்கி பிறந்த தின விழாவையும் அவர்களே நடத்திய சம்பவம் இன்றும் எம் மனதை விட்டு அகலாதிருக்கிறது.

சங்கத்தின் தலைவருக்கு அரசியல் கட்சிகளை உருவாக்க முடியும்..  அக் கட்சியின் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கோ¸ உள்ளுர் தேர்தலுக்கோ போட்டியிட முடியும். சங்க அங்கத்தினர் கட்டாயமாக தனது கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். அத் தேர்தலில் வென்று விட்டால்¸ தொழிற்சங்கவாதி என்ற கட்சித் தலைவர்¸ தொழிலாளரிடமிருந்து அந்நியமாகி விடுவார். வெற்றி பெற்ற கட்சித் தலைவரை¸ ஆட்சியமைக்க முற்படும் கட்சிகள் அவருக்கு அமைச்சு பதவி தருவதாக விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். அந்தப் பதவி மூலம் ஆட்சியாளருக்கு அவர் கட்டுப்பட்ட ஒரு கைதியாகி விடுகின்றார்!. இவ்வாறு இன்று வரையிலும் மலையகத் தலைமைகளெல்லாம் ஒரு மந்திரி பதவியோடு மரணமாகி விடுகின்றன. தொழிற்சங்கவாதியான அமைச்சர் தனது அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து¸  தொழிலாளரின் உரிமைகளை¸ கோரிக்கைகளை தட்டிக் கேட்கும்  தகுதியை இழந்து விடுகின்றார்..

தொழிற்சங்கங்களின் நிலைமைகளைப் பற்றி பேசும்போது பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தை அரசாங்கம் எப்படி நிர்ணயத்து வருகின்றதென்பதையும் நாம் அவதானிக்கவேண்டும்.

தற்போது 22 கம்பனிகாரர்களிடம் மிஞ்சியிருக்கும் தேயிலைத் தோட்டங்கள் 30 வீதமேயாகும்.  1992ம் ஆண்டு 51 ஆண்டுகளுக்கு  குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இத்தோட்டங்கள் 25 ஆண்டுகளை முடித்துக் கொண்டன.. இன்னும் 26 ஆண்டுகள் உரிமை கொண்டிருக்கும். பெருந்தோட்ட கிராம ஒருங்கிணைப்பென்றும்..சுதேசிய மக்களுக்கான சுய தொழில் விவசாயத் திட்டமென்றும் அறிமுகப் படுத்தி இன்று வரைக்கும் ஏறக்குறைய 70 வீதமான தேயிலை நிலங்களை சிங்கள மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக அவர்கள் மத்தியிலான சமூக மாற்றங்களை அரசு செய்துள்ளது.

நல்லாட்சியின் முதல் வரவு செலவு திட்டத்தில் பிரதமராகவிருந்த ரனில் விக்ரமசிங்க சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு தேயிலை தொழிற்சாலை நிர்மானித்துக் கொடுப்பதற்கும்¸ அவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரிப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

பொருளாதாரச் சீரழிவுக்குள்ளாகி கடந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேலாக தினக் கூலிக்கான போராட்டம் செய்துக்கொண்டிருக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு¸ அதுவும் தேயிலைத் தொழிலில் சிங்கள மக்களை விட விற்பன்னராகவிருக்கும் அவர்களையும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நல்லாட்சி பிரதமருக்கு எண்ணமில்லை!.

தோட்டத்தொழிலாளர்களை தேயிலை¸றப்பர் தோட்டங்களின் பாரம்பரியக் கூலிகளாகவே  வைத்துக்கொள்வதில் சிங்கள தேசியக் கட்சிகள் அனைத்துமே ஒரே நிலைப்பாடு கொண்டவைகளாகும். இவர்களோடு இரண்டரக் கலந்து இதே நிலைப்பாட்டை காப்பாற்றிவரும் சமூகத் துரோகிகளான மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல..!

இன்றைய தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிற்சங்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி¸  தங்களுக்கு வாக்களிப்பவர்களாகவே வைத்துக்கொள்வதில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே நிலைப்பாடு கொண்டவைகளாகும்! இவர்கள் ஒருபோதும் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு உடன் பட மாட்டார்கள்.! சிங்களத் தேசியக் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது..!

 முதல் சுதந்திர இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலாகவே  செயற்பட்டனர். 1977 ம் ஆண்டு முதல்  இன்று வரையிலும் தொழிற்சங்கவாதிகள்¸ அமைச்சர்களாகி விடுவதால்¸ தொழிலாளரை பாதுகாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதே வேளை இன்னுமொரு பாதகமான காரியத்தையும் தொழிற்சங்கவாதியான அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். தொழிலாளரின் மேல் நம்பிக்கையிழந்த இவ்வாறான தொழிற்சங்க அரசியல்வாதிகள்¸ தங்கள் கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடாமல்¸ தேசிய கட்சிகளின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றார்கள்.. மேலும்¸ இதன் மூலம் தேசிய கட்சியில் ஓர் அங்கமும் ஆகி விடுகின்றார்கள்.

தேசியக் கட்சிகளின் மூலம் போட்டியிடுவதால்¸ பாராளுமன்றத்தில் சொந்த மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு நேர ஒதுக்கீடு கிடைக்காமல்¸ அடக்கி வாசிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.! தேசிய கட்சிகளில் அதிகமான அங்கத்தவர்கள் இருப்பதால்¸ இவர்களுக்கு சொற்ப நேரங்களே வழங்கப்படுகின்றன... நம்பி வாக்களித்த மக்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு “நேர பிச்சை” கேட்டு¸ ஐந்து அல்லது பத்து நிமிடமே அவதியோடு பேசி முடிக்கும் நிலைமை யாவரும் அறிந்ததே…

பெருந்தோட்ட பாராளுமன்ற  பிரதிநிதிகள் சிலர் தங்களது இருபது இருபத்தைந்து ஆண்டு கால பிரவேசத்தில் மொத்தமாக தொன்னூறு  நிமிடங்கள்¸ முப்பது நிமிடங்கள் என்று பேசிய அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வெட்ட வெளிச்சமாக சான்றுகளோடு¸ பாராளுமன்றத்தில் பேசியதையும் நாங்கள் அறிவோம்..! சொந்த சின்னத்தில் போட்டியிட்டு¸ பாராளுமன்றம் செல்பவர்களால் மட்டுமே தங்களது கட்சிகளுக்கு கிடைக்கும் தாராளமான நேர ஒதுக்கீட்டின் மூலம்¸ ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் விலாவாரியாக சொந்த மக்களின் பிரச்சினைகளைப் பேச முடியும்.

அரசியல் கட்சிக்காரராகவோ¸ அரச பதவி உள்ளவராகவோ அல்லாமல்¸ ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக மட்டுமே தொழிற்சங்கவாதிகள் இருப்பார்களேயானால்¸ அவர்கள் அரசாங்கத்துக்கும்¸ தோட்ட கம்பெனிகளுக்கும் எதிராக போராட்டங்கள் நடத்த முடியும். தேயிலை¸ ரப்பர் பெருந்தோட்ட பொருளாதாரத்தை ஆட்டம் காட்டச் செய்யும் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அரசும்¸ கம்பெனிகளும் தொழிலாளரின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க முன் வருவார்கள். இந்த நிலைமையை உருவாக்க வேண்டுமானால்¸ தொழிற்சங்கவாதிகள் அரசியலில் ஈடுபடாதவாறு¸ தேர்தல்களில் போட்டியிடாதவாறு  ஒரு தடைச்சட்டத்தை கொண்டு வரவேண்டும். இந்தச் சட்டத்தை உருவாக்க தனி நபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரலாம்.

இன்று நாடளாவிய ரீதியில் தொழிலாளர்களின்¸ விவசாயிகளின்¸ அரச ஊழியர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க முன் வரும்    இளம் பாராளுமன்ற பிரதிநிதிகள் பெரும்பான்மையானோர் தற்போதைய பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக இச் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்..  பெருந் தோட்ட  வரலாற்றில்  சுதந்திரமாக செயல்பட்டு¸ சுதந்திரமாக போராட்டங்கள் நடாத்தக்கூடிய  அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொள்வதே¸ மிஞ்சியிருக்கும் தொழிலாளர்களின்  புதிய சிந்தனை மாற்றமாகும்.