மலையக எழுச்சிக்கு சமூக அரசியலை முன்னெடுத்துச் சென்ற வீ.டி.தர்மலிங்கம்..! - மு.சிவலிங்கம்

"அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களை சராசரி ஒரு கட்சி அரசியல்வாதியாக  குறுகிய  வட்டத்துக்குள் அடைத்து வைத்து விட முடியாது.. கட்சி அரசியலுக்கும், தேர்தல் அரசியலுக்கும் அப்பால், சமூக அரசியலை இளைஞர்கள் மத்தியில் புகுத்தி வந்த ஓர் ஆத்மார்த்த சமூக சிந்தனையாளனே வி.டி. தர்மலிங்;கம் என்பவராகும். அவர் மலையக அரசியலை நன்றாக அறிந்து வைத்திருந்தவர். மலையக அரசியல் ஒரு மந்திரி பதவியோடு மரணமாகிவிடும் என்ற நிதர்சனத்தை மேடை மேடையாக மக்கள் மத்தியில் முழக்கமிட்டவர்...!"

இவ்வாறு தர்மலிங்கம் எழுதிய 'மலையகம் எழுகிறது" என்னும் அரசியல் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை நிகழ்த்திய எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமாகிய மு.சிவலிங்கம் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது, 'மக்களை அரசியல்மயப் படுத்தாது, தேர்தலில் குதிப்பது, பதவிகளை கொண்டு வருமே தவிர, மக்கள் எழுச்சியை உருவாக்காது, தேர்தலில் ஜெயிக்கின்ற மலையக அரசியல்வாதிகளுக்கு மந்திரி பதவிகளை வழங்கி, கைதிகளாக்கி வைத்துக் கொள்ளும், ஆளுங் கட்சிகளின் ராஜ தந்திரங்களை மலையக மக்கள் அறியாமலில்லை. இருந்தும் அவர்களும் அன்றைய பிரிட்டிஷ் காலத்து கங்காணித்துவ அமைப்பு முறையிலேயே இன்று வரை கட்சி தொழிற்சங்க உரிமையாளர்களின் உடைமைகளாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்றுவரை தொழிற்சங்கங்களின் உடைமைகளாகவிருக்கும் அவர்களை சுதந்திரப் புருஷர்களாக விடுதலை செய்வதென்பது முடியாத முயற்சியாகவே இருந்து வருகிறது. அமரர் தர்மலிங்கம் தொழிற்சங்க பாணி அரசியல் செய்வதில் உடன்பாடு கொள்ளாத மனிதர்.. மலையக மக்களை வர்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒன்றுபடுத்தவே விரும்பியவர். அவர் தனது அரசியல் ஈடுபாட்டில் சில வேலைத் திட்டங்களை நிறைவேற்றாது, நிராசைகளோடே மறைந்து போன துரதிஷ்டசாலியாவார்.

தேசிய நிலைப்பாட்டில் மலையகத் தமிழர்கள் குடியிருப்பாளர் சட்டத்தின் கீழே, குடியுரிமை வழங்கப்பட்டிருக்கும் சட்டமாகிய '1949 ம் ஆண்டு 3 ம் இலக்க     இந்திய - பாகிஸ்தானிய குடியிருப்பாளர் சட்டத்தை" நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் விவாதமொன்றை ஏற்படுத்துவதற்கு பலமுறை முயற்சி செய்தும், கட்சிக்குள் தோல்வியடைந்தார்.

சமூகத் தலைமை என்பது அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளுமற்றுமல்ல, கல்வி, கலை, இலக்கியங்களும் சமூகத்தின் தலைமையாகும்.. கலைஞன், இலக்கியவாதி, கல்விமான் ஆகியோரும் சமூகத்தின் தலைவர்களென்று தர்மலிங்கம்; உரத்துக் கூறினார். அவர் மக்கள் மத்தியில் நாடக நடிகனாக,  பாடகனாக, நடனக்காரனாக, கவிஞனாக, இலக்கியவாதியாக,  கல்விமானாக சமூகத்தின் பல தளங்களிலும் தடம் பதித்த மனிதனாவார்.

மலையக சமூகத்தின் அறிவு ஜீவிகளான இரா.சிவலிங்கம், திருச்செந்தூரன் ஆகியோரின் சமூக செயற்பாட்டுக்கு, அடுத்த கட்ட சிந்தனையாளனாக வீ.டி.தர்மலிங்கம் இருந்து வந்துள்ளதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளுதல் வேண்டும்". 

தலவாக்கலை தமிழ் சங்கம் நடத்திய இவ் விழாவில் நூல் வெளியீட்டுக்கு பிரதான அணுசரணையாளராகவிருந்த மல்லியப்பு சந்தி திலகர், எழுநா நிறுவனத்தின் சார்பாகவும், நிகழ்ச்சியுரை நடத்தினார். கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் நூல் மதிப்பீட்டுரையும், ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வி.டி.செல்வராஜ் அவர்கள் சிறப்புரையுமாற்றினார்கள்.
தகவல் -  மு.சிவலிங்கம்