மஞ்சள் கோடுகள்...

மஞ்சள் கோடுகள்...
-  மு.சிவலிங்கம்

செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..!

“இன்னும் கொஞ்ச நேரம்மா..!”

“காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”


அம்மாவின் நச்சரிப்போடு செல்வி படுக்கைக்குப் போனாள்.


“கடவுளே..!  கடவுளே..! இந்த கொலஷிப் டெஸ்ட் வச்சானுங்களே பாவிக..! புள்ளைக மெழுகுவர்த்தியா உருகுதுக… ச்சே… ச்சே..!”  மஞ்சுளா வீட்டைக் கூட்டிக் கொண்டே முனு முனுத்தாள்.


மஞ்சுளா படுக்கைக்குப் போன மகளை  மீண்டும் கூப்பிட்டாள். பால் கலக்கிக் கொண்டு  ஓடினாள். மகள் குடித்து முடித்து ¸ அம்மாவுக்கு முத்தம் கொடுத்து விட்டு¸ போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள்.


சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு¸ பிள்ளைகளுக்கு காலையில் இடியப்பம் ¸ லெவேரியா செய்வதற்காக மாவை அவித்து வைக்கத் தயாரானாள். காலையில் இரண்டு பிள்ளைகளும்  இனிப்புடன் சாப்பிடவே விரும்புகின்றன. மஞ்சுளா சின்ன மகன் தூக்கத்தில் சினுங்குவதை ஓடிப் போய் பார்த்து விட்டு ஓடி வந்தாள்.


படுக்கை அறைக்கும்¸ சமையல் அறைக்கும் கொஞ்சம் தூரம்தான். வீடு வாடகை வீடு.. “நாங்களா வாஸ்து.. வழம பாத்து கட்டினோம்..?” மனதுக்குள் சிறு சலிப்பு… மஞ்சுளாவின் கணவன்  மூர்த்தி  வத்தளையிலிருந்து களுத்துறைக்கு வேலைக்குப் போக வேண்டும்.. – தேர்தல் காரியாலயத்தில் உத்தியோகம்… இன்று கண்டிக்கு ஆப்பீஸ் வேலையாகப் போயிருக்கிறான்.  களனி  புதுப் பாலத்தருகில் இறங்கி நின்றால்¸  நீர் கொழும்பு பஸ் ¸  அல்லது  187 ம் நம்பர் விமான நிலைய கடைசி பஸ் வர 10¸ 11  மணியாகி விடும். கணவனை நினைத்துக் கொண்டே பம்பரமாக  மறு நாள் காலை வேலையை இப்போது செய்துக் கொண்டிருக்கிறாள்.


“பாண் வாங்கிட்டு வரச் சொன்னேன்… பகல் சாப்பாட்டுக்கு ரெண்டு பேருக்கும் கெழங்கு பெரட்டி¸ டோஸ்ட்டருல போட்டுக் குடுத்தா போதும்.. ஆளுக்கு ரெண்டு சிலைசு… அதையும் வீட்டுக்கே திருப்பி கொண்டு வருவாங்க..!  பாவம்... இந்த இஸ்கூல்  புள்ளைங்க…!     படிப்புக் காலம் முடியிற வரைக்கும்  அரப் பட்டினி  …கொலப் பட்டினி   தண்ணி  வென்னி எதுவுமே இல்லாமே  “ மென்டலாகி “ கெடக்குறாங்க..! இன்னக்கி ராத்திரிக்கு எங்க ரெண்டு பேருக்கும் பகல் ஆக்கின மீன் கொழம்பு இருக்குது… போதும்..  புளி போட்டு வச்சிருக்கேன் கெடாது!... அவருக்கு தலபத்.. கல் மாலு தான் பிடிக்கும்..!”   இப்படி.. சுய புராணம்  தனக்குத் தானே பாடியவாறு.. முகத்தைக் கழுவிக் கொண்டு உடை மாற்றியவள்¸ தையல் மெஷினில்  போய்  உட்கார்ந்தாள்.


மஞ்சுளா அருமையான பேபி  ட்ரஸ் டெயிலர். ரவிக்கை¸ பாவாடை ஓடரும் நிறையவே வரும்.  அவள் வசிக்கும் அந்த ஏரியாவில் அவளுக்கு  கிடைக்கின்ற தையல் வருமானத்தில்தான் வீட்டு வாடகை¸ லைட்  பில்¸  தண்ணி பில்¸ மரக்கறி¸ அரிசி¸ மீன் எல்லாமே! சில அதிஸ்டமுள்ள  குடும்பங்களில் மனைவி தான் ஜீவ நதி...நிர்வாகம்...பட்ஜெட் தயாரிப்பு.. சேமிப்பு.. இயக்கம்..  கணவனைவிட  கடும்  உழைப்பு …. அவனுடன் பரஸ்பர ஒத்துழைப்பு..


மூர்த்தி ஆடம்பரமில்லாத குடும்பஸ்தன்    மகளையும்¸ மகனையும் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதையே லட்சியமாகக் கொண்டவன்.


மஞ்சுளா மகளை டாக்டராக்க வேண்டும்.. மகனை இஞ்;சினியர் ஆக்க வேண்டும்… என்ற அதே அந்த காலத்து பத்தாம் பசலி எதிர்பார்ப்புடன் இருந்தாள்.  இவைகளைத் தவிர்த்து இன்றைய விஞ்;ஞான காலத்தில் எவ்வளவு புதிய கல்வி¸முறைகள்…  புதிய தொழில்கள் வந்திருப்பதை அறிந்ததுமில்லை… அறிய விரும்புவதுமில்லை…!


நாளைய கலியாணத்துக்கான ஓடர் எடுத்திருந்த இரண்டு ரவிக்கைகளை தைத்து முடித்து விட்டாள். காலையில் ஏழு மணிக்கும் குடுக்கலாம்… விடியக் காலை அஞ்சு மணிக்கும் குடுக்கலாம்.


ரூபி  நாய் கொஞ்சுது… மூர்த்தி வந்து விட்டான். பட்டர் புருட்… பொலஸ்… சோளம் ¸ மரக்கறிகள்  கடுகன்னாவ சாமான்கள்…! “இந்தா டெவோன் கடை பான்.. ரோல்ஸ்… கட்லட்ஸ்…!”


“லேசா போச்சு..! காலை சாப்பாடு ஓ.கே..!”


மஞ்சுளா இரவுச் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். மூர்த்தி உடம்பைக் கழுவி¸ சாரத்தை  உடுத்தி  வந்தவுடனேயே முதல் வேளையாக மகளையும்¸ மகனையும் எழுப்பி ¸ தொந்தரவு  பண்ணி¸¸ அவர்கள் தூக்கத்தில் “என்னப்பா..?” என்று  உளறி  முனகியப்  பின்னர்தான் சாப்பாட்டில் உட்காருவான். இயந்திர வாழ்க்கை…  பிள்ளைகள் தூங்கிய பின்னர் வீட்டுக்கு வருவதும்… அவர்கள் எழும்புவதற்கு முன்னரே எழும்பி வேலைக்குப் போய் விடுவதும்…. தொழில் செய்யும்  அப்பா மார்கள் துரதிஸ்டசாலிகள்… பெற்ற பிள்ளைகளிடம்¸  கொஞ்சி குலாவி¸ பழகும் வயதில் தூர ஒதுங்கியே வாழும் வாழ்க்கை…


மஞ்சுளா  ரோல்ஸ் பார்சலை அவிழ்த்து¸ ஒன்றை எடுத்து¸ இரண்டாக வெட்டப் போனாள்.. “ நெறைய வாங்கிட்டு வந்திருக்கேன்… வெட்டாதே…! தாராளமா சாப்புடு..!”  என்று சத்தம் போட்டான். “கத்தாதீங்க..! நாலாவது வீட்டுக்கும் கேக்கப் போகுது..!  ஒரு நேரத்துல ரெண்டா வெட்டி சாப்பிட்ட காலமும் இருந்திச்சிதானே..?!”


“ஆமா..! ஒரு அப்பில் பழத்த  நாலா வெட்டிச்  சாப்பிட்ட காலமும் இருந்திச்சிதான்..! இப்போ ஆண்டவன் புண்ணியத்துல தல தூக்கி வாறோம்.. ஆளுக்கொரு அப்பில்! அவர்களது அந்த இரவின் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கடந்த காலம்¸ நிகழ் காலம்¸ எதிர்காலம்  என்று முக்காலங்களையும்  விமர்சனப் பார்வையில் பேசி தீர்த்து விட்டார்கள்.


சாப்பிட்டுக் கொண்டே மஞ்சுளா  கொஞ்சி கொஞ்சிப் பேசினாள்.. “செல்விக்கு வயசு பத்தாயிருச்சுல்ல..? மொகத்த பாத்தா பொலிவு தெரியுதில்ல…?  சின்ன வயசுல அவள மாதிரியேதான் நானும் இருந்தேன்..!  புள்ளைக்கு கொமரி
மூஞ்சு ….கொஞ்சம் கொஞ்சமா தெரியுதில்ல..? பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க..! செல்விக்கு ரொம்ப  புரொய்லர்  கோழி  குடுக்க கூடாதுன்னாங்க… புள்ளைக இப்போ  ஒம்பது வயசுல. … பத்து வயசுல பெரிய மனுஷிகளாகுதாம்..!” “பிஸ்ஸா ச்சிக்கன்…கேயெப்ஸி ச்சிக்கன்…  பிரைட் ரைஸ் ச்சிக்கன்..டெவில்ட் ச்சிக்கன்.. அப்பப்பா  கோழி! கோழி.!! கோழிய விட்டா  வேற  எறைச்சி அயிட்டமே இல்லையா? “  இடையில் வாயைத் திறந்தான் மூர்த்தி.  “ இனிமே ஆடு…  மீன்தான்!   “சோளம் பொரிகிற மாதிரி அவள் பொரிந்துக் கொண்டிருக்கும் அழகை கண் சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.


“அப்போ.. நம்ப வீட்டுல சீக்கிரம் ஒரு “பங்ஷன்” வரப் போவுதுன்னு சொல்லு…?” மூர்த்தியின் பேச்சைக் கேட்டு குதூகலித்துப் போனாள்.


ஒரு இளம் தம்பதியினர் வீட்டில் முதல் பெண் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டால்¸ அவர்கள் மனம் குதூ களிக்;கும் இன்பத் துடிப்புகள் அளவிட முடியாதவை… அவர்களது மகிழ்ச்சி… டென்ஷன்… பூரிப்பு..எல்லாம் படாத பாடு பட்டுப் போகும்.! உணர்ச்சி வசத்தோடு முதல் மங்கள வைபவம்…. பூப்புனித நீராட்டு விழா…. ஆழைப்பிதழ் அடித்து¸ வெற்றிலை தாம்பூலத்தோடு¸ வீடு வீடாய் போய் கணவனும்¸ மனைவியுமாக “வந்திருங்க…! வந்திருங்க…!! கட்டாயம் வந்திருங்க !!!”  என்று துடிப்போடு¸ ஊரைக் கூட்டி தேரை இழுப்பது போன்ற  காரியமாகவிருக்கும்! இன்னும் சாப்பாட்டு மேசையை விட்டு அவர்கள் இருவரும் எழும்ப வில்லை. மூர்த்தி  ¸அப்பாவி மனைவியை மேலும் சீண்டினான்.  “செல்வி எவனையாவது “லவ்” பண்ணிக்கிட்டு  வந்து¸ கட்டி வைய்யின்னா…. நீ என்னா சொல்லுவே..?”  “ச் சீ..! ச்சீ..! எம் புள்ள அப்படி செய்யவே  மாட்டா…! என்ன மாதிரித்தான்  லவ் பண்ண மாட்டா..!”


“அடி..! ஒங் காலம் வேற… அவ காலம் வேற…!”
“அது சரி… எம் புள்ள அப்படி நடந்துக்கிட்டா நீங்க என்னா செய்வீங்க..?”


“சிங்களவனோ… தமிழனோ… முஸ்;;லிமோ…நல்ல தொழில் செய்யுற நல்ல பையனா  இருந்தா¸ மருமகனா ஏத்துக்குவேன்…!”


“எம் புள்ளைக்கு டாக்டர் மாப்புள்ளதான் வேணும்..!”


“டாக்டர் நோயாளியோடு நோயாளியா கெடப்பான்..! லோயர்  அப்பாவிய¸ கொலையாளியா மாத்துவான்!  ரெண்டு பேருமே  கஷ்டவாளிகிட்டே  புடுங்கித் திங்கிறவன்க!..  இந்த என்ஜினியர்¸ டாக்டர்¸ லோயர்..  மூனு பேரையும்  விட்டா¸ வேற எவனுமே குடும்பம்; நடத்த மாட்டானா..?


“எம் புள்ளைக்கு டாக்டர் மாப்பிள்ள கெடைச்சாலும்¸ அவர வீட்டுக்கு மாப்பிள்ளையாதான் வச்சுக்குவேன்… செல்விய  வெளிக் குடும்பத்துக்கு  அனுப்பவே மாட்டேன்..!  அங்க மாமனா மாமியா புடுங்கல் இருந்தாலும் இருக்கும்!


“நீ மகள கட்டிக்குடுக்கவே மாட்ட..! அம்பது வயசுல கொண்டு போய் நிறுத்துவே..! இந்தக் காலத்துல தாய்¸ தகப்பனுக்கு கட்டுப்படுற புள்ளைகள்தான் பாவம்… சாமியாரா.. போய்கிட்டு இருக்காங்க..!!”
முரண்பாடுகள் இருந்தாலும்¸ அவர்களது செல்லமான உரையாடல்கள்¸ அந்த இரவை மகிழ்ச்சியுடன் நகர்த்திக் கொண்டிருந்தது..*****

விடியற் காலை நான்கு மணி…. கடிகாரம் இசையோடு எழுப்பி விட்டது.. மஞ்சுளா யந்திரமாகினாள். இடியப்பம் அவித்து¸ பால் சொதி வைத்து¸ தேங்காய் சம்பலும்  முடிந்தது.. மகனும்¸ மகளும் காலைச் சாப்பாடு இனிப்பாக சாப்பிட லெவரியாவும் அவித்து¸ ஹொட் பொட்டில்  அடைத்து வைத்தாள். கட்லட்ஸ் பெட்டிஸையும் சூடாக்கி வைத்தாள். கணவனுக்கும் கத்தரிக்காய் குழம்பு¸ பருப்பு கூட்டுடன் மீன் பொறியல் செய்து பார்சல் கட்டிக் கொடுத்தாள்.  பம்பரமாய் சுழலும் அவளது வேலைகளுக்கு மத்தியில் ¸ மூர்த்தி ஆறு மணிக்கெல்லாம் பஸ் ரோட்டுக்கு நடையைக் கட்டினான்.

நேரம் இப்போது ஏழு மணி… செல்வியும்¸ தம்பியும் அவதி அவதியாக ஸ்கூல் பேக்குகளை தோலில் மாட்டிக்கொண்டு அம்மாவைக் கூப்பிட்டார்கள். இலேசாக விபூதி  வைத்து ¸ இருவரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்தாள்.. விடிய நான்கு மணிக்கு ஊற்றி வைத்த “ஐஸ் தேத்தண்ணியை”  குடித்து விட்டு¸ “அப்பாடா !” என்றாள். மீண்டும் அந்தப் பகல் பொழுது அவளை தனிமையாக்கியது…


அடுத்த வேலையாக  இரண்டு பிள்ளைகளுக்கும் ஸ்கூல் பேக் வாங்க கடைக்குப் போக வேண்டும்..*****

அந்த பஸ் டிரைவரை எல்லோரும் ஏசிக் கொண்டே வந்தார்கள்… செல் போனை காதில் வைத்தவன் ஒரே அரட்டை…. நினைத்த நினைத்த இடங்களிலெல்லாம் பிரேக் அடிக்கின்றான்.. ஒருவர் மேல் ஒருவர் பஸ்ஸ_க்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள். காலைப் பயணம் எல்லோரையும் கவலைக்குள்ளாக்கியது. முன் ஆசனத்தில் இருந்த பெரியவர் டிரைவரைப் பார்த்து ஏதோ சொல்ல நினைத்தார். அவனைப் பார்த்ததும் அவனிடம் பேச விருப்பமின்றி உட்கார்ந்து கொள்கிறார். டிரைவர் பரட்டைத் தலையன்… கழுத்திலே நாய் சங்கிலி போன்ற செயின்… கையில் பல வளையல்கள்… விரல்கள் நிறைய இரும்பு மோதிரங்கள்..  காது கிழியும்படியான சத்தத்தில் “ஸ்பீக்கரில்” பாட்டு¸. போனை வைத்தவன்¸ இப்போது “கோலயாவிடம்” பல்லை இளித்து… இளித்து.. கேலிக் கதைகள் …பக்கவாட்டில்  டீச்சர்மார்கள்  உட்கார்ந்திருந்ததில் அவனுக்கோர்   கிலுகிலுப்பு.

வண்டிக்குள்  விறுகு கட்டைகளைப் போல  பிரயாணிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.


வேகமாக ஓடிக் கொண்டிருந்த பஸ்¸ கிரீச் என்ற பலத்த சத்தத்துடன் குலுங்கி நின்றது.. அந்த சந்தியில் ஒரே கூக்குரல்.. “ஓ” வென்ற சத்தம்… வீதியில் நின்ற சனக் கூட்டம் பஸ்ஸை சூழ்ந்துக் கொண்டது..


பஸ்ஸை விட்டு இறங்கிய டிரைவர்¸ சாவியை வீசிவிட்டு¸ ஒடத் தொடங்கினான். அவனை மடக்கிப் பிடிக்க…. விரட்டிக் கொண்டு சிலர் ஓடினார்கள்.


பஸ்ஸை விட்டு எல்லோரும் அதிர்ச்சியோடு இறங்கினார்கள். எல்லோரும் வாய் விட்டுக் கத்தினார்கள்.


பாதையைக் கடக்கும் மஞ்சள் கோட்டில்  ஒரு பாடசாலை மாணவி ….  தனது முதுகில் சுமந்தப்  புத்தகப் பையோடு¸  தவளையைப் போல  தார் ரோட்டில்  ஒட்டிக் கிடந்தாள். அந்தப்  பிஞ்சு உடலின்  இளரத்தம்  வீதியை நனைத்துக் கொண்டிருந்தது… பதட்டச் சூழலின் சலசலப்போடு  பொலிஸ் வந்தது.. சடலத்தைத் தூக்கி பாதையோரத்தில் மூடி வைத்தது….

 கொஞ்ச  நேரத்துக்கு முன்னால் அந்த டிரைவரிடம் பேச முற்பட்ட அந்தப் பெரியவர்¸ உணர்ச்சி வசப்பட்டுக் குமுறினார். “படிப்பறிவில்லாதக் காடையன்;களுக்கெல்லாம் டிப்பார்ட்மென்டுகாரன்கள் லைசென்ஸ்  கொடுக்கிறான்களே!” என்று வாயில் வந்த தூஷன வார்த்தைகளையெல்லாம்  கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.


“வாகனம் ஓட்டுறதுக்கு காடையன்களுக்கும் படிப்பறிவு இல்லாத மடையன்களுக்கும் லைசன்ஸ் குடுக்கக் கூடாது!”
“நாட்டுல்ல  கூடுதலா லஞ்சம் வாங்குற  டிபார்ட்மென்டே  இதுதானே  சேர்!”


 “மஞ்சள் கோட்ட எவனும் மதிக்குறானுங்குளில்லையே..?... மஞ்சள் கோட்டுலேயே அடிச்சிக் கொல்லுறானுங்களே..?”


வாகனம ;ஓட்டிகளுக்கிட்ட  பண்பாட்ட எதிர் பார்க்க முடியாது..! மஞ்சள் கோட்டுக்கு ரெண்டு பக்கமும் ஸ்பீட் பிரேக்கர் போடணும்!”
'சாத்தியப் படுமோ... படாதோ...மஞ்சள் கோட்டுக்கு மட்டுமில்ல... நாடு முழுக்க எல்லா ரோடுகளுக்கும் 'ஸ்பீட் ப்ரேக்கர்" போடணும் சேர்..!"


' 'கார்ப்பெட்'  ரோடு போட்ட பொறகு எல்லா  வண்டி ஓட்டி பயல்களுக்கும் கண்...மண்... தெரியாமப் போச்சி..!"


“நாட்டுல ஒரு நாளைக்கு வாகன விபத்துல எத்தன பேரு சாகுறாங்க?..இதுபத்தியெல்லாம் எவன் பார்லிமென்டுல..பேசுறான்..?”


'போக்குவரத்து மந்திரி கூட பார்லிமென்டுல பேசுறான் இல்லையே..?"


பதட்டமான அந்தச் சூழலில் வீதியில் ஆவேசப்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருத்தரும் வாயில் வந்த கண்டன வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள்... 


“மாணவி செல்வியின் தம்பியோடு¸  அவளது வீட்டை நோக்கி பொலிஸ் ஜீப் பறந்துக்கொண்டிருந்தது…