பரியேறும் பெருமாள்..

பரியேறும் பெருமாள்...
  

சமூக எழுச்சியற்ற   ஒரு  கதாநாயகப் புரட்சி!

பா.ரஞ்சித்¸ மாரி செல்வராஜ் பார்வைக்கு…! 

- மு.சிவலிங்கம்


இந்தியாவில் உயர் சாதி என்போர் கீழ் சாதி என்போரை இவ்வளவு காலமும் ஒதுக்கி வைத்தனர். இன்று அம் மக்களை அவமானப் படுத்துவதிலும்¸ சித்திரவதை செய்வதிலும்;¸ கொன்று அழிப்பதிலும் வேகமாக முனைந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இக் கொடுமைகளை தினமும் காணக் கூடியதாக இருக்கிறது.

சினிமா ஊடகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் கலைத்துறை வேலைத் திட்டமாக இளம் டைரக்டர் பா.ரஞ்சித் செயல்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். ஆனால் சமீப காலமாக அவரது சாதிக்கெதிரான எதிர்ப்புக்  கோட்பாட்டு  சினிமா ¸  தயாரிப்பாளர்களின் வணிக வருமானத்தை  பெருக்குவதற்காக  மாறி வருவதை  அறிய முடிகிறது….

பரியேறும் பெருமாள் என்ற படத்தை ரஞ்சித் தயாரித்துள்ளார்.. மாரி செல்வராஜ் நெறி படுத்தியுள்ளார்.

காலனித்துவ காலத்தில்¸ பிரிட்டிஷ்  ஆட்சியில்  இந்தியப் பிரஜைகள் எல்லோருமே   சமமாகக்  கணிக்கப்பட்டிருந்தனர்..

சுதந்திர இந்தியாவின் தேச பிதாவாக கௌரவிக்கப்பட்ட எம்.கே. காந்தி  (  “மகாத்மா”) அவர்களே  தாழ்ந்த சமூகத்தினர் என்போரை “ஹரிஜன்" என்றும் கடவுளின் குழந்தைகள் என்றும் பெயர் சூட்டினார்  என்ற விமர்சனமும் உண்டு.   பின்னர் 'தலித்"  இனம் என்ற ஒரு சமூக அடையாளமும் அறிமுகப் படுத்தப்பட்டன. அதையொட்டி  தலித் இலக்கியங்கள்¸ தலித் படைப்பாளர்கள் என்ற அடையாளங்களையெல்லாம் தாழ்த்தப்பட்டோர் என்போரே தங்களுக்குத் தானே பெயர் சூட்டிக்  கொண்டனர்..

இந்திய குடிகள்¸;  இன்று வர்க்க ரீதியாகவோ¸ இன¸ மத  ரீதியாகவோ அன்றி¸  சக மனிதனோடு  கூட  மனிதனாகச் சேர்ந்து வாழ முடியாத சமூக அமைப்பை இந்தியா இன்று வரை கட்டிக் காத்து வருகிறது. ஒரு நாட்டின் இறையான்மை¸ அந் நாட்டு ஒவ்வொரு குடி மகனுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். இந்தியாவில் அந்த அரசியல் அம்சத்தை எதிர் பார்க்க முடியவில்லை.

நண்பர்  ரஞ்சித் ¸  கபாலி..  காலா...  போன்ற படங்களில் சாதித்துவ செயல்களை¸ அதற்கெதிரான சவால்களை    கற்பனாவாத புரட்சிக்காரர்கள்  மூலம்   காட்டி வந்துள்ளார். இன்று இவரது தயாரிப்பில் உருவான  பரியேறும் பெருமாளில்    தாழ்ந்த  இன மக்கள் என்று சொல்லப்படுபவர்களை படத்தில் அறிமுகப்படுத்தும் முறை¸ அம் மக்களை அவமதிப்பதாக இருக்கிறது. மனித இனத்தில் ஏதோ ஓர் வேறுபட்ட இனக்கூறுகளை அறிமுகப்படுத்துவதாக இருக்கிறது.

வெள்ளையர்கள் ஆப்பிரிக்க மக்களின் கூத்துக் கும்மாளங்களை கேலியாக ரசிப்பதற்காகவே சினிமா காட்சிகளில்  காட்டுவதுண்டு.. அது போலவே இந்தப் படத்தில் சம்பந்தமில்லாத பல இடங்களில் இம் மக்களின் ஆட்டம் பாட்டங்கள் காட்டப்படுகின்றன. தொன்மை நிறைந்த இந்திய சுதேசிய மக்களை புதிதாகக் கண்டு பிடித்த ஓர் இனமாக டைரக்டர் ஏன் காட்ட வருகின்றார்..?

நடை முறை வாழ்க்கையிலும்¸ சினிமாவிலும் சாதி குறைந்தோர் என்பவர்கள் எல்லோரும்¸  சாதி உயர்;ந்தோர் என்பவர்களைக் கண்டு  பயப்படுபவர்களாகவே இருக்க வேண்டுமா..? அவர்கள் அடிக்கும் போது அடி வாங்கி சாக வேண்டுமா..? அவர்களை எதிர்த்து¸ சாகடித்து¸ இவர்களும்  சாகக் கூடாதா..?

2002  அல்லது  2003 ம் ஆண்டில் தமிழ் நாட்டில் உசிலம்பட்டி  என்ற  கிராமத்தில்¸ ஒரு  உயர் சாதி  என்ற ஆசிரியர்¸ தாழ்ந்த சாதி என்ற மக்களிடம் வீடு கட்ட நிலம் வாங்கித் தருவதாக தலா மூவாயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாகவும்¸ அவருக்கெதிராக நடவடிக்கையில் இறங்கிய ஒருவரை அடித்து இழுத்து வந்து¸ அவர் முன்னால் வாழை இலையில் மலம் கழித்து¸ அதை சாப்பிடச் செய்த உண்மை சம்பவம் நினைவுக்கு வருகிறது. இச் சம்பவம் பற்றி  அந்த ஊரில் பெரிதாகக்  கண்டனக் குரல் எழுப்பப் பட்டது. சாப்பிட்டவனை கண்டிக்காமல் சாப்பிட வைத்தவனையே  கண்டித்தார்கள். அதே நிலைமை….அதே பார்வைதான் இன்று வரை தொடர்கின்றது.  இச் சம்பவம் பற்றி  விடுதலை சிறுத்தைகள்    இயக்கத்தினர்¸  தங்களது இயக்கத்தின் ஏடான “தாய் மண்” பத்திரிக்கையில்  தொடர்ந்து  கண்டனக்  குரல் கொடுத்து  வந்தனர்.
இப் படத்தில்  உயர்ந்த  சாதி  இளைஞர்கள் கூட்டமாக வரும் போது¸ தாழ்ந்த சாதிக்கார இளைஞர்கள்   பயத்துடன்   அகன்று  மறைந்து போவதாக ஏன் டைரக்டர் மாரி செல்வராஜ்  காட்ட வேண்டும்..? மேலும் சாதி வெறி பிடித்த கிழவன் ஒருவன் இம் மக்களின் இளைஞர்  யுவதிகளை நய வஞ்சகமாகக் கொலை செய்து வருவதை காட்டுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்..?  சாதி குறைந்த மாணவனை சட்ட கல்லூரியிலும்¸   நகைப்புக்குரியவனாகக் காட்டப் படுகின்றது.

சாதி  உயர்ந்த  இளைஞர்கள்  தாக்கும் போது¸ சாதி குறைந்த இளைஞர்களும் தாக்கும் சிந்தனையை  ஊட்டும் போதுதான்  சாதித்துவம்   அடக்கப்படும். இப் படத்தில் சாதி குறைந்தோர் பரிதாபமாகக் கொல்லப் படுவதும்¸ இழிவு படுத்தப்படுவதும்¸ அம் மக்கள் வாயில்லாப் பூச்சிகளாக சாவையும்¸  கொடுமைகளையும் ஏற்றுக்  கொள்வதாகவே செல்வராஜ்  சித்தரிக்கின்றார். 'கொடு வாளினை எடடா... கொடியோர் செயல் அறவே...!”  என்ற பாரதிதாசன் கவிதை இவர்களுக்கு தெரியாமல் இருக்காது..!

அடுத்த பாடல் “ஓடப்பராயிருந்த ஏழையப்பர்... உதையப்பராகி விட்டால்... உதையப்பர்.. ஓடப்பராகிடுவார்... இதை உணரப்பா நீ..!”.  என்ற  அவரது பாடல் வரிகளையும்  இவர்கள் அறியாமலில்லை.!

இப் படத்தில் கதாநாயகன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையும் ஏளனத்துக்குள்ளாவதும்¸ சக மாணவர்களால் பல சந்தர்ப்பங்களில் அடி உதை வாங்குபவராகவும்¸ வகுப்பில் மடையனாக¸ கோமாளியாகவும் காட்டப்படுகிறான். தமிழ் சினிமாவுக்கே சொந்தமான  கலாசாரமான  ஒரு அழகிய காதலி மூலம் கதாநாயகன் திருந்துவதையும்¸ முன்னேறுவதையும் இப் படம் காட்டுகிறது.

அடுத்து¸ கீழ் சாதி மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை  டைரக்டர் காட்டத் தவற வில்லை. பரியேறும் பெருமாளின் தகப்பன் பெண்தன்மை கொண்டவராகவும்¸ பெண் குரல் கொண்டவராகவும்¸ தோற்றமும் பார்ப்பவர்கள் எவரும் எள்ளி நகையாடுவதற்கு ஏற்றவராகவும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. . சட்டக் கல்லூரிக்கு வந்திருந்த அவரை  உயர் சாதி மாணவர்கள் பகிடி வதை செய்வதும்¸ அவரின் வேட்டியைத் தூக்கி பார்ப்பதும்¸ வேட்டியை அவிழ்த்து வீசுவதும்¸ அவர் அம்மணமாக அழுதுக் கொண்டு ஓடுவதும்¸ அவர்கள் அவரைத் துரத்தி அடித்து¸ பள்ளத்தில் தள்ளுவதுமாக  காட்டப்படுகின்றது.  இதை பொழுது போக்காக  எதிர் வரும் புதிய சமூகமும் இவ்வாறு நடக்க இக் காட்சி உதவக் கூடும்.

மேல் சாதியினரின் கொடுமைகளைக் காட்டி¸ கீழ் சாதி மக்கள் மேல் பரிதாபம்  ஏற்பட   செய்வதை விட¸ கீழ் சாதி மக்களும் கொடுமைகளுக்கு எதிராகக் கொந்தளித்து எழுந்து ¸ மேல் சாதியினரை அடக்கி வைக்கும் எழுச்சியைக் காட்டினால்தான்... சாதித்துவ  கொடுமைகளை  இந்தியாவில் அழிக்க முடியும். அதுவன்றி..போதனை மூலமாக..போலீஸ் முறைப்பாடு மூலமாக… பொது போரட்டங்கள் மூலமாக  நியாயம் தேடுவதன் மூலமாக  சாதித்துவத்தை ஒழித்துக் கட்ட  முடியாது.!

 மாரி செல்வராஜ்  இந்தப் படத்தில்  யதார்த்தத்தைக்  கை விட்டு விட்டார்.  கதாநாயகியின்  தந்தை பரியேறும் பெருமாளை கொலை செய்ய முயற்சித்து¸  பின் இறுதிக் காட்சியில் தன் மகளை அந்த “ தாழ்ந்த சாதி” பையனுக்கு கட்டி வைக்கும் நோக்கில்¸ அவனை வரவழைத்து ¸ அன்பாகப் பேசுகிறார்.   கதாநாயகனும்  தங்களுக்கு நேர்ந்த  சாதியவாதிகளின் அட்டூழியங்களைச்  சுட்டிக் காட்டுகிறான். கதாநாயகி அந்த இருவருக்கும் தேநீர் வாங்கி வருகிறாள்.. கதை சுபம்¸ மங்களம் என்று முடிகிறது.

இந்தியாவின்  எரியும்  பிரச்சினையான¸  சாதி வெறிகளுக்கு எதிராக  ஒரு சமுதாய எழுச்சியைக் காட்ட முன்வராமல்¸ தனி மனிதன் போராட்டமாக..வழமையான கதாநாயகன் போராட்டமாக காட்டியதன் மூலமாக இக்கதையின் வலிமை காணாமற் போய்விட்டது!.¸ சில குதிரையேறும்  பெருமாள்களை காட்டுவதன் மூலம் என்ன தீர்வை அடையமுடியும்? இன்றுவரை எம்ஜியார் பாணி புரட்சிகளை விஜய்…அஜித்…விக்ரம்..மூலம்  காட்டி  சமூக எழுச்சிகளை மழுங்கடிக்கும் விபரீதங்களைப்    புரிய  புதிய  சினிமா சிந்தனையாளர்கள்   முன் வரக் கூடாது!

சினிமா என்பது ஓர்  அபூர்வமான  சமூக ஊடகமாகும்.   புதிய  இளம் சினிமா சிந்தனையாளர்கள்  சமூக  யதார்த்தங்களை  உற்று  நோக்கி… வாகை சூட வா ¸ குற்றம் கடிதல்¸ அப்பா¸ ஜோக்கர்¸   மேற்கு தொடர்ச்சி மலை  போன்ற படங்களை மனதில் இறுத்தி  சமூகத்துக்கான  வலுவான தகவல்களைத்  தந்தால்¸ மக்களுக்கான சினிமா விரைவில்  தமிழ்நாட்டில்   உருவாகலாம்..