மு.சிவலிங்கம் - அறிமுகம்


மு.சிவலிங்கம் மலையகப் பெருந்தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவர். பிரபல தேசிய பத்திரிக்கையான வீரகேசரி ஸ்தாபனத்தில் பத்திரிக்கையாளராகப் பணி புரிந்தவர். 

தொடர்ந்து தொழிற்சங்க பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக அரசியல் பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக செயற்பட்டவர். பத்திரிக்கை துறைகளுக்கப்பால் அரச பாடசாலை ஆசிரியராக தொழில் புரிந்தவர். 

மலையக மக்கள் முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களுள் முக்கியமானவர். அக் கட்சியின் செயலாளர் நாயகமாகக் கடமை புரிந்தவர். மத்திய மாகாண சபையின் பிரதி தலைவராகவும் பணி புரிந்தவர். அரசியல் காரணங்களுக்காக இரண்டு முறை சிறை சென்று திரும்பியவர். கலையுலகில் நாடகம், சினிமாத்துறை கலைஞராகவும் - இலக்கிய வாழ்வில் கவிதை, சிறுகதை, நாவல், அரசியல் கட்டுரைகள், நகைச்சுவை கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் என தனது ஆளுமையை பரவலாக்கிக் கொண்டவர்.  


மூன்று முறை அரச சாகித்திய விருதுகளையும், சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது, தமிழியல் விருது, கனகசெந்திநாதன் விருது கலாபூஷணம் விருது என தனது படைப்புச் சிறப்புகளுக்கான அங்கீகாரம் பெற்றவர். 

சுப மங்களா, தாமரை, தீராநதி, ஆகிய தமிழக ஏடுகள் மு.சியின் படைப்புக்களை விரும்பி பிரசுரம் செய்து வந்துள்ளன.. மலைகளின் மக்கள், ஒரு விதை நெல், ஒப்பாரி கோச்சி, வெந்து தணிந்தது காலம், ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களும்; “உயிர்” குறு நாவலும் “மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்” ஆய்வு நூலும்,ஆங்கிலப்படைப்பாளர் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் “Born to Labour” என்ற நூலின் தமிழாக்கமான “தேயிலை தேசம்” என்ற படைப்புடன் தொடர்ந்து எழுதி வருபவர். 

அரசியல், சமூக எழுச்சியை உருவாக்கும் பிரச்சாரப் படைப்புக்களே மு.சியின் எழுத்துக்களாகும். இந்த இலட்சியத்தோடு எழுத்துலகில் நிற்கும் இவரை தனித்துவமான படைப்பாளியாக வாசகர் உலகம் அடையாளப்படுத்தியுள்ளது. 

இலக்கியவாதியாக மட்டுமின்றி சமூகவாதியாகவும் மக்களுடன் தோழமையோடு சேர்ந்து நிற்கும் மு.சி இணையத்தளத்தவர்களோடு இணைந்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றார்…..