“கானா பாடல்கள்”

 “கானா பாடல்கள்” நூறாண்டுகளுக்கு முன்பே இலங்கை மலையகத்தில் “கோமாளி பாடல்களாக.... பபூன் பாடல்களாக” தோற்றம் பெற்றவைகளாகும்.

யாழ்ப்பாணம்¸ தந்தை செல்வா கலையரங்கில் 10.11.2019 நடைபெற்ற ஆய்வரங்கில் “சமூக மாற்றத்திற்கு இசையும்¸ அதன் சக்தியும் மலையகத்தில் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளன”¸ என்பது பற்றிய எனது ஆய்வுரையின் சுருக்கம்:-

கானா பாடல்கள் சமீபத்தில் தோற்றம் பெற்ற புதிய இசை பாடல்கள் என்றும்¸ குறிப்பாக சென்னையில் உருவாகியவை என்றும்¸ இசையமைப்பாளர் தேவா அவர்களே சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தினார் என்றும் பேசப்பட்டு வருகின்றன. கானா உலகநாதன்¸ கானா பாலா¸ கானா சுரேஷ் என்று பலர் இன்று பிரபல்யமாகி வருகின்றனர். கானா பாடல்கள் நகைச்சுவை¸ நையாண்டி உணர்வுகளோடு சமூகக் கருத்துக்கள் பாடப்பட்டு வருபவையாகும்.
இப் பாடல்கள் முதன் முதலாக மரண வீடுகளில்தான் பாடப்பட்டன. இறந்தவர்¸ தான் வாழ்ந்த காலத்தில் சமூகத்துக்கு செய்த நல்ல காரியங்களையும்¸ அவரது அருமை பெருமைகளையும் கதை கதையாகச்; சொல்லிப் பாடுவார்கள். பாடல்கள் தப்பிசைக் கலைஞர்கள் மூலமே பாடப்பட்டன. இறந்த நாள் முதல் அடக்கம் செய்யும் நாள் வரை¸ இந்த இசைப் பாடல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். தப்பிசைக் கலைஞர்களில் ஒருவர் முழு நாள் பாடகராகவே இருப்பார். அஞ்சலி செய்ய வருபவர்களை தப்பிசைக் கலைஞர்கள் வீதியிலிருந்து வீடு வரை பாடல் இசையோடு அழைத்து வருவார்கள். இவர்களுக்கு அதனால் சன்மானமும் கிடைக்கும்.!

இவர்களது கேலி கிண்டல் பாடல்கள் நாளடைவில் சமூக அநீதிகளுக்கு எதிராகவும்¸ சமூக மாற்றத்துக்காகவும்¸ சமூக எழுச்சிக்காகவும் திசை திரும்பின. தவறு செய்து வருபவர்களை¸ சமூக எதிரிகளை¸ நகைச்சுவையாகக் கண்டனம் செய்து பாடத் தொடங்கினார்கள். இப்போது சினிமாவிலும்¸ சமூக நிகழ்ச்சிகளிலும்¸ கானா என்ற பாடல்கள் மூலம் பெண்களை கொச்சையாகக் கிண்டல் செய்து¸ காதல் பாடல்களை பாடுவதையே காணக் கூடியதாகவிருக்கின்றது. கானம் என்ற சொல்லிலிருந்துதான் கானா பாடல்கள் உருவாகியிருக்கலாம். அது வேற்று மொழி பாடலல்ல. என்பதை நாம் உறுதிப் படுத்தலாம்.

இலங்கை மலையகக் கூத்துக்களில் பபூன் என்ற கோமாளி பாத்திரம் சமூகப் பிரச்சினைகளை¸ சமூகக் கோளாறுகளை கிண்டல் செய்து பாடி வருவதை அறிகின்றோம். தோட்டப்புறங்களில் கூத்துக்கள் அருகி வருவதால் கோமாளி என்ற பபூன் பாடல்களும்¸ நாட்டார் பாடல்களின் ஆய்வு நூல்களிலேயே அடங்கி விட்டன.

சமீப காலமாக ப.ரஞ்சித் போன்ற தமிழக சினிமா கலைஞர்களின் வழி நடத்துதலால் Castless collective music band என்ற மேடை இசைக் குழுவினரால் தமிழ் நாட்டில் சமூகக் கோளாறுகளுக்கெதிராக பாடல்கள் இசைக்கப்பட்டு வருகின்றன. இந்த இசை நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கு பெருவாரியாக மக்கள் கூட்டம் வருவதை அறிய முடிகின்றது.
நாட்டார் பாடல்களோடு இவ்வாறான இன்றைய நவீன பாடல்களும்கூட பிற் காலத்தில் நாட்டார் இசை பாடல்களாகவும் பெயர் பெறலாம்.இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தை முன்னிட்டு இந்த ஆய்வரங்கை விரிவுரையாளர் சகோதரி நடின் நடாத்தினார். நிகழ்வில் அமரர் பசறையூர் கே.வேலாயுதம்¸ கே விமலநாதன்¸ ஆசிரியர் வி.கதிர்காமன் ஆகியோர் பங்கு பற்றினர். “கசப்பு சாயம்” என்ற நாடகத்தை ஜன கரலிய கலைக் குழுவினர் அரங்கேற்றினர்.

-மு.சிவலிங்கம்






கருத்துகள் இல்லை: