15.02.2012
திரு.வி.தேவராஜ்,
பிரதம ஆசிரியர்,
ஞாயிறு வீரகேசரி
அன்புடையீர் வணக்கம்.
டாக்டர் சுப்பிரமணிய சுவாமியுடனான நேர்காணல்
இந்திய ஜனதா கட்சியின்; தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியுடன் நடாத்திய நேர் காணல் சம்பந்தமாக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.
அதிகளவில் சர்ச்சைக்குரிய அரசியல் அறிக்கைகள் எழுதியே பிரபல்யமடைந்த சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பரவலாக அறிமுகமானவர். அவரது மிகவும் வெளிப்படையானதும், துணிச்சலுமானதுமாகிய பதில்களை உங்களது கேள்வி மூலம் பெற்றிருந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரும், பின்னரும் தேசிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவே இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று வரை கணிக்கப்பட்டு வருவது ஓர் சர்வதேச கவனத்துக்குரிய அரசியல் விவகாரமாகும். இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் தேயிலை, ரப்பர், தென்னை உற்பத்தியில் பிரதான பங்களிப்பைச் செய்து வரும் ஒரு தொழிலாளர் பிரிவினராக மலையகத் தமிழர்கள் இருந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தொழிற்சங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் குறிப்பிட்டு பேசும் அளவுக்கு தூர நோக்கு கொண்ட தலைமைகள் இன்றுவரை உருவாக வில்லை என்பதை வருத்தமுடன் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தேசிய ரீதியில் இந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வு நிலையை அவதானிக்கின்ற போது, மனித உரிமைகள் அத்தனையும்; மறுக்கப்பட்ட மக்களாகவே இம் மக்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமைகள் என்று மதிக்கப்படும் தொழிற்சங்கப் பிரமுகர்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் இன்று வரை இந்த மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வில்லை. தொழில் ரீதியிலான உரிமைகளையோ, தொழிலுக்கேற்ற ஊதியத்தையோ பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வாழ்வதோடு, அரசியல் ரீதியில் காணி, நிலம், வீடு என்னும் தேசிய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடிய உரிமையையும்; பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த நாட்டில் இவர்களைத் தவிர்ந்த ஏனைய சமூகத் தலைமைகள் தங்களது இனத்துக்குரிய அடிப்படை உரிமைகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்திருந்த போதும், இவர்கள் மட்டும் வேடிக்கை மனிதர்களாக இன்று வரை தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தனது உரையாடலின் போது, தமிழக அரசியல்வாதிகள், இந்திய மத்திய அரசியல்வாதிகளின் கைக் கூலிகளாகவே செயற்படுகின்றனர் என்று தோலுரித்துக் காட்டி இருப்பதைப் போலவே, மலையக அரசியல்வாதிகளும் தங்களது சுய நலன்களுக்காக ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருந்து வருவதை நாம் அறிய முடிகின்றது.
எமது தலைமைகள் இந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசுடன் பேசக் கூடியவர்களாகவும், அழுத்தம் கொடுக்கக் கூடியவர்களாகவும் இல்லாமல், தங்களது தகுதிகளை இழந்து கிடப்பதையும் நாம் உணர முடிகின்றது.
தமிழக அரசியல்வாதிகள் மக்கள் நலன்களை கெடுக்கும் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை. இந்த ஒரு அம்சத்தில் மலையக அரசியல்வாதிகள் அவர்களையும் மிஞ்சி இருப்பதை நாம் அறியலாம். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை மத்திய அரசு விதிக்க வேண்டும் என பிரேரணை கொண்டு வந்து அதை மத்திய
அரசுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணை மத்திய அரசையும், இலங்கை அரசையும் பயமுறுத்தியது. இந்த பிரேரணை சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால், மலையக அரசியல்வாதி ஒருவர் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க ஜெயலலிதா யார் என்று முதலறிக்கை விட்டிருந்தார். இவரைப் போன்றே இன்னுமொரு மலையக அரசியல்வாதி ஐ.நா. நிபுணத்துவ கமிட்டிக்கு இலங்கை உள் விவகாரங்களில் தலையிட என்ன உரிமை இருக்கின்றது.. என்று முதலாவது அறிக்கை விட்டிருந்தார். இவர்கள் இவ்வாறு சிங்கள தலைவர்களுக்கு முன்பு முண்டியடித்துக் கொண்டு அறிக்கை விடுவதன் நோக்கம் பிரதியமைச்சர் பதவிகள் பெறுவதற்காகவே என்பது யாவரும் அறிந்ததே..! இப்படி இருக்கும் போது, சுப்பிரமணிய சுவாமியைப் போன்றவர்களின் வெளிப்படையான அரசியல் பேச்சு மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கின்றது.
இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்தியா செய்த துரோகத்தை மிகவும் துணிச்சலாக இடித்;துக் காட்டியுள்ளார். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் போன்றவைகளால் இந்த மக்களை நாடற்றவர்களாக்கியது இந்தியாவின் முட்டாள்தனம் என்றும், இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யாமல் இருந்திருந்தால், 40 பேர் வரையிலான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறுகின்றார். இந்தியாவின் பச்சைத் துரோகம் நாளைய இளைய பரம்பரையினருக்கும் தெரிந்திருத்தல் அவசியம்.
இந்தியா, இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழருக்காகவும் பேச வேண்டும். ஆனால் இந்தியா, நடைமுறையில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழரைத் தவிர்த்து, வட பகுதி தமிழ் மக்களுக்காக மட்டுமே பேசுவதாகத் தெரிகின்றது. என்று டாக்டர் சுட்டிக் காட்டி இருப்பதையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இந்த அரசியல் சூழலில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் விவகாரங்கள் பற்றி ஆராய்வு செய்வதற்கு, சர்வ தேச மகாநாடு ஒன்றை தமிழ் நாட்டில் விரைவில் நடத்த இருப்பது, மலையகத் தமிழர்களைப் பொறுத்த அளவில் “ஒரு புத்தம் புதிய முதல் அரசியல் காலடி” என்று உணர வேண்டியுள்ளது. இப்படியான ஒரு சர்வதேச மாநாடு இந்த மக்களின் 200 ஆண்டு கால மௌனத்தையும், உறக்கத்தையும் கலைப்பதாக இருக்கும் என்றும் உணரலாம்.
இலங்கைத் தமிழரின் உரிமைகளை நோக்கிய அனைத்து அகிம்சைப் போராட்டங்களும் அவமதிக்கப்பட்டப் பின்னர், இளைய சமூகத்தினரின் இயக்கப் போராட்டங்கள் உருவெடுத்தன. ஒரு முப்பதாண்டு கால இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்தது. 200 ஆண்டு காலமாக தங்களுக்கு நடந்து வரும் அரசியல் ரீதியிலான அட்டூழியங்களையும், அவமானங்களையும் பொருட்படுத்தாமல், பாமரத்தனமாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு ஒரு மூன்றாவது மனிதரின் தலைமை வழிகாட்டவிருப்பது , இந்த காலத்தின் அதிஸ்டமாகும்.
இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு, அரசியல் தகவல்கள் சமர்ப்பிப்பதற்கு மலையகத்திலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இருக்கும் அறிவு ஜீவிகளையும், சிவில் சமூகத்தினரையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்துக்கொள்வதற்கு தாங்கள் முன் நின்று செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றேன். இலங்கை வாழ் இந்தியத் தமிழரின் தேசிய நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் பிரித்தானிய அரசுக்கும், இந்திய அரசுக்கும் கடமையும், பொறுப்பும் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக இந்த இரண்டு நாட்டு அரசுகள் புரிந்த தவறுகளே இந்த மக்களின் இன்றைய அரசியல், சமூகத் துயர நிலைமைகளுக்கு காரணங்களாகும். இந்த இரண்டு அரசுகளும் சர்வதேச பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்கப்பட வேண்டியவர்கள்..! இவர்களது பிரசன்னம் இம் மாநாட்டுக்கு முக்கியமானதாகும்.
மலையகத்தில் ஒரு கால் நூற்றாண்டு கால சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஓர் அரசியல் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவனாக இருந்தும், செயலாளனாக செயல்பட்டும் காலப் போக்கில் தலைமை குடை சாய்ந்து, அதுவும் சராசரி தேர்தல் கட்சியாகத் திசை மாறியதால், கட்சி அரசியலில் தோல்வியடைந்தவன் என்றாலும், சமூக அரசியலில் இன்று வரை ஆதங்கத்தோடு செயல்பட்டு வரும் எனக்கும் உங்களின் இந்த புதிய முயற்சி, எமது சமூகத்தின் புதிய அரசியல் மாற்றத்தை பெற்றுத் தரும் என்ற பூரண நம்பிக்கையுடன் இக் கடிதத்தை முடிக்கின்றேன்.
இப்படிக்கு,
மு.சிவலிங்கம்,
(அரசியல், சமூக செயற்பாட்டாளர்)
56, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம்,
கொட்டகலை.
தொ. பே .. 051 2244090 - 077 5757202
மின்னஞ்சல் : moonaseena@yahoo.com